யாராவது அமுதம் வேண்டாம் என்று சொல்வார்களா? மதுமிதா சொல்வாள்!.
ஆம். 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு" என்பதை தீவிரமாக மனதுக்குள் ஜபித்துக் கொண்டிருப்பவள் மதுமிதா. காரணம் அவள் கணவன் திவாகர் அவளிடம் அன்பை வெளிப்படுத்தும் அதீத முறைகள்தான்!.
''சர்ப்ரைஸ் கொடுக்கறேன்னு சில நாள், நான் எழுந்து கோலம் போடப் போறதுக்கு முன்னாடியே வாசல் கூட்டி தெளிச்சு வைக்கிறார். தெருவுல பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?"
''எனக்கு பிங்க் கலர் பிடிக்கும்ன்னு சொன்னேங்கிறதுக்காக ஒரே நேரத்துல பத்து பிங்க் கலர் சுடிதார் எடுத்துட்டு வர்றார்.. வேஸ்ட் தானே?"
''அவங்க அண்ணா, அண்ணிக்கிட்ட .. ''நான் ஏன் பொண்டாட்டிய செல்லமா 'ஏஞ்சல் "-ன்னுதான் கூப்பிடுவேன்'ங்கிறார். மானம் போகுது."
-இப்படியாக நீளுகின்றன மதுமிதாவின் குற்றசாட்டுகள்.
''என் பொண்டாட்டி மேல உயிரையே வச்சிருக்கேன்.. அதை அவகிட்ட நான் பின்ன எப்படிப்பா எக்ஸ்பிரஸ் பண்ணுவேன்?"
-டாஸ்மாக் கடை ஒன்றின் பக்கத்து டேபிளில் இருந்த முகம் தெரியாத நபரிடம் திவாகர் உளறிய வார்த்தைகள் இவை. டாஸ்மாக் போகும் அளவுக்கு அப்படி என்ன குழப்பம் கும்மி அடிக்க ஆரம்பித்து விட்டது?
திருமணம் ஆகி ஐந்து மாதங்கள் கூட முடியவில்லை. மாலை மயங்கிய நேரங்களில் பூவோடு வந்தவனை ''எதுக்கு இவ்வளவு பூ? கொஞ்சமா வாங்கிகிட்டு வாங்கன்னு சொன்னா கேட்க மாட்டிங்களே!"" என்றாள் மது.
அடுத்த நாள் வருத்தம் மறைத்து, 'இன்னிக்கு நான் டின்னர் பண்றேன்" என்று ஆசையாக் கிளம்பியவனை, 'ஆம்பிளையா.. லட்சணமா இருங்க" என்றாள் கண்டிப்புடன்..
மற்றொரு நாள்.. 'உனக்கு பிடிச்ச பாசந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்" என்றவனை, ''ஐயோ... இந்த அஞ்சு மாசமா நீங்க அதையே வாங்கிக் கொடுத்ததுல எனக்கு பாசந்தியே வெறுத்திடுசசுப்பா!'' என்றாள். இப்படியாக ஒவ்வொரு நாளும் வருத்தங்கள் எழுந்தன அவர்களுக்குள். விளைவு... திவாகர் வாங்கி வந்த பூவின் வாசம் சில தினங்களாக தொடர்ந்து மறுக்கப்பட்டது. அவன் டாஸ்மாக் வாசம் பிடிக்கத் துவங்கிவிட்டான்.
எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்குமாம். ஆனால் இங்கே அதற்கு நேரெதிர்.
திவாகர் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக குட்டிக்கரணம் கூட அடிக்கும் ரகம். நண்பர்களுக்கு அவர்களின் குடும்ப போட்டோக்களைத் தேடி பிடித்து பிறந்த நாளுக்கு
பிரேம் செய்து கொடுத்து, அவர்கள் சந்தோஷப் படுவதைப் பார்த்து தானும் சந்தோஷப்படும் பிரியக்காரன். நண்பர்களுக்கு இப்படி சர்ப்ரைஸ்கள் கொடுத்து சந்தோஷப்படுத்துபவன், தன் மனைவிக்காக எத்தனை சர்ப்ரைஸ்களை தேக்கி வைத்திருப்பான்? அதன் வெளிப்பாடுகள் தான் இப்போது மதுமிதாவின் குற்றசாட்டுகளாக வடிவெடுத்து நிற்கின்றன.
மதுமிதாவும் அன்பானவள் தான். ஆனால் அவள் வளர்ந்த சூழலில் நிலவிய அன்பு பரிமாறல்கள் வேறு ரகம். எப்போதாவது அம்மாவைக் கோயிலுக்கு அழைத்து செல்லும் அப்பாவின் அன்பும், கல்யாண நாளில் மனைவிக்கு புடவை வாங்கிக் கொடுத்து 'நல்லாயிருக்கா?'' எனும் அண்ணனின் அன்பும்தான் அவள் அறிந்தது.
ஆனால், திவாகர் காட்டும் அன்பு அனைத்துமே இவளுக்கு அதிர்ச்சி ரகம்தான். இருவரையும் ஊர் கூடி உறவு பந்தத்தில் இணைத்து வைக்க, முதலிரவு அன்று கைகளில் பால் ஏந்தி வந்தவளிடம், ''ஒரு சேஞ்சுக்கு பீர் தரமாட்டிங்களா?"" என்று திவாகர் கேலி செய்ய, 'அய்யய்யோ.. ஒரு அயோக்கியன்கிட்ட மாட்டிக்கிட்டோமே" என்று அன்றே பதறிப் போனாள் மது. தொடர்ந்த நாட்களில் சந்தடி சாக்கில் புதுப் பொண்டாட்டியை முத்தமிட துடித்த திவாகரை ரவுடியாக பார்த்தாள். அவனின் சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாமே அவளுக்கு திகட்ட செய்தன. தள்ளித் தள்ளி சென்றாள். ஆனால் அது எத்தனை நாளைக்கு நீடிக்கும்.. அன்று காத்திருந்தது.. அவர்களின் இடைவேளைக்கான க்ளைமாக்ஸ்!
திவாகர் மேல் எழுந்த அதிருப்தியை மறக்க, டி.வி சீரியல் பார்க்க ஆரம்பித்திருந்தாள் மது. சீரியலில் கை தவறி கதாநாயகி காபி டம்ளரை கீழே கொட்டி விட, 'பளார்' என கன்னத்தில் அறைந்தான் அவள் கணவன். மதுவுக்கு திவாவின் நினைவு வந்தது. அன்று ஆபீஸ்க்கு கிளம்பியவன், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவள் கைதவறி சாம்பாரை கொட்டிவிட, 'அட... சாம்பார்ல கூட மார்டன் ஆர்ட் வரைவியா நீ?" என்றபடி வேறு சட்டையை மாற்றிக் கொண்டான்.
அடுத்து ஒரு சீரியல். உடம்பு முடியாமலிருக்கும் தன் மனைவியை என்னவென்று கூட கேட்காமல் இருந்த அந்த சீரியல் கணவனைப் பார்த்தபோது, இவள் தலைவலிக்கு தைலம் தடவிவிட்ட திவாவின் விரல்களை நெஞ்சம் தேடியது.
இரவு இன்னுமொரு சீரியல். மளிகை வாங்க கொடுத்த நூறு ரூபாய்க்கு தன் மனைவியிடம் கறார் கணக்கு கேட்டுக் கொண்டிருந்தான் அந்த சீரியல் ஹீரோ. திருமணம் முடிந்த மாதமே மது பெயரில் பேங்க் அக்கவுன்ட் ஆரம்பித்து தந்த திவாகரின் நியாபகம் மட்டுமல்ல... அவன் சீக்கிரமாக வரும் மாலை நேரங்களில் தன்னை சுற்றி சுற்றி வருவது, காதுக்குள் 'ஏஞ்சல" என்று கிசுகிசுப்பது, உள்ளங்கையில் முதல் முத்தம் வைப்பது என.. ஒவ்வொன்றாக அவள் மனதுக்குள் மின்னின.
'எத்தனையோ பெண்கள் கணவனோட அன்புக்காக ஏங்கிக் கிட்டிருக்கும்போது, அன்பே கணவனா கிடைச்ச திவாவை புரிஞ்சுக்காம விட்டுட்டோமே" என்று முழு மனதாக வருந்தினாள் மது. வாசலில் திவாவின் அழைப்பு மணி கேட்டது. கதவை திறந்தவள், இந்த கணத்துக்காகத் தான் காலமெல்லாம் காத்திருந்தது போல அவனைக் கட்டிக் கொண்டாள்.
''என்ன .... மோகினிப் பேய் இன்னுமா சாப்பிடாம இருக்கு?" என்று வழக்கம் போல திவா கிண்டலடிக்க, 'ம்ம் .. ஜோடிப் பேய்க்காக காத்திட்டு இருக்கு" என்று தானும் அவன் மொழி பேசினாள்!.
ஆம்! இங்கே எதிர் எதிர் துருவங்கள் சம புள்ளியில் மையம் கொண்டுவிட்டன.
6 comments:
ம்ம்ம்ம்....
நல்லாருக்கு....
அப்டின்னா சீரியல் பாக்குறது நல்லதுன்னு சொல்றீங்க....
நல்லாத்தான் இருக்கு.. ஆனா..
கதை சொன்ன நடை ரசிக்கும்படி இருந்தது. உங்களின் கிராம அனுபவ பதிவைத்தான் முதலில்
படித்தேன், மிக அழகு.
நல்லாயிருக்கு!
sabaash aunty nenja nakiteengoooo
Post a Comment