Tuesday, May 25, 2010

என் கணவனின் காதலிக்காக..

ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணும் போதே, கரண் சொல்லிவிட்டார்... ‘அங்க என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லை, அப்புறம் மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டு திரியக் கூடாது.”

எல்லாத்துக்கும் தலையை தலையை ஆட்டிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் வரை எதுவும் தெரியவில்லை.. தார் ரோட்டில் கால் வைத்தபோது சுள்ளென உரைத்த வெயில் நேரத்தில் தான் சில உண்மைகளும் புரிய ஆரம்பித்தது..

அத்தனை தடவை நானும் கரணும் போன் பண்ணி தகவல் தெரிவித்தும், கிளம்பும் முன் கூப்பிட்டுச் சொல்லியும் ஒருத்தர் கூட ரிசிவ் பண்ண ஏர்போட் வரவில்லை.. சரி தைரியமாய் வீட்டுக்கு கிளம்பலாம் என்றால் மதுரை பழக்கமில்லாத நகரம்.. பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, கரணுக்கு கால் பண்ணினால் வழக்கம் போல கால் வெயிட்டிங்.. கோபத்தில் டிராவல் பேக்கை உதைத்துவிட்டு, வேறுவழியின்றி வீட்டுக்கு கால் பண்ணினேன்.. பேசியது கரணின் அக்கா கணவர்..

‘அட, அதுக்குள்ள வந்திட்டியாம்மா, நாங்க ஃபிளைட் லேட் ஆகும்ன்னு நினைச்சு இப்பத்தான் கிளம்பறோம்.. எப்படியும் நாங்க ஏர்போர்ட் வர ஒரு மணி நேரம் ஆகும், வெயிட் பண்றியா இல்லை-”ன்னு அவர் இழுக்கும் போதே, ’பரவாயில்லை அண்ணா, நான் டாக்ஸி புடிச்சி வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு மனதுக்குள் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு டாக்ஸி தேடினேன்..

ஏர்போட்டில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் முன் என்னைப் பற்றி ஓர் அறிமுகம்..

நான் கெளசல்யா.. டில்லியில் அப்பர் மிடில் கிளாசில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்.. என்னுடன் வேலை பார்த்த கரணுடன் காதலாகிப் போக, வீட்டில் பச்சைக்  கொடி காட்டப்பட்டது.. கரண் வீட்டில் தான் ஏகத்துக்கும் பிரச்சனை.. எங்கள் வீடு தேடி வந்து திட்டிவிட்டுப் போனார்கள்.. ஆனால் என்னைவிட கரண் பிடிவாதமாய் நிற்க, வேறுவழியின்றி டெல்லியில் என் வீட்டு உறவினர்களுடன் எளிமையாய் திருமணம் நடக்க, அட்சதை மட்டும் போட்டுவிட்டு சொல்லிக்காமலேயே விடை பெற்றது அவரின் குடும்பம்.. பின் நானாக போன் பண்ணும் போது, ’நல்லாயிருக்கியாமா’ என்ற ஒற்றை வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்வார்கள் மாமியாரும் மாமனாரும்...

இதோ... ஊரில் திருவிழா.. போயே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நின்று இருவருக்கும் டிக்கெட் புக் பண்ணியது நாந்தான்... கடைசியில் கரண் செக்‌ஷனில் ஆடிட்டிங் நடக்க, லீவ் கிடைக்காத மனிதருக்கு டாட்டா சொல்லிவிட்டு வந்தது தப்போ? என இப்போது உறைக்க ஆரம்பிக்கும் முன் என் மாமியார் வீடு வந்து சேர்ந்தது....

இனி மெயின் சீன்க்குப் போகலாம்..

ஆரத்தி தட்டெல்லாம் சுத்தி மரியாதையாகத்தான் வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள் என் மாமியார் வீட்டில். புதிய இடத்தின் சூழ்நிலையை படிக்கும் முன்னே அன்றைய பொழுது கழிந்தது..

அடுத்த நாள், நான் எழுந்ததே விமலாவின் அதட்டல் பேச்சில்தான்.. ‘என்னதான் சிட்டியில் இருந்தாலும் வாசலில் கோலம் போடற பழக்கம் கூடவா இல்லை’ என்று அவள் சொன்னது என்னைத்தான் என்று புரியாமல், காபியும் ஹிந்து பேப்பருமாய் ஹாலில் உட்கார்திருந்தவள் நான்..

‘நம்ம குடும்பத்துக்குன்னு சில பழக்க வழக்கம் இருக்கு.. வீட்டு ஆம்பிளைங்களா இருந்தாலும் நைட்டி போட்டுக்கிட்டு முன்னாடி வர்றது இல்லை” என்று அவள் குறிப்பு குடுக்கும் சமயம் நான்  துப்பட்டாக் கூட போடாமல் வெளிக் கதவிற்கு அருகில் நின்று தலைதுவட்டிக் கொண்டிருந்தேன்..

இங்கே விமலா என்பது என் கணவரின் மாமா மகள்.. அவளைத்தான் அவர் கல்யாணம் பண்ணுவதாக பேச்சு என்பதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். ஆக இதையெல்லாம் முன்னரே எதிர்பார்த்துதான்..

ஆனால் ஒட்டு மொத்த குடும்பமும் ஏதோ ஒட்டுதல் இல்லாமல் என்னிடம் பேசுவது மட்டும் ஏன் என புரியவில்லை. (இத்தனைக்கும் அந்த மாத சம்பளத்தை அப்படியே மால் ஒன்றில் பில்லாக்கி பட்டுப் புடவைகளுமாய் காஸ்டிலி கிப்டுகளுமாய் அந்த குடும்பத்திற்கு கரைத்திருந்தேன்). கூடவே என்னை எப்போதும் ஒரு ஜோடிக் கண்கள் பின் தொடர்வதாக பிரம்மை வேறு.. தவிர நான் நின்றால், நடந்தால், பேசினால் எல்லாவற்றிற்கும் வார்த்தைகளிலும் பார்வையிலும் வெறுப்பைக் காட்டினாள் விமலா. (அவளுக்கும் சேர்த்துதான் பனாரஸ் பட்டு வாங்கிவந்தேன்).

நானாக பேச முயற்சித்தாலும் வெட்டிச் சென்றாள். அதையும் தாண்டினால் மெளனமான கேள்விகளுடன் என் கண்களை நேருக்கு நேர் பார்க்கிறாள்.. என்னால் எதுவும் கேட்க முடிவதில்லை. திருவிழா முடிந்தும், கரண் போர் அடிக்கிறது சீக்கிரம் வா என் குறுஞ்செய்தி அனுப்பியும் நான் மாமியார் வீட்டில் இருந்து கடையை கட்டாமலிருக்கும் காரணம் விமலா பற்றிய புரிதல்கள் தான்..

ஒருவேளை கரணை தீவிரமாக காதலித்துவிட்டு மறக்க முடியாமல் தவிக்கிறாளோ, நான் பறித்துக் கொண்டேன் என்று கோப்படுகிறாளோ? என்று எல்லா வகையில்லேயும் யோசித்தாயிற்று... ஏனெனில் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவளாக இருந்தாள் விமலா.

உண்மையை உடைக்க வேண்டுமே அதற்காகத்தான் என் மாமியாரிடம், தூண்டில் வீசினேன்..
‘ஏன் அத்தை, உங்க அண்ணா பொண்ணு டிகிரி முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு, மேற்கொண்டு படிக்கப் போறாங்களா...... இல்லை தஞ்சாவூர்ல எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பம் இருக்கு... நம்ம ஜாதிதான்” என்று நான் சொல்லும் போது கூர்மையாய் ஒரு பார்வையை என் மாமியார் செலுத்த, சட்டென உதடு கடித்து ‘இல்ல உங்க ஜாதிதான்.. எம்.பி. ஏ படிச்சிருக்கார்..  மாசம் 25000 சம்பளம். பேசிப் பார்க்கலாமா?” என்று நான் முடிப்பதற்கும் அவர் சோபாவில் அமர்ந்தபடி என்னுடன் பேச தயாராவதற்கும் சரியாக இருந்தது..

‘உன்கிட்ட சில விசயங்களை உடைச்சுப் பேசணும் கவுசி.. இதை விமலா மேல இருக்கற பாசமோ, இல்லை நீ நாங்க தேடாத மருமகள்ங்கிறதாலோ சொல்லலை... கரணோட அம்மாவா இதை சொல்லறேன்..

சின்ன வயசில இருந்து கரண் கூடத்தான் சுத்துவா விமலா.. வளர்ந்தபிறகு ஒருத்தருக்கொருத்தரை பிடிச்சுப் போச்சு.. என் முன்னாடியே அந்த புள்ளைக்கு முத்தம் குடுத்திருக்கான்.. வீட்டில யாரும் இல்லாதப்ப அவகிட்ட தப்பா நடக்க பாத்திருக்கான்.. கேட்டா நான் கட்டிக்கப் போற பொண்ணுதானேன்னு நியாயம் பேசுவான்.. அவகிட்ட கோவிச்சுக்கிட்டுத்தான் டெல்லிக்கே வந்தான்.. இங்க இவளும், ‘இன்னிக்கு கோபம் தெளியும், நாளைக்கு போன் பண்ணி பேசுவான்’ன்னு காத்திருந்தாள்.. நாங்களும் ஏதோ வயசுக் கோளாறுன்னு நினைச்சிருந்தோம்..

’திடிர்ன்னு ஒருநாள் உன்னை லவ் பண்ணறதா சொன்னான்.. எங்களுக்கு ஒன்னும் புரியல.. விமலாவைக் கேட்டா, விடுங்க அத்தை, என்னிக்கு இன்னோரு பொண்ணு அவ மனசில வந்திட்டாளோ, அப்பவே எல்லாம் முறிஞ்சிப் போச்சுன்னு கண்ணீர்ல கரையறா.. எங்களுக்கு உன் மேலயோ, காதல் கல்யாணத்திலேயோ வெறுப்பு இல்லை.. விமலாவை நினைச்சுத்தான் வருத்தம்.  கரணைக் கேட்டா, ‘என் ஸ்டைலுக்கும் டேலண்டுக்கும் அவ ஒத்துவரலை.. கவுசிதான் பெட்டர்-ங்கிறான்..

வீட்டுக் கடனை கட்டி குடும்பம் தலைநிமிர வெச்சவனை எதிர்த்துப் பேச உங்க மாமாவால முடியல.. பெத்த பாசம் எனக்கு.. உன் மேல பாசம் காட்டினா, விமலா துடிப்பா.. என்ன செய்யச் சொல்லற என்னை.. ஆண்கள் தப்புப் பண்ணினா கடந்துப் போய்க்கிட்டே இருக்காங்க.. அவங்களைச் சுத்தி இருக்கற பெண்கள்தான் அதனால பாதிக்கப் படறாங்க” என்று அவர் கண்ணீருடன் பேசி முடிக்கும் போது, அந்த மடியில் தலை சாய்த்திருந்தேன் நான்..

அடுத்த நாளே டெல்லிக்கு கிளம்ப ரெடி.. ஏர்போர்ட்டுக்குப் போக கார் வாசலில் நின்றது.. இந்த முறை நான் பார்க்கும் போது விமலா கண்களில் துயரம் இருப்பதாக உணர, அருகில் சென்று அவள் கை இரண்டையும் பிடித்துக் கொண்டு ‘என்னை மன்னிச்சிடுங்க” என்றேன்..

எதற்கு என்று அவளும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை.....

26 comments:

க ரா said...

அருமை.

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Very nice story.

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Very nice story.

S Maharajan said...

இந்த (உங்க) கதைய படிசிட்டு
நான் ஒரே crying
ஆனாலும் நல்லா தான் எழுதி இருக்கீங்க

அமர பாரதி said...

கதை சுமாராக உள்ளது. கடைசியில் ஏதோ பெரிதாக இருக்கும் என்று பார்த்தால் சப்பென்ற முடிவு ஏமாற்றமளிக்கிறது. மேலும் டெல்லி அப்பர் மிடில் கிளாஸ் பெண் பெயர் கௌசல்யா. மதுரை பையனின் பெயர் கரன். ஒட்டவில்லை.

vasu balaji said...

சூப்பர்ப்:)

Chitra said...

சில்லுனு ஒரு மூவி பாத்த மாதிரி, அருமையாக இருக்குதுங்க....

settaikkaran said...

எதார்த்தமாக இருக்கிறது. காட்சிகளின் வர்ணனைகளுக்காக அதிக மெனக்கெடாமல் கதையை நேரடியாக, விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Romeoboy said...

சூப்பரா இருக்கு கதை ..

விமல் said...

அட நம்ம ஊர் கதை. அதான பாத்தேன் நாமெல்லாம் பாசக்கார பயபுள்ளைக... நன்று.

Unknown said...

தன்னுடைய கணவன் அவனுடைய பழைய காதலிக்கு முத்தம் கொடுத்தது, தவறாக நடந்துகொள்ள முயன்றதெல்லாம் தெரிந்தும் கணவன் மேல் ஒரு ரியாக்‌ஷனும் காட்டாத அளவுக்கு நல்லவங்களா உங்க கவுசி?

Santhappanசாந்தப்பன் said...

அட தமிழ் சினிமால யாரும் இதை யோசிக்கலயே.

கதைய ரிஜிஸ்டர் பண்ணி வைச்சுக்கோங்க! கேஸ் போட வசதியா இருக்கும்...

தனி காட்டு ராஜா said...

//ஆண்கள் தப்புப் பண்ணினா கடந்துப் போய்க்கிட்டே இருக்காங்க.. //

எங்க ஊர்ல ஆண்கள் யாரும் தப்பு பண்ண மாட்டாக ....அப்படியே தப்பு பண்ணுனா கூட கடந்து போகம கொஞ்ச நேரம் சாவகசமா நின்னு பார்த்துட்டு அதுக்கப்பறமா தான் போவாங்க ....

க.பாலாசி said...

ஆமா.. விமலா எப்புடி...நல்ல ஃபிகரா???!!! (முறையல்லாம் அப்பறமா பாத்துக்கலாம்...)

அடிப்பாவி ஒரு பொண்ண புருஷனும் பொண்டாட்டியுமா சேந்து ஏமாத்திட்டீங்களே...(நான் கதையில சொன்னேன்...)

Anonymous said...

கதைக்கு ரெண்டாம் பாகம் ஒண்ணு போடுங்க

வால்பையன் said...

குத்துங்க எஜமான் குத்துங்க

இந்த ஆம்பளைங்களே இப்படி தான்!




















எம்புட்டு அடிச்சாலும் தாங்குவானுங்க!

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்குங்க.

r.v.saravanan said...

நல்லா எழுதி இருக்கீங்க

ஈரோடு கதிர் said...

சுபி... கதை ரொம்ப அருமையா வந்திருக்கு

prince said...

நல்ல கற்பனை திறன்...

வெங்கட் said...

கடைசி ஒரு பாரா ஏன்
தெளிவா படிக்க முடியலை.,
கொஞ்சம் கலங்கலா இருக்கே..!!
ஓ..
என் கண்ணுல தண்ணி..

Mugilan said...

ஏனோ இரு கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தது! அருமை!

Mythees said...

:)))

ரோகிணிசிவா said...

superb story , nalla viruvirupu

Radhakrishnan said...

கதை மிகவும் அருமை.

ரொம்ப பேரு... இப்படித்தான், காதலி ஒருத்தர், மனைவி ஒருத்தர்னு இருக்காங்க. அதே மாதிரிதான் பெண்களும் ;)

Mahi_Granny said...

அருமையான கதை