Thursday, January 28, 2010

எஸ் மை லார்ட்

ஒவ்வொரு பொங்கலின் போதும் எங்கள் ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். பன்னு திங்கறது, பலூன் உடைக்கிறது, கைக் கட்டிக்கிட்டு பின்னாடி நடக்கிறது, தண்ணி குடம் தலையில் வெச்சுக்கிட்டு நடக்கறது, பானை உடைக்கிறது, வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பற்றது,  கயிறு இழுக்கறது, குடத்து தண்ணீருக்குள் பந்து போடுவது -ன்னு விதவிதமா யோசிச்சு போட்டி வெச்சாலும், ஏழு மணிக்கு மேல வழக்கம் போல , பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, மாறுவேடப் போட்டி-ன்னு அரைச்ச மசாலாவையே அரைப்போம்.
 நன்கொடை வசூலிக்க வரும் போது, அம்மா நூறு ரூபாய் தந்தாங்க. ''அக்கா ஊரில் இருந்து எப்பு வந்தீங்க, போட்டி நடக்குது, கண்டுக்கவே இல்லை" என்று எங்கள் ஊர் இளந்தாரிகள் சொல்ல, பிரேமா முன்னிலையில் நூறு ரூபாயும், தெரியாமல் நூறு ரூபாயும்  தந்தேன். பத்திரிகைகளில் 'பலோ அப்" என்று ஒரு விஷயம் நடக்கும். அதுதான் எனக்கும் இந்த பொங்கல்-யிலும் போன பொங்கல்-யிலும் நடந்தது.

போன வருடம், போட்டி நடத்தியவர்கள் பாட்டு, கோலம், நடனம், மாறுவேடம் ஆகிய நான்கு  போட்டிகளுக்கும் நடுவராக என்னை நியமித்தார்கள். (அப்பாடா, இப்போதுதான் நான் படித்த படிப்புக்கு சரியான மதிப்பு கிடைத்திருக்கிறது.). ஒரு வகையில் எனக்கும் பெருமைதான், பின்னே இந்த ஊரில் ஜட்ஜாக இருக்க என்னை விட யாருக்கு தகுதி இருக்கிறது என்ற நினைப்பு. (சும்மா இல்ல, மெரிட்டில் சீட் வாங்கி ஐந்து வருடம் சட்ட கல்லூரியில் படித்திருக்கிறேன்). நானும் கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்து கை தட்டிவிட்டு, மார்க்கும் போட்டுக் குடுத்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது பரிசு தந்து முடியும் வரை. மைக் பிடித்த தம்பி ஒருவன், 'இது வரை நடந்த போட்டிககுக்கு  நடுவராய் இருந்த .............(என் பெயரை சொல்லி) நன்றி என்று சொன்னான், அப்போது ஆரம்பித்த அதகளம் இந்த பொங்கல் வரை தொடர்ந்தது.

அடுத்த நாள் காலையில் நான் எழுந்ததே திவ்யாவின் பாட்டி  போட்ட கூச்சலில் தான். ''எங்க புள்ள நல்லத்தான் பாடிச்சாம், நீதான் வேணும்ன்னே மார்க் கம்மியா போட்டியாம், எங்க புள்ள சொல்லுது" என்று கத்தினார். இல்ல, என்று நான் ஆரம்பிக்கும் முன்னே, சண்டை வாபஸ் ஆனது.
வழக்கம் போல, பதினோரு மணி வாக்கில், அரட்டை அடிக்க என் பிரென்ட் துளசி வீட்டுக்கு போனேன். எப்போதும் சிரித்து பேசும் அவளின் அம்மா அன்று என்னிடம் பேசவில்லை, அவளோ, என்னைக் கண்டதும் உள்ளே போய் விட்டாள்.
(வேறொன்றும் இல்லை, அவள் கோலப் போட்டியில் கலந்திருக்கிறாள். ஆறுதல் பரிசு கூட கிடைக்க வில்லை.  அன்றும் அதற்கு அடுத்த நாள் நான் ஊருக்கு கிளம்பும் வரை, அங்கிருந்தவர்கள் என்னிடம் வித்தியாசமாகவே நடந்து கொண்டார்கள் என்று நினைத்தேன். அது உண்மை என்பது மூன்று மாதம் கழித்து பிரேமா போன் செய்யும் போது தெரிந்தது.
கை மாத்தாக பிரேமாவிடம் 2000 ரூபாய் கடன் கேட்டிருக்கிறார்  பக்கத்து வீட்டு பெரியம்மா.  அவர் இல்லை என்று சொல்ல, 'எல்லாம் இவ புள்ள ஜட்ஜா இருந்த திமிரு(பாவிகளா, நான் என சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாவா இருந்தேன்). என்று கேலி செய்திருக்கிறாங்க.
இந்த வருடமும் அதே பயத்துடன்தான் ஊருக்கு சென்றேன். வழக்கமாய் அப்போதுதான் அரிதாக சந்திக்கும் தோழிகளை பார்க்க முடியும். ஊரில் யார் யாரை காதலிக்கிறார்கள், எந்த காதல் இடம் மாறப் போகிறது, யார் ஓடிப் போகும் நிலையில் இருக்கிறார்கள்?,  எந்த காதல் ஊத்திக்கிச்சு போன்ற அத்தியாவசிய தகவல்கள் கிடைக்கும். மொத்தமாக சேர்ந்த திமிரில், எங்க ஊர் இளங் காளைகளை கிண்டல் செய்வோம். ஆனால் இந்த முறை அந்த கூட்டத்தில் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை. வெட்டிய கரும்பும், கை முறுக்கும் எனக்கு மட்டும் தீர்ந்து போயிருந்தது. அது கூட பரவாயில்லை. ஏன் அண்ணனை சைட் அடிக்கும் சம்பூர்ணா கூட என்னிடம் சரியாக பேசாதது போலவே தோன்றியது.

'இந்த வருஷமும் நீதான் ஜட்ஜாம், கமிட்டில சொன்னாங்க" என்னும் போதே, அடப் பாவிகளா என்று மனசுக்குள் தவித்தேன்.

கடைசி போட்டி-யாக நடனம். 'என்  பேரு மீனாக்குமாரி" என்று இடுப்பை வளைத்து பவித்ரா ஆட்டும் போது எனக்கு என்ன மார்க் போடுவது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவள் யு.கே.ஜி -பி கிளாசில் படிக்கிறாள். (மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொறி. கட்டில் பந்தியில...  -என்று அவள் உதட்டை சுழிக்கும்  போது அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு தெரியவில்லை).

அடுத்து பரிசு பெற்றவர்கள் பெயர் அறிவிப்பு. முதல் பரிசு- தேவன், இரண்டாம் பரிசு- சந்தோஷ், மூன்றாவது  பரிசு-கீர்த்தனா. அறிவுப்பு முடிந்ததுமே அழத் துவங்கி விட்டான் வினோத். ''நான் நல்லத்தனே ஆடுனேன், ஏன் பிரைஸ் தரல?" என்று கேட்கும் போது, என்னால் ஏதும் பேச முடியவில்லை. தேம்பி தேம்பி அழுதான். அங்கு குழுமி இருந்த ஊரே என்னை கரிச்சு கொட்டுகிறது, பிரேமா வேறு என்னிடம் கத்துகிறார். 'உனக்கு எப்பவுமே அவன்கிட்ட போட்டித்தான், நான் அவன் மேல பாசமா இருக்கேன்னு உனக்கு பொறாமை" என்றார். ஆம் பிரேமாவின் சொந்த தம்பி மகன் வினோத். நான் உரிமை கொண்டாடும் முறைப் பையன். என்னை திருமணம் செய்ய ஆசைப் பட்டவன்( வாசகர் கவனத்திற்கு, வினோத் இபபோது மூன்றாவது படிக்கிறான். எனக்கு வயது 25 ) இருந்தும் அவன் சரியாக ஆடாததால் நான் மார்க் போடவில்லை. ஆனால் அதுவே எனக்கு பிரச்சனை ஆகிவிட்டது. ஒருவழியாக அழுது, மீதம் இருந்த ஒரு பிளாஸ்டிக் டப்பாவை அவன் பரிசாக வாங்கி கொண்டான்.
இதையும் தாண்டி கொடுமை அடுத்த நாள் நடந்தது.  ஆறுதல் பரிசு வாங்கிய பூமிகா -விடம் ஏன்  முதல் பரிசு கிடைக்கவில்லை என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவளோ, 'இந்த ....... (ஜாதியின் பெயர்). இப்படித்தான், அவங்களே போட்டி நடத்தி அவங்களுக்கே பரிசு தருவாங்க" என்று சொல்லியிருக்கிறாள். ஜாதி குறித்து பேச அவள் வயது ஒன்றும் அதிகமில்லை. ஜஸ்ட் 7 ..

காத்து வழி செய்தி வந்தது. (அடப் பாவிங்க, இதில் எங்கடா ஜாதி வந்தது). அடுத்த நாள் வினோத்-கிட்ட, எதுக்கு அழுதே-ன்னு திட்டினேன்.''டி.வியில் தோற்றுப் போய்ட்டா, அழுவராங்கள்ள, அதான் நானும் அழுதேன்" என்னும் போது தலையில் அடித்துகே கொள்ள தோன்றியது.

இப்போதெல்லாம் நான், டி.வியில் கூட நடனப் போட்டிகளைப் பார்ப்பதில்லை. ( பாராங்கல்லில் முட்டிக் கொண்டு, முட்டைக்கென்ன வேதாந்தம்)..
 

9 comments:

buvan said...

//ஊரில் யார் யாரை காதலிக்கிறார்கள், எந்த காதல் இடம் மாறப் போகிறது, யார் ஓடிப் போகும் நிலையில் இருக்கிறார்கள்?, எந்த காதல் ஊத்திக்கிச்சு போன்ற அத்தியாவசிய தகவல்கள் கிடைக்கும்//

அட பாவிங்களா....நல்லா எடுக்கறாங்கப்பா சென்சஸ்....மேடம் தப்பா எடுத்துகாதிங்க இத்தனை வகை காதல்ல உங்க காதல் என்ன வகை?(நாங்களும் எடுப்போமில்ல சென்சஸ்)....


//'இந்த வருஷமும் நீதான் ஜட்ஜாம், கமிட்டில சொன்னாங்க" என்னும் போதே, அடப் பாவிகளா என்று மனசுக்குள் தவித்தேன்.//

மேடம் நமக்கு எதுக்கு இந்த வேல...ஊருக்கு போனோமா பொங்கல சாப்டோமா....உலக தொலைகாட்சியில் முதன் முறையாக-னு சொல்லிட்டு போட்ற டமார் டுமீர் படத்த பாத்தோமனு இருக்க வேண்டியது தானே மேடம்....அப்படியும் டைம் போகலைனா "எப்படியும் நீங்க ஊருக்கு வந்தத தெரிஞ்சி உங்கள சைட் அடிக்க இளம் காளைகள் உங்க வீட்டுக்கு எதிர்க்க காத்துட்டு இருக்கும்" அவங்களுக்காவது தரிசனம் தரலாமே?...இப்படி எவ்வளவோ வேல இருக்கே அப்புறம் எதுக்கு மேடம் உங்களுக்கு இந்த வேல...?

வால்பையன் said...

//ஒவ்வொரு பொங்கலின் போதும் எங்கள் ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

பன்னு திங்கறது,//


இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

வால்பையன் said...

//ஐந்து வருடம் சட்ட கல்லூரியில் படித்திருக்கிறேன்//

அப்போ சட்டத்தில் எங்கெங்கே ஓட்டை இருக்குன்னு உங்களுக்கு தெரியும்னு சொல்லுங்க!
முடிந்தால் ஃபெவிக்கால் போட்டு அடைச்சிருங்க!

வால்பையன் said...

”எனக்கு நடிக்க தெரியாதுங்க”ன்னு ஒரு ஃபேமஸ் டயலாக் இருக்கே! அதை சொல்லி தப்பிச்சிருக்கலாம்ல!

buvan said...

//அங்கு குழுமி இருந்த ஊரே என்னை கரிச்சு கொட்டுகிறது//

இந்த புள்ளைக்கு இவளோ அறிவா-னு அவங்களுக்கு பொறாமை பாஸ்....சரி விடுங்க பாஸ் நம்ம வாங்காத திட்டா....

buvan said...

//முடிந்தால் ஃபெவிக்கால் போட்டு அடைச்சிருங்க!//
சட்டத்துல ஓட்டைங்க அதிகம் பாஸ்....இவங்க ஒருத்தரால மட்டும் அடைச்சுட முடியுமா பாஸ்......?

கண்ணகி said...

அய்யோ பாவம்......ஹ....ஹா...ஹ...

DHANS said...

aga motham konja naal kalichu judge aa iruka ipave practice panreenga

intha vakeel, amerika mapilaai elaam kidaiyaathu straighta judge thaan pola :)

nidurali said...

அமைதி ...இது நல்லா இருக்கு படிக்கனும்