Friday, February 12, 2010

கதவை திற. காற்று வரட்டும்

ஏ.சி . இந்த வார்த்தை-யை சொல்லும் போதே குளிரும். ஆனால் எனக்கோ பற்றிக் கொண்டு எரியும். எல்லாம் இந்த வெட்டி பந்தாவில் வந்த விளைவுதான்.  என் வீட்டில் (முதலில் என் வீடு எது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  சிறு வயது முதலே மாமா வீட்டில் வளர்ந்தவள். என் பூர்வீக வீட்டையே, என் வீடு என்று சொல்லாமல் அப்பா வீடு என்றுதான் சொல்வேன். தற்போதும் சென்னையில் அக்கா வீட்டில் தான் இருக்கிறேன்). ஏ.சி இல்லை. நான் படித்த அரசு பள்ளியில் ஃபேன் இருந்தது இல்லை. கல்லூரியில்  ஃபேன் இருக்கும். ஆனால் போட மாட்டார்கள்.

சினிமா தியேட்டர்களிலும், உயர்தர ஹோட்டல்களிலும் தான் முதன் முதலாக ஏ.சி காற்றை நான் அனுபவித்தது. இங்கே சென்னையில் வேலைக்கு சேர்ந்தது முற்றிலும் ஏ.சி செய்யப்பட அலுவலகத்தில் தான். உள்ளே நுழையும் போது, ஜில்லென்ற காற்று வீசும். பத்தரைக்கு எல்லாம் குளிர் ஆளைக் கொள்ளும். ஏ.சியை கொஞ்சம் குறைத்து  வையுங்கள் என்றால், ஆளாளுக்கு சத்தம் போடுவார்கள்.
''ஏங்க என்னமா சூடா இருக்கு. சென்னை வெயிலில் ஏ.சி இல்லாம இருக்க முடியாதுங்க'" என்று அலப்பறையை கூட்டுவார்கள்.  இத்தனைக்கும் அரக்கோணத்திலும், சிவகாசியிலும் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.. வெயில் வாட்டி  எடுக்கும் வரண்ட பூமியில் பிறந்துவிட்டு, ஏதோ குலுமனாலியில்  சம்மந்தம் பேசிய எபைக்ட்டே இவங்களிடம் இருக்கும். இது கூட பரவாயில்லை, குளிர் கொல்லும் மார்கழி மாசத்திலும் இதே நிலைதான் பாஸ்..

ரெண்டாவது மாடியில் என் அலுவலகம். ஜன்னல் திறந்தால், பச்சை நிறத்தில் கூவம் அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு மழை நாளில் கூட அதை ரசிக்க விட்டதில்லை. காரணம் ஜன்னல் திறந்தால் ஏ.சி காற்று வெளியே போய்விடும். அதவை விட உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் காற்று வெளியே இருப்பதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பேன்?

யாரைக் கேட்டாலும் குளிருதுன்னு சொல்லுவாங்க. ஆனா ஏ.சியை நிறுத்த சொன்னா, எதோ பட்டிக்காட்டான்-ன்னு நினைப்பு. எங்கள் அலுவலகத்தில் ரெண்டு பாகமாக பிரிக்கப்பட்டு, கண்ணாடி தடுப்புகள் வைத்து, ஒவ்வொருவருக்கும் இருக்கைகள் இருக்கும். ஏ.சி பொதுவான நடைப்பாதையில் இருக்கும். எந்திருத்து வெளியே செல்லலாம் என்றாலே, காற்று முகத்தில் அடிக்கும். இதற்கு பயந்தே நான் அடிக்கடி சீட்-யை விட்டு எழுவதில்லை.

நைட் ஏழு மணிக்கும் அதே வேகத்தில் தான் ஏ.சி இருக்கும். இவங்களுக்கு மாலை பொழுதின் மயக்கத்தின் அருமை தெரியுமா? என்று புரியவில்லை.

இதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அலுவலக ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ, யாரைப் பார்க்க சென்றாலும், அவர்கள் அறையில் ஏ.சி இருந்தால் முதல் காரியமாக செய்வது, நம்மை அமர வைத்து விட்டு ஏ.சி போடுவதுதான். அதுவும் வெளியே  இருக்கும் பியுனை கூப்பிட்டு ஏ.சி போட சொல்வார்கள். (அது வரைக்கும் அவர்கள் எப்படி ஏ.சி இல்லாமல் இருந்தார்கள்) இதில் ஏ.சியில் போட்டு ஃபேன்-னும் போட்டு கொடுமைப் படுத்துபவர்கள் இருக்கிறார்கள். சார், கொஞ்சம் ஏ.சி நிறுத்த முடியுமா? என்று கேட்டால், கிண்டலா சிரித்து விட்டு, 'என்னால ஏ.சி இல்லாம இருக்க முடியாது எப்படித்தான் நீங்க இருக்கிங்களோ" என்பார்கள்.

 தெரியாமல் கேட்கிறேன் இவர்கள், டாய்லெட் போகும் போதும், மார்கெட்டுக்கு காய் வாங்க போகும் போதும் முதுகில் ஏ.சியை சுமந்து கொண்டா செல்வார்கள் இல்லையே?. காரில் அலுவலகம் செல்லும் நபராக இருந்தால் பரவாயில்லை. டு விலரிலும், மாநகராட்சி பஸ்-யிலும் செல்பவர்கள் இதே கதை சொன்னால் எப்படி? எனக்கு தெரிந்து எங்கள் அலுவலகத்தில் முக்கால் வாசி பேரின் வீட்டில் ஏ.சி இல்லை. ஆனால் அவர்கள் தான் இங்கு ஏ.சிக்கு போர் கோடி தூக்குவது.

ஏ.சி இல்லாமல் இருப்பது ஏனோ, தரக் குறைவாக அல்லவா சித்தரிக்கப்படுகிறது?

 1 .ஏ.சி அறையில் இருக்கும் போது, ஒருவருக்கு சளிப் பிடித்திருந்தாலோ, காய்ச்சல் இருந்தோ, அது மற்றவர்களுக்கும் கட்டாயம்  பரவும்.

2 . ஏ.சி காற்றில் இருந்து வெளியே செல்லும் போது உடனே நம் மீது வெளிக் காற்று பட்டால், அது அலர்ஜியை ஏற்படுத்துவதோடு, தொற்று நோய்க்கும் வழி வகுக்கும்.

3 . ஏ.சி காற்றில் அதிக நேரம் இருக்க கூடாது. அதாவது நான்கைந்து மணி நேரத்துக்கு மேல இருந்தாலே, உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும்.

4 . முடி கொட்டுவதற்கு, நம் தலையில் நேரடியாக படும் ஏ.சி காற்று ஒரு காரணம்.

5 . நமது உடலில் உள்ள இரப்பதத்தை உறிஞ்சி, தோலை சுருங்க வைக்கும்.

6 .ஏ.சி அறையில் தான் அளவுக்கு அதிகமான நோய் கிருமிகள் உள்ளன.

ஆக இத்தனை குழப்பம் விளைவித்தாலும், ஏ.சி என்பது ஸ்டேடஸ் சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறது. உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்றால், நம்மை விசித்திர குள்ளனாக்கி விடுகிறார்கள். அதற்கு முன் சிறு வயதில் தங்கள் வளர்ந்த விதத்தை  மறக்காதீர்கள். பிறக்கும் போதே ஏ.சியுடன பிறந்திர்கள்? தெருவில் டயர் வண்டி உருட்டி, காலாற பள்ளிக்கு நடந்து சென்று, பட்டாம் பூச்சி பிடித்து, கோலி குண்டு விளையாடி, ஐஸ் பால் அடித்து- அப்போதெல்லாம் ஏ.சியிலா இருந்தீர்கள் என்று ஒரு முறை நினைத்துப் பாருங்கள்.

6 comments:

க.பாலாசி said...

நல்லவேள எங்க ஆபிஸ்ல இந்த கொடுமையில்ல... ஓட்ட போட்டு வைச்சிருக்காங்க...ஆனாலும் மெஷின் வாங்கி மாட்டல..

//ஜன்னல் திறந்தால், பச்சை நிறத்தில் கூவம் அவ்வளவு அழகாக இருக்கும்.//

சென்னையில கூவம் அழகா இருக்குன்னு சொன்ன மொத ஆள் நீங்கதான்னு நெனைக்கிறேன்...

//3 . ஏ.சி காற்றில் அதிக நேரம் இருக்க கூடாது. அதாவது நான்கைந்து மணி நேரத்துக்கு மேல இருந்தாலே, உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும்//

வக்கீலம்மா எப்ப டாக்டருக்கும் படிச்சீங்க... (சரி..சரி... ஃபீலிங் புரியுது).... :((

buvan said...

//1 .ஏ.சி அறையில் இருக்கும் போது, ஒருவருக்கு சளிப் பிடித்திருந்தாலோ, காய்ச்சல் இருந்தோ, அது மற்றவர்களுக்கும் கட்டாயம் பரவும். //

Voltas A.C போட்டோ போட்டிருக்கிங்களே...இந்த மாதிரி பிரச்சனை Voltas A.C போட்டிருந்தா மட்டும் தான் வரும் இல்ல எல்லா A.C-யிலுமே வருமா....?

KARTHIK said...

இதெல்லாம் நெமப ஓவரு

இங்க நம்ப கடைல வந்து இருந்து பாருங்க ஏசின் அருமை புரிய

எவ்வலவு பொறாமையா இருக்கு தெரியுமா உங்கள எல்லாம் பாத்தா

ரோகிணிசிவா said...

//தெருவில் டயர் வண்டி உருட்டி, காலாற பள்ளிக்கு நடந்து சென்று, பட்டாம் பூச்சி பிடித்து, கோலி குண்டு விளையாடி, ஐஸ் பால் அடித்து- //
mmm,antha naatkal veedukal sirithagavum,manitharkal manangal perthagavum irunthathu,
panam kuraivaagavum,paasam migunthum.

ரோகிணிசிவா said...
This comment has been removed by the author.
பிரதீபா said...

அட நீங்க வேற.. நம்மூருல தான் AC optional !! மற்ற நாட்டுல எல்லாம் centralized-including toilets !! உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே !! :-)