Friday, February 26, 2010

இது ஒரு காதல் கதை‍‍‍ன்னு சொல்லலாம்.

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே..''!

 தன் மொபைல் மியுசிக் ஃ பைலில் இருக்கும் 'டூயட்" பட பாடல் வரியை கேட்டுக்கும் போதெல்லாம் தன் கூர் நாசியை கண்ணாடியில் பார்த்து சிலிர்த்துக் கொள்வாள் தீபிகா. தாவணி போட்ட நாளில் இருந்தே தன் வருங்கால கணவன் குறித்து கலர் கலராய் கனவுகள் சுமந்தவள். சூரிய குமாரனாய் அவன் வருவான், திகட்ட திகட்ட காதல் தருவான், 'தீபு" என்ற வார்த்தையையே திருவாசகமாய் ஒலிப்பான், தினம் தினம் நம் நாட்கள் திருவிழாவாக நகரும் இப்படியெல்லாம் நினைப்பில் மிதந்தவளுக்கு வந்த வரன்தான் குமரன்.

நிச்சயதார்த்தம் முடித்தபின் துளிர்த்த அவர்களின் செல்பேசி உரையாடல்களின் பெரும்பகுதி ஷேர் மார்கெட், அமெரிக்க தேர்தல் பற்றியெல்லாம் பேசி தீபிகாவின் கனவில் தீ மூட்டிய போதும், காலங்கள் மாறும், தனக்கு கணவனான பின் குமரன் காதல் நோய்க்கு ஆளாவான் என்றெண்ணி அவனைக் கைப்பிடித்தாள்.

மாங்கல்ய கயிற்றின் புது மஞ்சள் சாயம் மாற ஆரம்பித்திருந்தது. ஆனால் தீபிகாவின் எதிர்பார்ப்புகளும் குமரனும் தனித் தனியே தான் இருந்தனர். அவள் முகத்தில் வந்து விழும் கற்றை முடியை அவன் தன் விரலால் ஒதுக்கி விடவில்லை. அலுவலகம் முடிந்து வரும் போது, அவள் கண் பொத்தி விளையாட்டு காட்டியதில்லை. ஊரே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மூழ்கிக் கிடந்த இரவு கூட, காரல் மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடுகளை கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவள் ஆசை ஆசையாக சமைத்துப் போட்டதை, நியுஸ் சேனல் பார்த்தபடியே மென்று விழுங்கினான்.

 தீபிகாவுக்கு நித்தமும் ஏமாற்றமாக கழிந்தது. ஆக இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதுகள் அவளுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றின. தான் நூறு சதவீதம் அவனைக் காதலிப்பதாகவும், ஆனால் ஒரு சதவீதம் கூட அவன் தனக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றும் ஒரு மாய எண்ணத்தை மனதுக்குள் மெல்ல வளர்த்தெடுத்தாள்.

ஒரு இரவு நேர தனிமை. 'தீபு" என்று கைப்பிடித்தான் குமரன். தீபு.. இத்தனை நாட்களாய் அவனிடமிருந்து அவள் எதிர்பார்த்துக் கிடந்த ஒற்றை வார்த்தை. ஆனால் அந்த சூழ்நிலையில் அதற்க்கு கிடைக்க வேண்டிய அன்பும் அங்கீகாரமும் அஸ்தமித்துப் போயிருக்க, சட்டென அவன் கைகளை உதறியவளின் குரல் விசும்பலானது.


'போதும் உங்கள கட்டிக்கிட்டு நான் படற அவஸ்தை. காதல்ன்ன என்னன்னு தெரியாத ஜென்மம். எத்தனை ஆசையோட, எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா. எல்லாம் போச்சு.."

''என்னம்மா பிரச்னை. இங்க வா.."- எட்டி அமர்ந்தவளை இழுக்க முற்பட்டான்.

'ஒன்னும் வேண்டாம்.. தேவைனா மட்டும் அன்பா பேசற மாதிரி நடிக்காதீங்க"". சுருங்கிப் போனான் குமரன். அன்றிலிருந்து அவர்கள் பஞ்சணையில் காற்று வீசியது. காதல் கரைந்து கொண்டே போனது.

இருந்தாலும் நல்ல வேளையாக அடுத்தடுத்த பிரளயங்கள்
வெடிக்கவில்லை.  குமரன் சிறுவயதில் இருந்தே எதையும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பவன் என்பதால், பொறுமையாக இருந்தான். எங்கே நிகழ்ந்தது அந்த தவறு என்று அவனால் உணர முடிந்தது.


தன் அலுவலக பார்ட்டி ஒன்றுக்கு மிகவும் வற்புறுத்தி தீபிகாவை அழைத்துப் போனான். திருமணத்துக்குப் பிறகு முதல் முதலாக பார்க்கிறார்கள் என்பதால், அவளே எதிர்பார்க்காத வகையில் ஏகப்பட்ட வரவேற்பு.

''நீங்க சமைச்ச காளான் மஞ்சூரியனையும் வெஜிடபிள் புலாவையும் 'ஏன் வொய்ப் பண்ணியது .. சூப்பரா இருக்கும்... சாப்பிட்டுப் பாருங்க...'ன்னு ஆபீசிக்கே விருந்து வெச்சிடுவார் குமரன்''- இது அக்கவுன்ட் செக்சன் கவிதா.

''பத்து வயசிலேயே டிராயிங் காம்படிஷன்ல கலெக்டர்-கிட்ட பிரைஸ் வாங்கிருக்கிங்களாமே... இது வரை நூறு தடவை சொல்லிட்டார் உங்க ஹஸ்பென்ட்.."" என்றார் பர்சனல் மேனேஜர்.

''நாங்க எல்லாம் லஞ்ச், டீ டைம்-ன்னு வெளில போய்ட்டா, ஐயா நைசா அவரோட ஸ்கிரின் சேவரைத்தான் பார்த்துக்கிட்டு இருப்பாரு.. அட.. உங்க போட்டோதாங்க அவனோட ஸ்க்ரின் சேவர்!""... அவளை இன்னும் சிவக்க வைத்தான் குமரனின் நெருங்கிய தோழன் மூர்த்தி.

விருந்தோடு நடந்த விளையாட்டுப் போட்டியில், ஒவ்வொருவரும் தங்கள் மனைவிக்கு பிடித்த பத்து அம்சங்களைப் ஒரு பேப்பரில் எழுத வேண்டும். அத்தனையையும் சரியாக எழுதிய குமரனை பாராட்டிய கைதட்டல் ஓய வெகு நேரம் ஆயிற்று.
கண்களில் கண்ணீர் தழும்ப நின்றுகொண்டிருந்த தீபிகா கையில் மட்டும் சாட்டை கிடைத்திருந்தால், தன்னைப் தானே அடித்துக் கொண்டிருப்பாள்.
அலுவலகத்தில் அதுவரை ரிசர்வ்டு டைப்பாக அறியப்பட்ட குமரன் மைக் பிடிக்க. அனைவரும் அசந்து போய் பார்த்தார்கள்...

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே...!
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்.
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்.
அண்டமெல்லாம் விண்டு போகும்.. கொண்ட காதல் கொள்கை மாறாது..."

சபை என்று கூட பார்க்காமல் வார்த்தைகள் முடியும் முன்னே ஓடி சென்று கணவனைக் கட்டிக் கொண்டாள்  தீபிகா.  'ஹே" என கூட்டம் ஆர்ப்பரித்ததில் அவளின் அழுகை சத்தம் அடங்கிப் போக, ரகசியமாக அந்தக் கூர்நாசியை செல்லமாக கிள்ளினான் குமரன். இனி அவர்கள் பஞ்சணையில் காற்றும் உண்டு. காதலும் உண்டு!


சிலர் காதலை மவுன ரகமாக வாசிப்பார்கள்.. சிலர் கடை விரித்து கச்சேரி வைப்பார்கள். குமரன் இதில் முதல் வகை. தீபிகா ரெண்டாம் வகை. இப்போது தீபிகாவுக்காக தன்னையும் இரண்டாம் வகையில் சேர்த்துக் கொண்டான் குமரன்.

நீங்கள் எந்த வகை?

(பின் குறிப்பு: இதை நான்தான்  எழுதினேனா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். பரவாயில்லை.. சாட்சாத்  நான்தான் எழுதினேன். ஒரு பிரபல பத்திரிக்கையில் ஏற்கனவே வெளியாகியுள்ளது..).








 

14 comments:

அகல்விளக்கு said...

ஆஹா....

அருமை போங்க....

கலக்கல்ஸ்...
வாழ்த்துக்கள்...

*இயற்கை ராஜி* said...

கலக்கல்ஸ்

ஆரூரன் விசுவநாதன் said...

காதலர் தினத்தன்று இந்த குட்டிப் பாப்பாவின் அப்பா அம்மா பெயரில் வந்த குறுஞ்செய்தி நினைவிற்கு வருகிறது.

அதற்குள் எப்படி இந்த குட்டிப் பாப்பா இவ்வளவு பெரிய பெண்ணாக, இல்லை இல்லை எழுதாளராக ஆனது.

நல்லாருடிம்மா குழந்தை.....உனக்கு நல்ல எதிர் காலமிருக்கு. நல்ல இ. வா. துணையாக கிடைக்க வாழ்த்துக்கள். ஹி...ஹி....ஹி....

க.பாலாசி said...

ஏதோ படத்துல பாத்தமாதிரி இருக்குது...உண்மைய சொல்லுங்க...

ஆமா... ஆரூரன் சாருக்கு தெரியாதா???

பிரேமா மகள் said...

சாமி சத்தியமா இதை நான் தான் எழுதினேன்... அவள் விகடன் பத்திரிக்கையில் ரொமான்ஸ் ரகசியம் என்ற பெயரில் இது வெளி வந்திருக்கிறது பாலாண்ணா..

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...

நல்லாருடிம்மா குழந்தை.....உனக்கு நல்ல எதிர் காலமிருக்கு. நல்ல இ. வா. துணையாக கிடைக்க வாழ்த்துக்கள். ஹி...ஹி....ஹி.//

என்ன அநியாயம்.... இது

லாவண்யாவிற்கு கல்யாணம் ஆன சந்தோஷமான செய்தி உங்களுக்குத் தெரியாதா!!!??

ஈரோடு கதிர் said...

கதை... அழகு

//பின் குறிப்பு: //
நீங்க என்ன ”பின் குறிப்பு” பிரேமாமகளா..
எது எழுதினாலும் பின்குறிப்பு எழுதறீங்க

பிரேமா மகள் said...

ஈரோடு கதிர் said...
லாவண்யாவிற்கு கல்யாணம் ஆன சந்தோஷமான செய்தி உங்களுக்குத் தெரியாதா!!!??

நீங்களா முடிவு பண்ணிட்டா எப்படி அங்கிள்! குட்டி பாப்பா‍வை பார்த்து பேசற பேச்சா இது..

பிரேமா மகள் said...

ஈரோடு கதிர் said...

//பின் குறிப்பு: //
நீங்க என்ன ”பின் குறிப்பு” பிரேமாமகளா..
எது எழுதினாலும் பின்குறிப்பு எழுதறீங்க..


என்ன பண்றது... பழக்க தோஷம்....

சக்திவேல் விரு said...

வேற என்ன சொல்ல simply superb. ரொம்ப அருமையா வந்து இருக்குது .

Unknown said...

இன்றைய இயந்திர தனமான வாழ்கையில், தாம்பத்ய வாழ்வில் 'காதல்' எவ்வளவு முக்கியம்ன்னு ரொம்ப அழகா சொன்னீங்க....

வாழ்த்துக்கள் :)

தாராபுரத்தான் said...

நானும் முதல் வகைதானுங்கோ.

பிரதீபா said...

//தீபிகாவின் எதிர்பார்ப்புகளும் குமரனும் தனித் தனியே தான் இருந்தனர்//
//காற்றும் உண்டு. காதலும் உண்டு!//
ரொம்ப நல்லா இருக்குங்க இந்த வரிகள் .