Tuesday, February 2, 2010

பிளாஸ் பேக்

திருமணம் ஆனவர்கள் மட்டும் இந்த கட்டுரையை மேற்கொண்டு படிக்கவும். (மற்றவர்கள் மன்னிக்கவும்.)

உங்களிடம்,  ஒரு கேள்வி....

சின்ன வயதில் எப்படி இருந்தீர்கள்?

ஐந்து வயதில் பட்டம் விட்டு, எட்டு வயதில் சைக்கிள் ஒட்டி, பனிரெண்டு வயதில் கிரிக்கெட் விளையாடி, வயதுக்கு தகுந்த வாழ்க்கை வாழ்ந்திருப்பீர்கள். வெறுமனே புத்தகத்தைப் படித்து, பரிட்சை எழுதி பள்ளிப்  படிப்பை கடந்தவராக யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கவும் முடியாது. கட்டுரைப் போட்டியில் முதல்  பரிசோ, நீளம் தாண்டுதலில் வாங்கிய ரெண்டாம் பரிசோ நிச்சயமாய் உங்கள் வீட்டு டி.விக்கு அருகில் இருக்கும்.  சரஸ்வதி பூஜைக்கு மறக்காமல் துடைத்து சந்தன பொட்டு வைப்பீர்கள்.

ஒரு காலத்தில் நீங்கள் வாலிபால் சாம்பியனாக,(அல்லது  நீங்கள் எந்த துறையில் ஜொலித்திர்களோ, அந்த துறையை நினைத்துக் கொள்ளவும்).  பள்ளியிலும் கல்லூரியிலும் வலம வந்திருப்பீர்கள்.  இபோது என்ன செய்கிறீர்கள்?  பிசினஸ், மாத சம்பள வேலை,  கூட்டு குடும்பம், தனிக் குடும்பம், இல்லத் தலைவி என யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஏன் கேள்வி இதுதான்.
திருமணத்திற்கு பிறகும், அப்படியே வாலிபால் கிரவுண்டுக்கு செல்கிறீர்களா? இல்லையே?
சென்னை மெரினா நீச்சல் குளத்தில், தன் பத்து வயது மகனுக்கோ, மகளுக்கோ, நீச்சல் சொல்லித் தரும் அப்பாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த அம்மாவும் சலங்கை கட்டிக் கொண்டு மகளுடன் பரத நாட்டிய கிளாஸ் போவதில்லை. வீதி-யில் வளர்ந்த குழந்தையுடன் கிரிக்கெட்டும், டென்னிசும் ஆடும் அப்பாக்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனா அம்மா?

ஒரு காலத்தில் இவரும், ஏதாவது ஒரு மட்டையும் பந்துமாய்  பள்ளி மைதானத்தில் திரிந்தவர்கள் தானே?

சமிபத்தில் எங்கள் ஆபீஸ் சார்பாக, கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். ஆட்டமும் பாட்டமுமாக திருவிழா கலை கட்டியது.  போட்டி முடிந்ததும் அங்கு பணி புரியும் ஆசிரியைகளுக்காக போட்டி நடத்தினோம். ஒன்றுமில்லை, கண்ணாடி டப்பாவுக்குள் இருக்கும் சீட்டில் என்ன எழுதி இருந்ததோ, அதை அப்படியே நடித்துக் காட்ட வேண்டும்.

பெரும்பாலும், 'வடிவேல்  ஜோக் சொல்லுக, குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடவும்,  வெஸ்டன் பாட்டு பாடவும், ரஜினி டயலாக் ஒன்று" இந்த ரீதியில் தான் இருந்தது. அங்கு 20 -க்கும் மேற்பட்ட ஆசிரியைகளும் இருந்தனர். ஆனால் ஒருத்தர் கூட மேடை ஏறவில்லை. அத்தனை பெரும் சொல்லி வைத்த மாதிரி , சொன்ன பதில், 'எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு"
இதில் ஹெலன் என்ற ஆசிரியை அதே கல்லூரியில் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் படித்து  முடித்தவராம். அப்போது அவர்தான், கல்ச்சுரல் கோ-ஆர்டினேட்டர். பாட்டு நடனம், மிமிக்கிரி என பல பரிசு தட்டி சென்றவர், இன்று மேடை ஏறவே கூச்சப்பட காரணம் 'கல்யாணம"
 சொல்லி வைத்த மாதிரி, எல்லோரும் இதையே சொல்ல போட்டி நடத்திய, எங்களுக்கு வருத்தமாகிப் போனது. அப்போதுதான் கீதா என்ற ஆசிரியை மேடை ஏறினார். அவருக்கு வந்த சீட்டு, 'கவுண்ட மணியும் , அஜித்தும் உங்களைப் பெண் பார்க்க வந்திருந்தால் எப்படி நடத்து கொள்வீர்கள்?" என்பதுதான். மிக அற்புதமாக  நடித்ததோடு, வசனமும் பேசினார்.

அவருக்கான நேரம் முடிந்ததும், அத்தனை மாணவிகளும் அவரை சூழ்ந்து கொண்டனர். சந்தோசத்தில் கண்ணீரே வந்து விட்டது அவருக்கு. நாங்கள் கிளம்பும்போது, ''இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். காலேஜ் டேஸ்-ல நான் ஒரு டிராமா ஆர்டிஸ்ட். இன்னிக்கு வேலையும் வீடுமா நேரம் கழியுது. ரொம்ப நாள் கழிச்சு என்னையே நான் உணர்ந்தேன்"" என்றார். இது நிச்சயமாய் அவர் மனதில் ஏக்கத்தை திர்த்திருக்கும்.

திருமணம் ஆனா பின், இப்படி எத்தனை பேர் மேடை ஏறி இருக்கிறார்கள்? ஏன், ''மார்கழி மாசத்துல எத்தனை பேர் மேடை ஏறி பாடறாங்க? டான்ஸ் ஆடறாங்க? சினிமாவுல வராங்க?" என்று நீங்கள் கேட்கலாம்.

நான் கேட்டது, உங்கள் வீட்டு பெண்ணைப் பற்றி.........................
அப்பா நடு வாசலில் உட்கார்ந்து கொண்டு, கர்ண கொடூர குரலில் 'செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல்"என்று ஆரம்பிப்பார். திருமணத்திற்கு முன் சூப்பர் சிங்கராக இருந்த அம்மா, இன்று லேசா ஹம பண்ணினாலே, 'அங்க என்ன சத்தம் என்று பதில் வரும்"
எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் 'தன் மருமகள்,
இந்த வீட்டுக்கு பொருத்தமில்லை" என்றார் மாமனார். அதற்க்கு அவர் சொன்ன காரணம் மருமகள், 'வீடியோ கேம்ஸ்  விளையாடுகிறாள் என்பதுதான். எனக்கு தெரிந்து, எந்த சட்டமும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை  குற்றம்  என  சொல்லவில்லை.




எத்தனை பேருக்கு கிடைக்கிறது இப்படி விளையாடும்  வாய்ப்பு. சரி, உங்க அம்மா சின்ன வயதில் என்ன துறையில் திறமைசாலி என்று தெரியுமா உங்களுக்கு?  இல்லை. உங்களையே நீங்கள் தொலைத்து விட்ட பட்சத்தில், அம்மாவை எப்படி தேடுவது?

இன்னிய தேதியில், ரகுமானை விட சிறந்த இசை அமைப்பாளர்  இந்தியாவில் உண்டு என்று தைரியமாய் சொல்வேன். அதே சமயம், அந்த நபருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் அழுத்தி சொல்வேன். நம்மில் பலரும் அப்படித்தான். அங்கிகாரம் கிடைக்காததால், அறிந்து கொண்ட கலையை அப்படியே விட்டு விடுகிறோம். கல்யாணம் ஆனதும் அது இன்னும் சகஜமாகிப் போகிறது.
கல்யாணம் என்ன, கல்லறைக்கு செல்லும் பாஸா? இல்லையே? அப்புறம் ஏன்? கல்யாணம் ஆனால் என்ன? அதே உடல், அதே மனம்தானே?

மற்றவர்கள் தப்பா நினைப்பார்களே, என்ற காரணத்துக்காகவே, நமக்கு நாமே முகத்திரை போட்டுக் கொள்கிறோம். எப்போது வெளியே..........



விசில் அடிக்காதே,
துப்பட்டா  போடாமல் 
வெளியே போகாதே,
சத்தம் போட்டு பேசாதே,
ஆண் பிள்ளையை 
பெயர் சொல்லாதே,
நெற்றியில் குங்குமம் வை.
கருப்பு புடவை கட்டாதே.
அதிக நேரம் 
போன் பேசாதே.
தலைவிரித்து வைக்காதே,
மெதுவாய் சிரி.
அடுத்ததாய் சாப்பிடு.
சினிமாககாரனை ரசிக்காதே.
ஒற்றையாய் ஒரு தாலிதானே
கட்டிக்கொண்டேன்?
அதற்கு ஏன் 
இத்தனை கட்டளைகள்?







 





-
-

6 comments:

தாராபுரத்தான் said...

நாங்க சொன்னாக்கூட எங்க வீட்டு பாப்பா கேட்க மாண்டேன்ங்கிறது.நீங்களாவது சொல்லுங்க.

KARTHIK said...

// சரி, உங்க அம்மா சின்ன வயதில் என்ன துறையில் திறமைசாலி என்று தெரியுமா உங்களுக்கு? //

அப்பையும் இப்பையும் எப்பையும் என்ன வளக்குரதுல :-))

Nys said...

பெரும்பான்மையான பெண்கள் என் கணவர் எனக்கு அதிகமான சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லும் போது கோபமும், நகைப்பும் தான் வருகிறது... உன் சுதந்திரம் எப்போது உன் கணவரிடம் சென்றது...?

ரோகிணிசிவா said...

உங்களையே நீங்கள் தொலைத்து விட்ட பட்சத்தில், அம்மாவை எப்படி தேடுவது?-உண்மை !
முகவரி மட்டும் அல்ல முகமும் மாறிவிடுகிறது,திருமணத்தில்!
"Beneath your monstrous ego,I ate the magic loaf and became a dwarf"-The Old Play house,Kamala Das

DHANS said...

intha pathiva note pani vachukaren, kalyaanam anappuram ithelaam thadaigala irukaama paathukaren en manaivikku :)

பிரதீபா said...

//ஒற்றையாய் ஒரு தாலிதானே
கட்டிக்கொண்டேன்?
அதற்கு ஏன்
இத்தனை கட்டளைகள்?//
ஒரே போடா போட்டுட்டீங்க.