Friday, February 26, 2010

இது ஒரு காதல் கதை‍‍‍ன்னு சொல்லலாம்.

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே..''!

 தன் மொபைல் மியுசிக் ஃ பைலில் இருக்கும் 'டூயட்" பட பாடல் வரியை கேட்டுக்கும் போதெல்லாம் தன் கூர் நாசியை கண்ணாடியில் பார்த்து சிலிர்த்துக் கொள்வாள் தீபிகா. தாவணி போட்ட நாளில் இருந்தே தன் வருங்கால கணவன் குறித்து கலர் கலராய் கனவுகள் சுமந்தவள். சூரிய குமாரனாய் அவன் வருவான், திகட்ட திகட்ட காதல் தருவான், 'தீபு" என்ற வார்த்தையையே திருவாசகமாய் ஒலிப்பான், தினம் தினம் நம் நாட்கள் திருவிழாவாக நகரும் இப்படியெல்லாம் நினைப்பில் மிதந்தவளுக்கு வந்த வரன்தான் குமரன்.

நிச்சயதார்த்தம் முடித்தபின் துளிர்த்த அவர்களின் செல்பேசி உரையாடல்களின் பெரும்பகுதி ஷேர் மார்கெட், அமெரிக்க தேர்தல் பற்றியெல்லாம் பேசி தீபிகாவின் கனவில் தீ மூட்டிய போதும், காலங்கள் மாறும், தனக்கு கணவனான பின் குமரன் காதல் நோய்க்கு ஆளாவான் என்றெண்ணி அவனைக் கைப்பிடித்தாள்.

மாங்கல்ய கயிற்றின் புது மஞ்சள் சாயம் மாற ஆரம்பித்திருந்தது. ஆனால் தீபிகாவின் எதிர்பார்ப்புகளும் குமரனும் தனித் தனியே தான் இருந்தனர். அவள் முகத்தில் வந்து விழும் கற்றை முடியை அவன் தன் விரலால் ஒதுக்கி விடவில்லை. அலுவலகம் முடிந்து வரும் போது, அவள் கண் பொத்தி விளையாட்டு காட்டியதில்லை. ஊரே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மூழ்கிக் கிடந்த இரவு கூட, காரல் மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடுகளை கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவள் ஆசை ஆசையாக சமைத்துப் போட்டதை, நியுஸ் சேனல் பார்த்தபடியே மென்று விழுங்கினான்.

 தீபிகாவுக்கு நித்தமும் ஏமாற்றமாக கழிந்தது. ஆக இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதுகள் அவளுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றின. தான் நூறு சதவீதம் அவனைக் காதலிப்பதாகவும், ஆனால் ஒரு சதவீதம் கூட அவன் தனக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றும் ஒரு மாய எண்ணத்தை மனதுக்குள் மெல்ல வளர்த்தெடுத்தாள்.

ஒரு இரவு நேர தனிமை. 'தீபு" என்று கைப்பிடித்தான் குமரன். தீபு.. இத்தனை நாட்களாய் அவனிடமிருந்து அவள் எதிர்பார்த்துக் கிடந்த ஒற்றை வார்த்தை. ஆனால் அந்த சூழ்நிலையில் அதற்க்கு கிடைக்க வேண்டிய அன்பும் அங்கீகாரமும் அஸ்தமித்துப் போயிருக்க, சட்டென அவன் கைகளை உதறியவளின் குரல் விசும்பலானது.


'போதும் உங்கள கட்டிக்கிட்டு நான் படற அவஸ்தை. காதல்ன்ன என்னன்னு தெரியாத ஜென்மம். எத்தனை ஆசையோட, எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா. எல்லாம் போச்சு.."

''என்னம்மா பிரச்னை. இங்க வா.."- எட்டி அமர்ந்தவளை இழுக்க முற்பட்டான்.

'ஒன்னும் வேண்டாம்.. தேவைனா மட்டும் அன்பா பேசற மாதிரி நடிக்காதீங்க"". சுருங்கிப் போனான் குமரன். அன்றிலிருந்து அவர்கள் பஞ்சணையில் காற்று வீசியது. காதல் கரைந்து கொண்டே போனது.

இருந்தாலும் நல்ல வேளையாக அடுத்தடுத்த பிரளயங்கள்
வெடிக்கவில்லை.  குமரன் சிறுவயதில் இருந்தே எதையும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பவன் என்பதால், பொறுமையாக இருந்தான். எங்கே நிகழ்ந்தது அந்த தவறு என்று அவனால் உணர முடிந்தது.


தன் அலுவலக பார்ட்டி ஒன்றுக்கு மிகவும் வற்புறுத்தி தீபிகாவை அழைத்துப் போனான். திருமணத்துக்குப் பிறகு முதல் முதலாக பார்க்கிறார்கள் என்பதால், அவளே எதிர்பார்க்காத வகையில் ஏகப்பட்ட வரவேற்பு.

''நீங்க சமைச்ச காளான் மஞ்சூரியனையும் வெஜிடபிள் புலாவையும் 'ஏன் வொய்ப் பண்ணியது .. சூப்பரா இருக்கும்... சாப்பிட்டுப் பாருங்க...'ன்னு ஆபீசிக்கே விருந்து வெச்சிடுவார் குமரன்''- இது அக்கவுன்ட் செக்சன் கவிதா.

''பத்து வயசிலேயே டிராயிங் காம்படிஷன்ல கலெக்டர்-கிட்ட பிரைஸ் வாங்கிருக்கிங்களாமே... இது வரை நூறு தடவை சொல்லிட்டார் உங்க ஹஸ்பென்ட்.."" என்றார் பர்சனல் மேனேஜர்.

''நாங்க எல்லாம் லஞ்ச், டீ டைம்-ன்னு வெளில போய்ட்டா, ஐயா நைசா அவரோட ஸ்கிரின் சேவரைத்தான் பார்த்துக்கிட்டு இருப்பாரு.. அட.. உங்க போட்டோதாங்க அவனோட ஸ்க்ரின் சேவர்!""... அவளை இன்னும் சிவக்க வைத்தான் குமரனின் நெருங்கிய தோழன் மூர்த்தி.

விருந்தோடு நடந்த விளையாட்டுப் போட்டியில், ஒவ்வொருவரும் தங்கள் மனைவிக்கு பிடித்த பத்து அம்சங்களைப் ஒரு பேப்பரில் எழுத வேண்டும். அத்தனையையும் சரியாக எழுதிய குமரனை பாராட்டிய கைதட்டல் ஓய வெகு நேரம் ஆயிற்று.
கண்களில் கண்ணீர் தழும்ப நின்றுகொண்டிருந்த தீபிகா கையில் மட்டும் சாட்டை கிடைத்திருந்தால், தன்னைப் தானே அடித்துக் கொண்டிருப்பாள்.
அலுவலகத்தில் அதுவரை ரிசர்வ்டு டைப்பாக அறியப்பட்ட குமரன் மைக் பிடிக்க. அனைவரும் அசந்து போய் பார்த்தார்கள்...

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே...!
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்.
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்.
அண்டமெல்லாம் விண்டு போகும்.. கொண்ட காதல் கொள்கை மாறாது..."

சபை என்று கூட பார்க்காமல் வார்த்தைகள் முடியும் முன்னே ஓடி சென்று கணவனைக் கட்டிக் கொண்டாள்  தீபிகா.  'ஹே" என கூட்டம் ஆர்ப்பரித்ததில் அவளின் அழுகை சத்தம் அடங்கிப் போக, ரகசியமாக அந்தக் கூர்நாசியை செல்லமாக கிள்ளினான் குமரன். இனி அவர்கள் பஞ்சணையில் காற்றும் உண்டு. காதலும் உண்டு!


சிலர் காதலை மவுன ரகமாக வாசிப்பார்கள்.. சிலர் கடை விரித்து கச்சேரி வைப்பார்கள். குமரன் இதில் முதல் வகை. தீபிகா ரெண்டாம் வகை. இப்போது தீபிகாவுக்காக தன்னையும் இரண்டாம் வகையில் சேர்த்துக் கொண்டான் குமரன்.

நீங்கள் எந்த வகை?

(பின் குறிப்பு: இதை நான்தான்  எழுதினேனா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். பரவாயில்லை.. சாட்சாத்  நான்தான் எழுதினேன். ஒரு பிரபல பத்திரிக்கையில் ஏற்கனவே வெளியாகியுள்ளது..).








 

Thursday, February 25, 2010

என் மீது வீசும் உன் வாசம்

இருள் அறியா
என் கனவுகளுக்கு
கலர் பூசாமல் போகும்
உன் சட்டை வாசத்திற்கு
என்ன திமிர் இருக்கும்?

ஊடல் பொழுதுகள்
நமக்கு தடுப்பு சுவராக
என் துப்பட்டாவுடன்
உறவாடிக் கொண்டிருக்கிறது
உன் சட்டை வாசம்...!

உன்னோடு
நிழலான நாட்களில்
என் காதலுக்கும்
எனக்கும்
பாரமாகிப் போகிறது
உன் சட்டை வாசம்...!


எந்த சட்டத்தாலும்
தடை செய்ய முடியவில்லை...!
என் அழகான மனதை
உன் சட்டை வாசம்
அழுக்காக்கி செல்வதை...!.

ஊர் உறங்கிய பொழுதுகளில்
உன் கனவுக்குள்
நான் வாழ்வதை
கட்டியம் கூறி
பறை சாற்றுகின்றன ....
என் தாவணிக்குள்
கலந்து போன
உன் சட்டை வாசம்....

Monday, February 22, 2010

இந்த பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனி மரியாதை இருக்கும். ஆனால் அவர்கள்  போக்கு எனக்கு அடிக்கடி கோபத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்று தெரியவில்லை..

சமீபத்தில் ஐரோப்பிய  நாடுகள் கூட்டமைப்பு-க்கு செல்ல விசா தரும், நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். விசா எடுப்பதற்கு ஆங்கிலம் அவசியம் என்று அங்கு எந்த சட்டமும் வைக்க வில்லை. அதெல்லாம் இப்போது பிரச்சனை இல்லை.  நான் சொல்ல வந்தது என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருந்த இரு பெண்களைப் பற்றி. இருவரில் ஒருவர் பெயர் தெரியாது.அதனால் பெயர் தெரியாதவர் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன்.

தன் மூன்று வயது பையனுடன்  வந்திருந்தார். அந்த பையன்  துரு துரு-ன்னு விளையாடிக் கொண்டிருக்க, 'கம் சிட், டோன்ட் கோ, நோ சவுன்ட்" இப்படி அந்த பையனை அதட்டிக் கொண்டே இருந்தார் அந்தம்மா. கொஞ்ச நேரத்தில் அந்த பையன் பசிக்கிறது என்று அவன் அம்மாவின் துப்பட்டாவை பிடித்துக் கொண்டு அழுதான்.. அப்போது அவனை சமாதானப்படுத்த முயற்சிக்காமல், 'ஒ பேபி.. டோன்ட் கிரை. டோன்ட் ஸ்பாயில் மை டிரஸ்" என்று அப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசினார். (உடனே அவர் தமிழ் தெரியாத இனத்தினர் என்று நீங்கள் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகலாம். கொஞ்ச நேரத்துக்கு முன், அவருக்கு வந்த போனில் பேசிய போது நான்கேட்டது அத்தனையும் 'இன்னா மே" ரக தமிழ் ).
'புள்ள பசிக்கு அழுவதை விட 500 - ரூபாயில் வாங்கிய சுடிதார் பெரிசா" என்று தெரியவில்லை. அழுது அழுது சலித்துப் போனவன் மறுபடியும் விளையாட அரம்பித்துவ் ட்டான். அப்போது எதிர்பாராத விதமாக, அங்கிருந்த இரும்பு சேரில் தலையை இடித்துக் கொண்டான். அதற்காவது அந்தம்மா பதறுவார் என்று நினைத்தேன். இல்லவே இல்லை.''ஐ டோல்டு யு நோ.ஐ டோல்டு யு நோ" என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். பத்தாததுக்கு அந்தப் பையனை வேறு போட்டு அடித்தார். அடிப்பாவி.. புள்ள இடிச்சு தலை வீங்கி இருக்கு.நீயெல்லாம் ராட்சசி-யான்னு திட்டத்தான் தோன்றியது. ஆனால் அந்தம்மா எதைப் பற்றியும்  பற்றி கவலைப் படாமல் பையனை  திட்டிக் கொண்டிருந்தார். எனக்கு என்னவோ, அந்த பையனுக்கு இடித்ததை விட, அம்மாவிடம் அடி வாங்கியதுதான் அதிகமாக வழித்திருக்கும் என்று தோன்றியது.

இந்தப் பெண்கள் என் இப்படி இருக்கிறார்கள்> குழந்தைகள் இவர்களின் மந்திர கோளுக்கு கட்டுபடும் பொம்மையாக இருக்க வேண்டும் என என் நினைக்கிறார்கள்?

அடுத்து சம்பவமும் அதே இடத்தில் தான் நடந்தது. என் பக்கத்தில் அமர்ந்திருந்த சித்ரா ஆண்டி-க்கு எப்படியும் ஐம்பது டு அறுபது வயதுக்குள் இருக்கும். தன் பையன் ஐரோப்பிய நாடுகள் ஒன்றில் இருப்பதாகவும் தான் அந்தக் காலத்திலேயே, எத்திராஜ் கல்லூரியில் டிகிரி படித்து முடித்ததாகவும் கூறினார். அவரின் கணவரும் அவருடன் வந்திருந்தார். அவருக்கான அழைப்பு வர, என்கொயரி சீட்டில் அமர்ந்தார். அங்கிருந்த பணியாளர் ஒருவர், பாஸ்போட, பேங்க் ஸ்டேட்மென்ட், டெலிபோன் பில் போன்ற அத்தியாவசிய டாக்குமென்ட் குறித்து கேட்க்க, எல்லாவற்றிற்கும் அவர்  பின்புறம் திரும்பி தன் கணவரை பதில்  கேட்டுக் கொண்டிருந்தார். உங்க பையன் எந்த நாட்டில் இருக்கிறான் என்ற கேள்விக்கும் அதே உரையாடல் தான். 'ஏங்க இவங்க நம்ம பையன் இருக்க நாட்டை கேக்கறாங்க. , ஏங்க என்னை கையெழுத்து  போட சொல்றாங்க.ஏங்க நமக்கு ஏதாவது பிராபர்ட்டி இருக்கான்னு கேக்கறாங்க" இப்படி எல்லாவற்றிற்கும்
 'ஏங்க" தான்.

டென்ஷனான அங்கிருந்த பணியாளர் ஒருவர், மேடம் பிளைட் ஏறும் போது கூட உங்க கணவர்-கிட சம்மதம் கேட்பிங்க போலிருக்கு.. யு.கே. எம்பசியில் இன்னும் கேள்வி கேட்பாங்களே? அதுக்கு நீங்க மட்டும் தனியாத்தானே போகணும்.. என்ன செய்வீங்க'' என்றார்.

அதற்கு அவர் எதோ, குற்றம் சுமத்தப்பட்டவர் போல பயந்தார். அதெப்படி பொண்டாட்டியை இண்டர்வியு பண்றப்போ புருஷன் இருக்க கூடாதா? அதென்ன ரகசியம் வேண்டி கிடக்கு?" என்று சண்டைக்கே வந்து விட்டார். பாவமாகிப் போயிற்று அங்கிருந்த பணியாளரின் நிலை.

எனக்கு அந்த ஆண்டியை பார்த்ததும் கோபமாய் வந்தது. சொந்தமாய் யோசிக்க, பேச, செயல்பட தெரியாமல் மற்றவர்களிடம் சண்டைக்கு ஏன் போக வேண்டும்? அதுவும் டிகிரி படித்தவர், சாதாரனமாக கேட்க்கும் கேள்விகளுக்கே, கணவரிடம் பதில் கேட்டுக் கொண்டிருந்தால், இவர் சுயமாக எதற்கு சிந்திப்பார்?  இந்த பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

Saturday, February 13, 2010

ரயிலும் 'கூ க் கூ" என்று தான் கூவும்.

ரயில் பயணத்தில்
என் முகம் அறையும்
காற்றின் திசையில்
நீ கலந்திருக்கிறாய்!
என் பொழுதுகள்
மூர்ச்சை ஆகின்றன!


 சொல்லவும்
பகிரவும் முடியாத
பல காதல்களை
தனக்குள்
சுமந்து செல்கிறது
தண்டவாளத்தில்
இணை பிரியாத ரயில்.
இருப்பினும்
இன்னும் பாஞ்சாலி
எழுதுகிறாள்
''மாமா உன்னை பார்க்கணும்"


பயணம் முடிந்ததும்
உன் கையில் இருந்த
பயணச்சீட்டு கிழிக்கப்பட்டது.
என் அறையில்
ஒரு பொக்கிஷம் சேர்ந்தது!
காதலும் பிறந்தது!


என் காதல்
எப்போதும்
பயணத்தில் முடிவிலேயே
பறைசாற்றப்படுகின்றன!
கை குலுக்கி
விடை பெற்ற பிறகு!


என்னைத்
தாண்டி செல்கிறது
சமயங்களில்
என்னைத் தவிர்த்து செல்கிறது
நான் பயணம்
செல்ல வேண்டிய
ரயில் வண்டி!
உன்னைப் போல!

Friday, February 12, 2010

கதவை திற. காற்று வரட்டும்

ஏ.சி . இந்த வார்த்தை-யை சொல்லும் போதே குளிரும். ஆனால் எனக்கோ பற்றிக் கொண்டு எரியும். எல்லாம் இந்த வெட்டி பந்தாவில் வந்த விளைவுதான்.  என் வீட்டில் (முதலில் என் வீடு எது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  சிறு வயது முதலே மாமா வீட்டில் வளர்ந்தவள். என் பூர்வீக வீட்டையே, என் வீடு என்று சொல்லாமல் அப்பா வீடு என்றுதான் சொல்வேன். தற்போதும் சென்னையில் அக்கா வீட்டில் தான் இருக்கிறேன்). ஏ.சி இல்லை. நான் படித்த அரசு பள்ளியில் ஃபேன் இருந்தது இல்லை. கல்லூரியில்  ஃபேன் இருக்கும். ஆனால் போட மாட்டார்கள்.

சினிமா தியேட்டர்களிலும், உயர்தர ஹோட்டல்களிலும் தான் முதன் முதலாக ஏ.சி காற்றை நான் அனுபவித்தது. இங்கே சென்னையில் வேலைக்கு சேர்ந்தது முற்றிலும் ஏ.சி செய்யப்பட அலுவலகத்தில் தான். உள்ளே நுழையும் போது, ஜில்லென்ற காற்று வீசும். பத்தரைக்கு எல்லாம் குளிர் ஆளைக் கொள்ளும். ஏ.சியை கொஞ்சம் குறைத்து  வையுங்கள் என்றால், ஆளாளுக்கு சத்தம் போடுவார்கள்.
''ஏங்க என்னமா சூடா இருக்கு. சென்னை வெயிலில் ஏ.சி இல்லாம இருக்க முடியாதுங்க'" என்று அலப்பறையை கூட்டுவார்கள்.  இத்தனைக்கும் அரக்கோணத்திலும், சிவகாசியிலும் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.. வெயில் வாட்டி  எடுக்கும் வரண்ட பூமியில் பிறந்துவிட்டு, ஏதோ குலுமனாலியில்  சம்மந்தம் பேசிய எபைக்ட்டே இவங்களிடம் இருக்கும். இது கூட பரவாயில்லை, குளிர் கொல்லும் மார்கழி மாசத்திலும் இதே நிலைதான் பாஸ்..

ரெண்டாவது மாடியில் என் அலுவலகம். ஜன்னல் திறந்தால், பச்சை நிறத்தில் கூவம் அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு மழை நாளில் கூட அதை ரசிக்க விட்டதில்லை. காரணம் ஜன்னல் திறந்தால் ஏ.சி காற்று வெளியே போய்விடும். அதவை விட உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் காற்று வெளியே இருப்பதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பேன்?

யாரைக் கேட்டாலும் குளிருதுன்னு சொல்லுவாங்க. ஆனா ஏ.சியை நிறுத்த சொன்னா, எதோ பட்டிக்காட்டான்-ன்னு நினைப்பு. எங்கள் அலுவலகத்தில் ரெண்டு பாகமாக பிரிக்கப்பட்டு, கண்ணாடி தடுப்புகள் வைத்து, ஒவ்வொருவருக்கும் இருக்கைகள் இருக்கும். ஏ.சி பொதுவான நடைப்பாதையில் இருக்கும். எந்திருத்து வெளியே செல்லலாம் என்றாலே, காற்று முகத்தில் அடிக்கும். இதற்கு பயந்தே நான் அடிக்கடி சீட்-யை விட்டு எழுவதில்லை.

நைட் ஏழு மணிக்கும் அதே வேகத்தில் தான் ஏ.சி இருக்கும். இவங்களுக்கு மாலை பொழுதின் மயக்கத்தின் அருமை தெரியுமா? என்று புரியவில்லை.

இதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அலுவலக ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ, யாரைப் பார்க்க சென்றாலும், அவர்கள் அறையில் ஏ.சி இருந்தால் முதல் காரியமாக செய்வது, நம்மை அமர வைத்து விட்டு ஏ.சி போடுவதுதான். அதுவும் வெளியே  இருக்கும் பியுனை கூப்பிட்டு ஏ.சி போட சொல்வார்கள். (அது வரைக்கும் அவர்கள் எப்படி ஏ.சி இல்லாமல் இருந்தார்கள்) இதில் ஏ.சியில் போட்டு ஃபேன்-னும் போட்டு கொடுமைப் படுத்துபவர்கள் இருக்கிறார்கள். சார், கொஞ்சம் ஏ.சி நிறுத்த முடியுமா? என்று கேட்டால், கிண்டலா சிரித்து விட்டு, 'என்னால ஏ.சி இல்லாம இருக்க முடியாது எப்படித்தான் நீங்க இருக்கிங்களோ" என்பார்கள்.

 தெரியாமல் கேட்கிறேன் இவர்கள், டாய்லெட் போகும் போதும், மார்கெட்டுக்கு காய் வாங்க போகும் போதும் முதுகில் ஏ.சியை சுமந்து கொண்டா செல்வார்கள் இல்லையே?. காரில் அலுவலகம் செல்லும் நபராக இருந்தால் பரவாயில்லை. டு விலரிலும், மாநகராட்சி பஸ்-யிலும் செல்பவர்கள் இதே கதை சொன்னால் எப்படி? எனக்கு தெரிந்து எங்கள் அலுவலகத்தில் முக்கால் வாசி பேரின் வீட்டில் ஏ.சி இல்லை. ஆனால் அவர்கள் தான் இங்கு ஏ.சிக்கு போர் கோடி தூக்குவது.

ஏ.சி இல்லாமல் இருப்பது ஏனோ, தரக் குறைவாக அல்லவா சித்தரிக்கப்படுகிறது?

 1 .ஏ.சி அறையில் இருக்கும் போது, ஒருவருக்கு சளிப் பிடித்திருந்தாலோ, காய்ச்சல் இருந்தோ, அது மற்றவர்களுக்கும் கட்டாயம்  பரவும்.

2 . ஏ.சி காற்றில் இருந்து வெளியே செல்லும் போது உடனே நம் மீது வெளிக் காற்று பட்டால், அது அலர்ஜியை ஏற்படுத்துவதோடு, தொற்று நோய்க்கும் வழி வகுக்கும்.

3 . ஏ.சி காற்றில் அதிக நேரம் இருக்க கூடாது. அதாவது நான்கைந்து மணி நேரத்துக்கு மேல இருந்தாலே, உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும்.

4 . முடி கொட்டுவதற்கு, நம் தலையில் நேரடியாக படும் ஏ.சி காற்று ஒரு காரணம்.

5 . நமது உடலில் உள்ள இரப்பதத்தை உறிஞ்சி, தோலை சுருங்க வைக்கும்.

6 .ஏ.சி அறையில் தான் அளவுக்கு அதிகமான நோய் கிருமிகள் உள்ளன.

ஆக இத்தனை குழப்பம் விளைவித்தாலும், ஏ.சி என்பது ஸ்டேடஸ் சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறது. உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்றால், நம்மை விசித்திர குள்ளனாக்கி விடுகிறார்கள். அதற்கு முன் சிறு வயதில் தங்கள் வளர்ந்த விதத்தை  மறக்காதீர்கள். பிறக்கும் போதே ஏ.சியுடன பிறந்திர்கள்? தெருவில் டயர் வண்டி உருட்டி, காலாற பள்ளிக்கு நடந்து சென்று, பட்டாம் பூச்சி பிடித்து, கோலி குண்டு விளையாடி, ஐஸ் பால் அடித்து- அப்போதெல்லாம் ஏ.சியிலா இருந்தீர்கள் என்று ஒரு முறை நினைத்துப் பாருங்கள்.

Monday, February 8, 2010

என் காலச் சக்கரம் நீ.

நான் புள்ளி வைக்கிறேன்.
நீ கோடு போடுகிறாய்.
என் அழகான வாசல்
அழுக்காகிப் போக
சத்தமில்லாமல் இசைகிறது
ஒரு அதிகாலை ராகம்.

என்னை
சிலுவையில்
அறைவதும்
உச்சிப் பொட்டில்
முத்தமிடுவதும்
உன் விருப்பம்.
அதற்கு முன்
சொல்லிவிட்டுப் போ.
நம் குழந்தைக்கு
என்ன பெயர் வைக்கலாம்!


                                                                                                                                                                          
என் மீதான
ஏக்கங்களும்
தாபங்களும்
அதிகமாவதற்கு
என்ன செய்வதென்கிறாய்!
அடப்பாவி
அதற்காத்தானே
காத்திருக்கிறது
என் மஞ்சம்!


உதடு குவித்து
இதயம் நெருங்கும்
மூச்சுக் காற்றின்
காதல் நேரத்தில்
அழுத்தமாய் பதிந்து
ஆனந்த வலி தருகிறது
நீ கட்டிய தாலி!


உச்சிப் பொட்டில்
உள்ளக் குமறளில்
உள்ளங் காலில்
தடை இல்லாத
என் கனவுகளில்,
இதயத்தில் ஆழத்தில் 
என்னுள் சக்கரமாய்
சுழல்கிறது  உன் காதல்.

Tuesday, February 2, 2010

பிளாஸ் பேக்

திருமணம் ஆனவர்கள் மட்டும் இந்த கட்டுரையை மேற்கொண்டு படிக்கவும். (மற்றவர்கள் மன்னிக்கவும்.)

உங்களிடம்,  ஒரு கேள்வி....

சின்ன வயதில் எப்படி இருந்தீர்கள்?

ஐந்து வயதில் பட்டம் விட்டு, எட்டு வயதில் சைக்கிள் ஒட்டி, பனிரெண்டு வயதில் கிரிக்கெட் விளையாடி, வயதுக்கு தகுந்த வாழ்க்கை வாழ்ந்திருப்பீர்கள். வெறுமனே புத்தகத்தைப் படித்து, பரிட்சை எழுதி பள்ளிப்  படிப்பை கடந்தவராக யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கவும் முடியாது. கட்டுரைப் போட்டியில் முதல்  பரிசோ, நீளம் தாண்டுதலில் வாங்கிய ரெண்டாம் பரிசோ நிச்சயமாய் உங்கள் வீட்டு டி.விக்கு அருகில் இருக்கும்.  சரஸ்வதி பூஜைக்கு மறக்காமல் துடைத்து சந்தன பொட்டு வைப்பீர்கள்.

ஒரு காலத்தில் நீங்கள் வாலிபால் சாம்பியனாக,(அல்லது  நீங்கள் எந்த துறையில் ஜொலித்திர்களோ, அந்த துறையை நினைத்துக் கொள்ளவும்).  பள்ளியிலும் கல்லூரியிலும் வலம வந்திருப்பீர்கள்.  இபோது என்ன செய்கிறீர்கள்?  பிசினஸ், மாத சம்பள வேலை,  கூட்டு குடும்பம், தனிக் குடும்பம், இல்லத் தலைவி என யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஏன் கேள்வி இதுதான்.
திருமணத்திற்கு பிறகும், அப்படியே வாலிபால் கிரவுண்டுக்கு செல்கிறீர்களா? இல்லையே?
சென்னை மெரினா நீச்சல் குளத்தில், தன் பத்து வயது மகனுக்கோ, மகளுக்கோ, நீச்சல் சொல்லித் தரும் அப்பாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த அம்மாவும் சலங்கை கட்டிக் கொண்டு மகளுடன் பரத நாட்டிய கிளாஸ் போவதில்லை. வீதி-யில் வளர்ந்த குழந்தையுடன் கிரிக்கெட்டும், டென்னிசும் ஆடும் அப்பாக்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனா அம்மா?

ஒரு காலத்தில் இவரும், ஏதாவது ஒரு மட்டையும் பந்துமாய்  பள்ளி மைதானத்தில் திரிந்தவர்கள் தானே?

சமிபத்தில் எங்கள் ஆபீஸ் சார்பாக, கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். ஆட்டமும் பாட்டமுமாக திருவிழா கலை கட்டியது.  போட்டி முடிந்ததும் அங்கு பணி புரியும் ஆசிரியைகளுக்காக போட்டி நடத்தினோம். ஒன்றுமில்லை, கண்ணாடி டப்பாவுக்குள் இருக்கும் சீட்டில் என்ன எழுதி இருந்ததோ, அதை அப்படியே நடித்துக் காட்ட வேண்டும்.

பெரும்பாலும், 'வடிவேல்  ஜோக் சொல்லுக, குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடவும்,  வெஸ்டன் பாட்டு பாடவும், ரஜினி டயலாக் ஒன்று" இந்த ரீதியில் தான் இருந்தது. அங்கு 20 -க்கும் மேற்பட்ட ஆசிரியைகளும் இருந்தனர். ஆனால் ஒருத்தர் கூட மேடை ஏறவில்லை. அத்தனை பெரும் சொல்லி வைத்த மாதிரி , சொன்ன பதில், 'எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு"
இதில் ஹெலன் என்ற ஆசிரியை அதே கல்லூரியில் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் படித்து  முடித்தவராம். அப்போது அவர்தான், கல்ச்சுரல் கோ-ஆர்டினேட்டர். பாட்டு நடனம், மிமிக்கிரி என பல பரிசு தட்டி சென்றவர், இன்று மேடை ஏறவே கூச்சப்பட காரணம் 'கல்யாணம"
 சொல்லி வைத்த மாதிரி, எல்லோரும் இதையே சொல்ல போட்டி நடத்திய, எங்களுக்கு வருத்தமாகிப் போனது. அப்போதுதான் கீதா என்ற ஆசிரியை மேடை ஏறினார். அவருக்கு வந்த சீட்டு, 'கவுண்ட மணியும் , அஜித்தும் உங்களைப் பெண் பார்க்க வந்திருந்தால் எப்படி நடத்து கொள்வீர்கள்?" என்பதுதான். மிக அற்புதமாக  நடித்ததோடு, வசனமும் பேசினார்.

அவருக்கான நேரம் முடிந்ததும், அத்தனை மாணவிகளும் அவரை சூழ்ந்து கொண்டனர். சந்தோசத்தில் கண்ணீரே வந்து விட்டது அவருக்கு. நாங்கள் கிளம்பும்போது, ''இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். காலேஜ் டேஸ்-ல நான் ஒரு டிராமா ஆர்டிஸ்ட். இன்னிக்கு வேலையும் வீடுமா நேரம் கழியுது. ரொம்ப நாள் கழிச்சு என்னையே நான் உணர்ந்தேன்"" என்றார். இது நிச்சயமாய் அவர் மனதில் ஏக்கத்தை திர்த்திருக்கும்.

திருமணம் ஆனா பின், இப்படி எத்தனை பேர் மேடை ஏறி இருக்கிறார்கள்? ஏன், ''மார்கழி மாசத்துல எத்தனை பேர் மேடை ஏறி பாடறாங்க? டான்ஸ் ஆடறாங்க? சினிமாவுல வராங்க?" என்று நீங்கள் கேட்கலாம்.

நான் கேட்டது, உங்கள் வீட்டு பெண்ணைப் பற்றி.........................
அப்பா நடு வாசலில் உட்கார்ந்து கொண்டு, கர்ண கொடூர குரலில் 'செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல்"என்று ஆரம்பிப்பார். திருமணத்திற்கு முன் சூப்பர் சிங்கராக இருந்த அம்மா, இன்று லேசா ஹம பண்ணினாலே, 'அங்க என்ன சத்தம் என்று பதில் வரும்"
எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் 'தன் மருமகள்,
இந்த வீட்டுக்கு பொருத்தமில்லை" என்றார் மாமனார். அதற்க்கு அவர் சொன்ன காரணம் மருமகள், 'வீடியோ கேம்ஸ்  விளையாடுகிறாள் என்பதுதான். எனக்கு தெரிந்து, எந்த சட்டமும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை  குற்றம்  என  சொல்லவில்லை.




எத்தனை பேருக்கு கிடைக்கிறது இப்படி விளையாடும்  வாய்ப்பு. சரி, உங்க அம்மா சின்ன வயதில் என்ன துறையில் திறமைசாலி என்று தெரியுமா உங்களுக்கு?  இல்லை. உங்களையே நீங்கள் தொலைத்து விட்ட பட்சத்தில், அம்மாவை எப்படி தேடுவது?

இன்னிய தேதியில், ரகுமானை விட சிறந்த இசை அமைப்பாளர்  இந்தியாவில் உண்டு என்று தைரியமாய் சொல்வேன். அதே சமயம், அந்த நபருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் அழுத்தி சொல்வேன். நம்மில் பலரும் அப்படித்தான். அங்கிகாரம் கிடைக்காததால், அறிந்து கொண்ட கலையை அப்படியே விட்டு விடுகிறோம். கல்யாணம் ஆனதும் அது இன்னும் சகஜமாகிப் போகிறது.
கல்யாணம் என்ன, கல்லறைக்கு செல்லும் பாஸா? இல்லையே? அப்புறம் ஏன்? கல்யாணம் ஆனால் என்ன? அதே உடல், அதே மனம்தானே?

மற்றவர்கள் தப்பா நினைப்பார்களே, என்ற காரணத்துக்காகவே, நமக்கு நாமே முகத்திரை போட்டுக் கொள்கிறோம். எப்போது வெளியே..........



விசில் அடிக்காதே,
துப்பட்டா  போடாமல் 
வெளியே போகாதே,
சத்தம் போட்டு பேசாதே,
ஆண் பிள்ளையை 
பெயர் சொல்லாதே,
நெற்றியில் குங்குமம் வை.
கருப்பு புடவை கட்டாதே.
அதிக நேரம் 
போன் பேசாதே.
தலைவிரித்து வைக்காதே,
மெதுவாய் சிரி.
அடுத்ததாய் சாப்பிடு.
சினிமாககாரனை ரசிக்காதே.
ஒற்றையாய் ஒரு தாலிதானே
கட்டிக்கொண்டேன்?
அதற்கு ஏன் 
இத்தனை கட்டளைகள்?







 





-
-