Monday, October 18, 2010

முகமூடி மனிதர்கள்

முதன் முறை வட்சலா மேடத்தைப் பார்த்ததுமே, இனி எனக்கு ஜெயம்-தான் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. ஆமாம், பிரபல தமிழ் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்து மாதம் இரண்டாகப் போகிறது. ஆனால் உருப்படியாக இன்னும் ஒரு பேட்டியையும் எடுத்த மாதிரி இல்லை. எடிட்டரிடம் பேச்சு வாங்கியதுதான் மிச்சம். நானும் முயற்சிக்காமல் இல்லை. இட்லி கடை நடத்துகிற பாட்டியில் ஆரம்பித்து இன்போஸிஸ் கம்பெனியின் தலைவர் வரை எல்லோரையும் பேட்டி எடுக்க முயற்சி செய்தாகிவிட்டது. சினிமாக்காரர்களை பேட்டி எடுக்க முயற்சித்ததில் ’புது ஆள், உனக்கு என்ன தெரியும்’ என தட்டிக் கழித்தனர்.


திறமைசாலிகளைத் தேடிச் சென்றால் அவர்களுக்கு பத்திரிக்கைக்கு தகுந்தமாதிரி பேசத் தெரிவதில்லை. நாமாக கேள்வி கேட்டாலும் வாய் பொத்தி சிரிக்கிறார்கள். அதைத் தாண்டி பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றிய செய்தியோ, கட்டுரையோ வர வேண்டும் என நினைப்பவர்களிடம் விஷயம் இல்லை. முகஸ்துதி பாடும் விளம்பரமாகவே இருக்கிறது அவர்கள் பேச்சு. திக்கிக் திணறி இதையெல்லாம் கட்டுரையாக எழுதித் தந்தால் `ஜீவனில்லை` என துரத்தி அடிக்கிறார் சப் எடிட்டர்.

இன்னும் ஒரு வாரம் அவகாசம். அதற்குள் உருப்படியாய் ஒரு பேட்டி எழுதித் தந்து வேலையை தக்க வைத்துக் கொள்கிற வழியைப் பார் என அலுவலகத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்ட மூன்றாவது நாளில் தான் வட்சலா மேடத்தை சந்தித்தேன். ஓவியர், சமூக சேவகி, கலை இலக்கிய வாதி என ஏகப்பட்ட பட்டங்களை சுமந்து கொண்டிருந்தவரிடம் என்னை அறிமுகப்படித்திக் கொண்டவுடன் முகம் மலர வரவேற்றார். தன்னைப் பற்றி அதிக விவரங்களை அடக்கத்துடன் தந்தவர் நிச்சயம் என் வேலையை காப்பாற்றி விடுவார் என நினைத்தேன்.

வட்சலா மேடம் சாதாரண மனுஷி இல்லை என அன்றே புரிந்து போனது. ஓவியங்களில் மிக கடினமானதும், திறமையானதுமான தஞ்சாவூர் ஓவிய பாணியில் கடவுள் உருவங்கள் வரைவதை மட்டுமே அவர் லட்சியமாக கொண்டிருந்தார், இலக்கியத்தில் இலக்கணங்களை கரைத்து குடித்தவராக இருந்தார். படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு பணம் தந்து உதவி செய்தல், ரக்‌ஷா பந்தன் (சகோதரன் நலமாக இருக்க வேண்டும் என அவரின் சகோதிரிமார்கள் கடவுளை பிரார்த்தனை செய்து, கையில் ராக்கி என்னும் கயிறு கட்டி விடுவார்கள்) அன்று இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ராக்கி கயிறு வாங்கி அனுப்பி வைப்பார். முதியோர் இல்லங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி வைப்பார். தவிர சமூக நல அமைப்பு ஒன்றில் சென்னை வட பகுதிக்கு தலைவியாக இருந்தார். அவரின் பிள்ளைகள் இருவரும் அமெரிக்க வாசிகள். மூத்தவர் அங்கு வேலை பார்க்க, இளையவரோ படித்துக் கொண்டிருந்தார். வட்சலா மேடத்தின் கணவர் சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர்.

அறிந்த விசயங்களை அழகான தமிழில் கோர்வையாய் எழுதிக் கொடுக்க, அது அடுத்த வார பத்திரிக்கையில் மூன்று பக்க கட்டுரையாக பெரிய புகைப் படத்துடன் வந்திருந்தது. அன்றே பத்திரிக்கையை தூக்கிக் கொண்டு டூவீலரில் அவரின் வீட்டிற்கு விரைந்தேன். மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்று பலகாரங்கள் தந்து உபசரித்தார். இதுவரை செய்தித்தாள்களில் ஓரிரு வரிகளில் அவரைப் பற்றி செய்தி வந்திருக்கிறதாம். முழுதாய் மூன்று பக்க அளவில் அதுவும் பிரபல பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வந்தது இதுவே முதல் தடவை என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் என்பது அவரது வார்த்தைகளில் தெரிந்தது. இனி நாம் இருவரும் நண்பர்கள், அடிக்கடி என் வீட்டிற்கு வர வேண்டும் என அவர் சொல்லும் போது `நடக்கிற விசயமா` என்றாலும் விரைவில் 52 வயதான வட்சலா மேடமும் 21 வயதான நந்தினி ஆகிய நானும் நண்பர்கள் ஆனோம்.

அந்த மாதக் கடைசில் நான் தங்கியிந்த மகளீர் விடுதியில் இருந்து மாற வேண்டிய சூழ்நிலை. ஏனோ விதி அவங்க இருக்கும் அதே ஏரியாவுக்கே என்னையும் இடம் மாற்றியது. அதிகாலை வாக்கிங் நேரத்தில் இருவரும் `ஹாய்` சொல்லிக் கொள்வோம். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதிய உணவுக்கு என்னை அழைத்தார். சென்னையில் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கியிருந்த எனக்கு அன்று அமிர்தமாக உணவு ருசித்தது. வீட்டில் பிள்ளைகள் யாரும் இல்லாததால் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். நானும் வேலை இல்லாத சமயங்களில் அங்குதான் இருப்பேன். ஊரில் இருக்கும் அம்மாவுக்கும் வட்சலா மேடத்தைப் பத்தி சொல்லி போனிலும் பேச வைத்தேன். வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் என்னை சுருக்கமாக `நந்து` என அழைக்க இவர் மட்டும் ஸ்பெஷலாக `நதி` என அழைப்பார். அந்த வார்த்தை உச்சரிப்பு மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்க இன்னும் அவரை எனக்கு பிடித்துப் போனது.


இருவரும் சேர்ந்து கபாலிஸ்வரர் கோயில், தீ நகர் ஷாப்பிங், அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லம் என சுத்தாத இடம் இல்லை. அவங்க வீட்டில் ரெண்டு கார் இருந்தும் என் டூவிலரில் வெளியே செல்வது என்றால் கொள்ளை விருப்பம் அவருக்கு. இந்த இரண்டு மாத பழக்கத்தில் ஒரு நாள், `நீ ஏன் என்னை மேடம்-ன்னு கூப்பிடற. அம்மா-ன்னு கூப்பிடலாமே`ன்னு வாய்விட்டே கேட்க மிகுந்த தயக்கத்திற்கு பிறகு வட்சலாம்மா என அழைக்க ஆரம்பித்தேன்.


ஒரு மாலை நேர மழை காலத்தில் பால்கனியில் அமர்ந்தபடி இருவரும் வெங்காய பக்கோடாவும் காப்பியும் சாப்பிட்டபடி கதையடித்துக் கொண்டிருந்தபோதுதான் மனதில் இருந்த அந்த ஆசையைச் சொன்னார். `நதி... எனக்கு ரொம்ப வருஷமா ஒரு ஆசை. பெண் குழந்தை வேணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா பிறந்தது ரெண்டும் பசங்க. அவங்க வளர்ந்து படிப்பு, வேலைன்னு பிஸியாகிட்டாங்க. அப்பத்தான் பெண் குழந்தை இல்லாத ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது. ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்க்கனும்ன்னு இப்ப வரைக்கும் நினைக்கிறேன். ஆனா இந்த வயசுல ஒரு கைக்குழந்தைக்கு அம்மா-ங்கிறதை சமூகம் எப்படி ஏத்துக்கும்ங்கிற தயக்கம் இருக்கு. அதையும் தாண்டி அந்த குழந்தை வளர வரைக்கும் நான் திடமா இருப்பேன்னான்னு தெரியலை` என்று அவர் சொல்லும் போது கண் கலங்கியிருந்தது. அவர் பேச்சில் எப்போதும் பெண்கள் பற்றிய உயர்வாக கருத்து இருக்கும். ஆண்களை நம்பாமல் சொந்த காலில் நிற்க வேண்டும், எந்த காலத்திற்கும் பெண் தளர்ந்து போகக் கூடாது என சொல்லிக் கொண்டே இருப்பார்.

அதுவரை எனக்கு பிடித்த வட்சலா மேடம், என்னுடைய ரோல் மாடலானார். அந்தஸ்து பார்க்காமல் பழகும் அவரின் பண்பு எனக்கு இன்னும் இன்னும் பிடித்துக் கொண்டே போனது. தீபாவளி சமயம் எனக்கு ஒரு சுடிதார் எடுத்து தந்தார். வறுமையின் நிழலில் வளர்ந்திருந்த நான் அந்த சுடிதாரின் விலையைப் பார்த்ததும் பிரமித்துப் போனேன். கொஞ்ச நாளில் எனக்காக நிஜமாகவே அம்மா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துக்கும் வரன் பார்க்க ஆரம்பித்தார்.

ஆனால் அவருடன் பழகிய அந்த ஏழு மாத காலத்தில் நான் எந்த உதவியும் அவரிடம் எதிர்பார்த்து நின்றது இல்லை. ஒரு முறை தன் கணவரின் அலுவலகத்திலேயே நல்ல பதவி வாங்கித் தருகிறேன் என்றும் சொன்னார். அவர் குறிப்பிட்ட சம்பளம் நான் இப்போது வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்கு இருந்தும் ஏனோ ஒப்புக் கொள்ள தோன்றவில்லை. என் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் கூட கேலி செய்வார்கள். `ஏன் நந்து.. பெரிய வி.ஐ.பி-யை கைக்குள் வைச்சிருக்க.அப்படியே செட்டில் ஆகிடு` என்று அக்கறையாய் அட்வைஸ் செய்தாலும், எனக்கு ஏனோ அவரிடம் உதவி கேட்க மட்டும் இஷ்டமில்லை. கேட்க கூடாது என கொள்கையாகவே வைத்திருந்தேன்.

ஆனால் அடுத்த வாரமே அவரிடம் கையேந்தும் நிலை வருமென எதிர்பார்க்கவில்லை. நான் தங்கியிருக்கும் விடுதியின் வேலைக்காரம்மா சாலை விபத்தில் ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டார். கணவரும் இல்லாத நிலையில் அந்தம்மா மற்றும் அவரின் மகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதானது. ஆதரவற்று நின்றவர்களை எங்கள் விடுதி நிர்வாகம் அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதித்தது. ஆனால் அந்த இளம் பெண்ணின் படிப்புக்கு உதவ முடியாது என்று கைவிரித்து விட்டது. வேலைக்காரம்மாவுக்கு தான் ஊனமானதை விட, மகளை படிக்க வைக்காமல் போன நிலை குறித்து மிக்க வருத்தம். எதோ என் வருமானத்திற்கு அந்த பெண்ணுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தர முடியும். ஆனால் பள்ளிக் கட்டணம் கட்டி முழு செலவையும் ஏற்க முடியாத நிலையில் வேறு வழியின்றி வட்சலா மேடத்தை சரண் அடைந்தேன்.

’நதி, நீ செய்ய நினைக்கிறது நல்ல விசயம்தான். மனமார உன்னை பாராட்டறேன். ஆனா ஒரு பெண் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட எனக்கு இஷ்டம் இல்லை. ஆண் புள்ளைன்னா படிச்சு சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாத்துவாங்க. பெண் புள்ளைங்க அப்படி இல்லையே? என்னிக்கு இருந்தாலும் கல்யாணம் ஆகிப் போறவங்க தானே. அந்தப் பொண்னு எப்படி ஊனமான தன் அம்மாவை கடைசி வரை வெச்சு காப்பாத்தும் சொல்லு? வேண்ணா நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரச் சொல்லு. இல்லை நானே நல்ல இடத்தில் வேலை வாங்கித் தரேன்`` என்று அவர் சொல்ல எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

`ஏன் பெண்ணா இருந்தா படிச்சு குடும்பத்தை காப்பாத்த மாட்டாங்களா? எல்லா பசங்களும் பெத்தவங்களை கடைசி வரைக்கும் பார்க்கறாங்களா என்ன? என்ற என் வாதத்துக்கு அவர் தந்த பதில் இன்னும் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

`இல்லை நதி. பெண்ணுங்களை படிக்க வைக்கிறது வேஸ்ட். சாரிம்மா என்னால அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முடியாது` என்று அவர் திட்டவட்டமாக சொல்ல வெறுப்பின் உச்சத்தில் `சரி நான் வரேன் மேடம்` என்று சொல்ல அந்த வார்த்தை மாற்றத்தில் கண்கள் சுருக்கி பார்த்தார். அதை பொருட்படுத்தாது நான் விடுவிடுவென வந்து விட்டேன்.

அதன் பின் அவர் வீட்டு வாசலை மிதிக்க எனக்கு இஷ்டமில்லை. என் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்தவர், சடாரென உடைந்து போனார். சமூக சேவை செய்வதும், பெண்ணியம் பேசுவதும் பணக்காரர்கள் அணிந்து கொள்ளும் முகமூடி என்பது புரிந்து போக, பேச்சிலேயே காரியம் சாதிப்பவர்கள் என அறிந்தேன். அது வரைக்கும் ஒரு சுயநல வாதியிடம் பழகியிருந்தேனே என்ற வருத்தம் இப்போது வரை இருக்கிறது எனக்கு.



பின்குறிப்பு: சொந்த அனுபவத்தில் உருவான இக்கதை ‘முகமூடி மனிதர்கள் என்ற தலைப்பில் ஆம்பல் பத்திரிக்கையில் வந்துள்ளது..  முடிந்தால் அங்கேயும் வந்து பாருங்கள்.

Monday, September 27, 2010

இது பார்த்த கதை

பாரதி ராஜா படம் பார்த்திருக்கிறீர்களா? அது மாதிரி ஒரு அக்மார்க் கிராமத்துப் பெண்-தான் நா ன். ஸ்கூல், காலேஜ் என எல்லாவற்றிலும் நகரத்து வாசனையே அறியாமல் வளர்ந்தேன். அப்படி ஒரு பெண்ணுக்கு சென்னை நகரத்தில் தனிக்குடித்தனம் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? வாரம் ஒரு சினிமா, ஹோட்டல், பீச், பார்க், ஷாப்பிங் என்று சுத்தி சந்தோஷமாய் காலம் கழிக்கலாம். ஆனால் என்னைக் கேட்டாலே அலறுவேன். இந்த நகரமே வேண்டாம் இறைவா.. மறுபடியும் கிராமத்தில் விட்டுவிடு ன்னு கெஞ்சுவேன்.

உடனே நகரத்தின் வேகத்தில் என்னை ஒட்டிக் கொள்ள முடியாமல் கிராமத்து நினைவுகளில் வாடி தனிமையில் தவிக்கிறேன் என எண்ணினால் சாரிங்க..... என் பிரச்சனை வேற. ரீல் இல்லாமயே என் பிளாஸ்பேக்கை சுத்திகாட்டினால்தான் புரியும்.


என் வீட்டுக்காரர் இங்கிருக்கும் தனியார் அலுவலகத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார். நானும் நர்சரி பள்ளி ஒன்றில் டீச்சராய் இருக்கிறேன். சென்னைக்கு வந்து வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு, முதல் நாள் ஸ்கூலுக்கு போகும் போது, மத்த டீச்சரெல்லாம் என்கிட்ட 'தனிக் குடித்தனமா, சொந்த ஊரு என்ன, இங்க உங்க வீடு எங்க-ன்னு' விசாரிச்சாங்க. நானும் அக்கறையா சொல்ல, நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சாங்க. இப்பத்தான் புரியுது அவங்களும் என்னை மாதிரியே கஷ்டப்பட்டிருக்காங்க. அப்படி என்னதான் கஷ்டம்ன்னு கேக்கறீங்களா?


இதோ ஆரம்பிக்கிறேன்.


இங்க வந்து சம்பளம் வாங்கி முதல் வார ஞாயிறு அவுட்டிங் பிளான் போட்டோம். காலையிலேயே கிளம்பி ஈ.சீ.ஆர் ரோடு போறது. லஞ்ச், டின்னர் எல்லாமே அங்கதான். அப்படியே சினிமாவும் பார்த்திட்டு லேட் நைட் வீட்டுக்கு வர்றதுன்னு ஐடியா பண்ணிட்டு தூங்கப் போனா, அடுத்தநாள் காலை ஆறுமணிக்கே காலிங் பெல் கதறியது. கதவை திறந்தால் என் மாமியாரின் தூரத்து சொந்தம் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றார்கள். 'எம் மவனுக்கு அடையார்-ல இண்டர்வியூ,. மெட்ராஸ் போறோம்ன்னு தெரிஞ்சவுடனே சிவகாமியக்கா (என் மாமியார்தான்) நம்ம வூட்டில்தான் தங்கணும்ன்னு சொல்லிடுச்சு. அதான் முதல் நாளே கிளம்பி வந்திட்டோம்'ன்னு சொல்ல, நானும் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை ஆசையாய் உபசரிச்சேன். காலை டிபன் சாப்பிட்ட கையோடு, 'இன்னேரம் சிவகாமி அக்காவா இருந்தா கோழி அடிச்சு குழம்பு வைச்சிருக்கும்" என்று அவர்கள் சொல்ல மதியமே கோழி வாங்கி குழம்பு வைத்தோம்.


அடுத்த நாள் அவங்களை இண்டர்வியூக்கு கூட்டிப் போக என் கணவர்தான் லீவ் போட்டார். அதற்கு அடுத்த நாள் சென்னையை சுத்திக்காட்ட நான் லீவ். ஒருவாரம் கழிச்சு அவங்க ஊருக்கு கிழம்பும் போது, அடிக்கடி வாங்கன்னு சொன்னது தப்புன்னு இன்னிக்கு வருத்தப்படறேன். பத்து நாள் கழிச்சு என் மாமனார் போன் பண்ணினார். தொகுதி எம்.எல்.ஏவைப் பார்க்க ஊர்க்காரங்க அஞ்சு பேர் வருவாங்க, வீட்டில் தங்க வெச்சு நல்லா கவனிச்சு அனுப்பங்கன்னும் சொன்னார். நாங்களும் நல்லாத்தான் பார்த்து அனுப்பினோம். ஆனால் அதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. (எங்க மாமா ஊரில் கவுன்சிலர் எலக்சனில் நின்னு தோத்துப் போனவர், அதுக்கே அரசியல்வாதி கணக்கா மாசத்துக்கு ஒரு தடவை சட்டசபையில் யாரையாவது பார்க்கணும்ன்னு நாலஞ்சு பேரோட கிளம்பி வந்திருவாங்க) சென்னை வந்த ரெண்டாவது மாசம், எங்க நாத்தனாரோட மச்சான் வேலை தேடி சென்னை வர, என் அண்ணன் வீட்டைத் தவிர வேறேங்கும் போகக் கூடாதுன்னு சொல்லியே அனுப்பியிருக்காங்க நாத்தனார். அவன் கொண்டு வந்த காசு ஐஞ்சே நாளில் கரைய, ஆரம்பிச்சது எங்களுக்கு தலைவலி. சொந்தக்காரனாச்சே, அதுவும் நாத்தனாரோட மச்சான், வேற வழி அவன் ஊர் சுத்த ஆட்டோ காசு குடுத்திட்டு நானும் என் ஹஸ்பெண்டும் பஸ் டிக்கெட்டுக்கே கடன் வாங்க வேண்டிய நிலை. இதை இப்படியே விட்டா சரிவராதுன்னு அவனுக்கு ஒரு வேலை தேடிக் குடுத்தோம். அப்பவும் ஒரு மாசம் தங்கிட்டுத்தான் கிளம்பினான். விட்டது ஏழரைன்னு நினைச்சா அதை விட பெரிய பூதமெல்லாம் வந்தது. பக்கத்து வீடுகளில் பத்து நூறுன்னு கை மாத்து வாங்கியிருக்கான். அவங்கெல்லாம் எங்களை கேக்க, பணம் குடுத்து தீர்த்தோம். இது கூட பரவாயில்லைங்க. ஹவுஸ் ஓனர் பொண்ணுக்கு ரூட் விட்டு ஊர் சுத்திட்டு வேலை கிடைச்சதும் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லாம கழண்டுக்கிட்டான். விசயம் வீட்டில் தெரிய வர, நாங்க வீடு காலி பண்ண வேண்டிய சூழ்நிலை.


அதற்குப் பிறகு இன்னும் ஏழரை எங்க வீட்டில் ரூம் போட்டு உட்கார்ந்தது. ஆமாங்க கோயம்பேடு பஸ் ஸாண்டுக்கு பக்கத்திலேயே குடி போக, ஊரில் இருந்து சும்மான்னாச்சுக்கும் சென்னை வரவங்க கூட எங்க வீட்டுக்கு வந்து தங்க ஆரம்பிச்சாங்க. வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா சந்தோஷப்படாம இப்படி வருத்தப்படறேன்னு நினைக்கிறீங்களா? என் கேரக்டர்-ல ஒரு வாரம் இருந்து பாருங்க தெரியும்.


பெரிய ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கணும்ன்னு ஒரு கூட்டம், ஹை கோர்ட்-ல கேஸ் நடத்துபவர்கள், சென்னையில் இண்டர்வீயூ இப்படி வாரம் ஒருமுறை யாராவது எங்க வீட்டில் இருப்பாங்க. எங்க வீட்டிக்கு `மினி ஹோட்டல்` என்று பக்கத்து வீடுகளில் பெயர் வைக்குபடி ஆகிடுச்சு. பின்னே எப்பவும் எங்க. வீடு ஜே ஜே-ன்னு இருக்கும். காலையிலேயும் நைட்டும் விதவிதமா சமைக்கணும். ஞாயிற்றுக் கிழமை லீவுதானேன்னு ரெஸ்ட் எடுக்க நினைக்க முடியாது. காலையில் ஆறு மணிக்கே கதவு தட்டும் சத்தம் கேட்கும் போது பத்திக் கொண்டு வரும். கொடுமை, வீட்டுக்குள்ள தானே இருக்கறோம்ன்னு நைட்டியோ, ஜீன்ஸ் குர்தாவோ போட்டுக்கிட்டு நிக்க முடியாது. அப்புறம் சிவகாமி மருமக சரியில்லைன்னு சொந்தக் காரங்களுக்கு மத்தியில் பேச்சு வந்திடும். (ஒரு முறை நானும் என் கணவரும் சோபாவில் சேர்ந்து உட்கார்ந்திருக்க, அதெப்படி ஆம்பிளைக்கு சமமா உட்காரலாம்ன்னு என் மாமியாரிடம் யாரோ பத்த வைத்திருக்கிறார்கள்).





ஒரு தடவை ஊரில் திருட்டு கேஸில் மாட்டிக் கொண்ட எங்க சொந்தக்காரர் ஒருவர் போலீஸில் இருந்து தப்பிக்க எங்க வீட்டுக்கு ஓடி வர அவரைத் தேடி போலீஸ் வர, அக்கம் பக்கம் பிரச்சனை ஆகி வேறு வீடு, அப்புறம் ஊரை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி வழக்கம் போல எங்க வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை தேடி வந்த கும்பல் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்ய, வீட்டை காலி செய்தோம். இப்படி நாங்கள் அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டு இருந்தாலும் விருந்தாளிகள் என்ற பெயரில் தொந்தரவுகள் வருவது மட்டும் குறையவில்லை.


சரி, வர்றதுதான் வராங்க, ஒரு போன் பண்ணி சொல்லிட்டு வரலாமே, அதெல்லாம் கிடையாது நேரா பெட்டியோடு வீட்டு வாசலுக்கு வந்திடுவாங்க. (முகவரி உபயம் வேறு யார் என் மாமியாரும் மாமனாரும்தான்). சில பேர் வந்திறங்கிட்டு போன் பண்ணி வந்து கூட்டி போகச் சொல்லுவாங்க. நிக்கிற இடத்தோட அட்ரஸீம் தெளிவா தெரியாது. கண்டுபிடிக்கறதுக்குள் நம்ம தலை உருளும். இன்னும் சில பேர் ஆட்டோ புடிச்சு நேரா வீட்டுக்கு வந்திட்டு, `என்னாம்மா இம்புட்டு காசு கேக்கறான் இந்த ஆட்டோகாரன். நீ பேசி செட்டில் பண்ணு-ன்னு சொல்லிவிட்டு நெடு நெடுன்னு வீட்டுக்குள் போய்டுவாங்க. நாமதான் 200, 300-ன்னு அழணும்.



அப்படியே வந்தாலும் சும்மா-வா இருக்காங்க, படிக்கட்டில் எச்சில் துப்பறது, கிராமத்து பழக்கத்துல பக்கத்து வீடுகள்ல போய் ஊர்கதை கேக்கறதுன்னு எதாவது செய்யப் போய் நாங்க `சாரி` கேக்க வேண்டியிருக்கும். மாசக் கடைசி நேரம் மளிகை கடையில் கடன் சொல்லி சாமான் வாங்க வேண்டியிருக்கும். வந்து செல்பவர்களில் சின்னப் பிள்ளைகள் இருந்தால் ஊருக்குப் போகும் போது காசு தந்து அனுப்ப வேண்டியிருக்கும். சமயத்தில் யாரேனும் எங்களுடன் ஷாப்பிங் வர நேரிட்டால் அவர்கள் வாங்குவதற்கும் பில் கட்ட வேண்டியிருக்கும். இங்க வந்த புதுசில் ஸ்கூல் பசங்களுக்கு டியூசன் எடுத்துக்கிட்டு இருந்தேன். வர்றவங்க நடுஹாலில் உட்கார்ந்து சத்தமா அரட்டை அடிச்சா அந்த புள்ளைங்க எப்படி படிக்கும். மூணே மாசத்தில் டியூசன் வர்றது நின்னிடுச்சு. மாசம் 1500 ரூபாய் வருமானத்திற்கு ஆப்பு. இதில வர்றவங்களுக்காக லீவ் எடுத்தா சம்பளத்தில் கட்.

இதைவிட பர்சனலா ஒரு விசயம் சொல்லட்டுமா, அடிக்கடி ஆட்கள் வர்றதில் என் புருஷன்கிட்ட கூட சரியா பேச முடியறது இல்லை. ஒத்தையா கல்யாணம் ஆகாத இளம் பெண் யாராவது வந்தா அந்த பொண்ணை ஹாலில் தனியா படுக்க வைக்க முடியுமா? அவளுக்கு துணையா பெட்ரூமில் நான் இருக்க, என் புருஷன் ஹாலில் தூங்குவார். ஒருமுறை எண்ட்ரன்ஸ் கோச்சிங்காக வந்த பொண்ணு ஒன்றரை மாசம் எங்க வீட்டில் தங்க, என் புருஷனைப் பார்க்க பாவமா இருந்தது.


என்ன உங்களுக்கே என்னைப் பார்த்தா வருத்தமா இருக்கா? இது சென்னை வாழ்க்கையோட ஒரு பக்கம்தான். இன்னோரு பக்கமும் சொன்னா இன்னும் பீல் பண்ணுவீங்க. ஊரில் இருந்து போன்-ன்னாவே அலற அளவுக்கு எங்க நிலைமை ஆகிப் போயிருச்சு. பின்னே எவனாவது போன் பண்ணி, `அக்கா ஜாவா புக் வாங்கி அனுப்புங்க`ன்னு சொல்லுவான். நானும் பாரீஸ்-ல தேடிப் புடிச்சு வாங்கி அனுப்புவேன். ஊருக்கு போகும் போது அந்த புக் காசு பத்தி வாயே திறக்க மாட்டாங்க. சென்னையில் புடவை கம்மி விலையாமே, குடவுன் தெரு-ல ரெண்டு காட்டன் புடவை எடுத்துவான்னு பக்கத்து வீட்டம்மா சொல்லும். வாங்கிப் போனா கலர் சரியில்லை மாத்தி தாம்பாங்க. அடுத்த முறை ஊருக்கு போகும் போது மாத்திட்டு போனா, இதை விட நல்லதா சைக்கிளில் புடவை விக்கறவன் கொண்டு வருவான்-ன்னு சொல்லுவாங்க. அவன்கிட்டேயே வாங்க வேண்டியது தான பக்கி,-ன்னு கத்த தோணும். இப்படி சயின்ஸ் ரிசர்ச் புக், கவர்மெண்ட் வேலைக்கு அப்பிளிகேஷன், புது மாடல் செல்போன்-ன்னு எதாவது வாங்கிக்கிட்டு போகணும். அதில் பாதிக்கும் பாதி காசு திரும்ப வராது. ஊரில் காது குத்து, கல்யாணம் வைச்சாலும் மறக்காம லீவ் போட்டு போய் வரணும். இல்லாட்டி மெட்ராஸ் போன சிவகாமி புள்ளையும் மருமகளும் நம்மை மதிக்கலைன்னு சொந்தக்காரங்க பேசுவாங்க. அப்புறம் என் மாமியார் சாமியாடாம விடமாட்டாங்க.


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இல்ல எங்க வீட்டுக்கு மட்டும்தான் இப்படி தொல்லைகள் இருக்கா? இல்லை கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் செட்டில் ஆகியிருக்கிற எல்லோரும் இந்த பிரச்சனை இருக்கா? அதை விடுங்க இந்த வாரம் பீரியா சந்தோஷமா வீட்டில் யாரும் இல்லாம நானும் என் புருஷனும் மட்டும் இருக்கோம். அட ஆமாங்க. எங்க தூரத்து சொந்தத்தில் இருந்து சினிமா-ல சேரணும்ன்னு ஒருத்தன் வந்து இருபது நாள் தங்கியிருந்தான். என் மாமனாரோட தங்கச்சி பொண்ணு ஐ.ஏ.எஸ் கோச்சிங்-காக ரெண்டு மாசமா தங்கியிருந்தா.. அவங்க ரெண்டு பேருக்கும் லவ்வாகி ஊரை விட்டு சாரி எங்க வீட்டை விட்டு ஓடிட்டாங்க. நாங்கதான் அதுக்கு உடந்தை-ன்னு ஊரில் எங்க மேல கோபத்தில் இருக்காங்க. `இப்பத்தான் நிம்மதியா இருக்க முடியுதுன்னு என் புருஷனும் சந்தோஷப்படறார். நேத்து ரொம்ப மாசத்துக்கு பிறகு நாங்க ரெண்டு பேர் மட்டும் பீச், சினிமா, அப்படியே ஹோட்டலுக்கும் போனோம். ஊரில் கெட்ட பேரு வந்தாக் கூட பரவாயில்லைங்க. ஞாயிற்றுக் கிழமை ஒன்பது மணி வரைக்கும் தூங்க முடியுதே? அப்பாடி... அது போதும்.. ஹலோ.. இருங்க போன் அடிக்குது.. மறுபடியும் யார் வரப்போறாங்கன்னு தெரியலையே? ஆண்டவா என்னைக் காப்பாத்து..


பின்குறிப்பு: இது நான் சென்னையில் தங்கியிருக்கும் போது- பக்கத்து வீட்டுக்கு அக்காவுக்கு ஏற்பட்ட சம்பவம். அதை அவர் சொல்வது போல எழுதினேன். நிச்சயமாய் நீங்களும் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்து/உணர்ந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..

Friday, July 9, 2010

எஸ்க்கியூஸ் மீ... எனக்கு ஒரு டவுட்...

வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிற இந்த சமயம் டி..வி.டி மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் தினமும் 2 தமிழ் சினிமா பார்க்கிறேன். (1970-யில வந்த படம் தொடங்கி டப்பிங் படங்களும் அதில் அடக்கம்). அதன் விளைவே இந்த பதிவு.

டவுட் நெ 1:
                          நாலஞ்சு பொண்ணுங்க மொத்தமா நடந்து வரும் போது,  பளீர்-ன்னு காட்டற ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரே?  அப்புறம் ஹீரோ போற காபி ஷாப், பஸ் ஸ்டாண்ட்-ன்னு எல்லா இடத்திலேயேயும் அந்த பொண்ணும் இருக்கே அது எப்படி?

அதே மாதிரி நிஜத்தில் யாருக்கேனும் லவ் வந்திருக்கா?

டவுட் நெ 2:
                          மலை உச்சியில் இருந்து தண்ணிக்குள்ள குதிக்கும் போதோ (நீச்சல் தெரியாட்டியும்),  அடுக்கு மாடியில் இருந்து ஓடற லாரி மேல குதிக்கிறப்பவும்  ஹீரோவுக்கு ஒன்னுமே ஆகறதில்லை.

ஆனா மாடியில் இருந்து படிக்கட்டில் உருண்டு விழற அம்மா கேரக்டரும், மனைவி கேரக்டரும் ஸ்பாட்டிலேயே செத்து போறாங்களே அது எப்படி?

டவுட் நெ 3:
                   ஹீரோ-வோட காதலியையோ, குடும்பத்தையோ கடத்தி வெச்சுக்கிட்டு வில்லன் மட்டும் மிரட்டறாரே?

வில்லனோட குடும்பத்தை கடத்தி வெச்சிக்கிட்டு ஏன் ஹீரோ மிரட்ட கூடாது?

டவுட் நெ 4:
                        ஹீரோவோ, வில்லனோ நினைச்சவுடனே பிளைட் புடிச்சு அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ கிளம்பி போறாங்களே?

அவங்களுக்கு மட்டும் எப்படி உடனே டிக்கெட் கிடைக்குது? விசா இல்லாம எப்படி போறாங்க? அதுவும் இல்லாம விசிட்டர் விசாவா இருந்தால் கூட அப்பிளை பண்ணி ரெண்டு வாரமாவது ஆகணுமே?

(நமக்கு ஏற்காடு எக்ஸிப்ரஸில் ஊருக்கு போக டிக்கெட் எடுக்கவே ஒரு மாசத்துக்கு முன்னாடி புக் பண்ண வேண்டியிருக்கு?)

டவுட் நெ 5:

ஹீரோயினை கடத்திக்கிட்டு வர்ற வில்லன், இப்பவே நமக்கு கல்யாணம்-ன்னு சொல்லி தயாராக சொல்லறார். ஹீரோயினும் புடவை கட்டிக்கிட்டு வராங்க? எப்படி அவங்களுக்கு புடவையெல்லாம் எடுத்து பிளவுஸ் தைச்சு ஏற்கனவே வைச்சிருப்பாங்களா?

சரி வில்லனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லாத ஹீரோயின் ஏன் நகையெல்லாம் போட்டு தலை நிறைய பூ வைச்சு, புல் மேக்கப்போட வராங்க?


டவுட் நெ 6:
ஹீரோ ஓங்கி ஒரு அடி அடிக்கும் போதே வில்லனோட அடியாள் கீழே விழுந்தடறார்.
ஆனா வில்லன் துப்பாக்கியால சுட்டு மயங்கி விழுந்த பிறகும், எந்திரிச்சு ஹீரோ சண்டை போடறாரே அது எப்படி?

டவுட் நெ 7:

அதெப்படி ஊருக்குள்ள ஆயிரம் பேர் இருந்தும் வில்லன் பண்ற அநியாயங்களை ஹீரோ மட்டும் கண்டுபிடிக்கிறார்?

(அவருக்கு கவர்மெண்ட்-ல ஒரு வேலை போட்டு குடுத்தா, நடக்கிற எல்லா ஊழல்களையும் கண்டுபிடிச்சிடுவாரே.. யாராவது எம்பிளாய்மெண்ட் ஆபீசில் சொல்லுங்களேன்.)

டவுட் நெ 8:

கோமா ஸ்டேஜில் இருக்கற ஹீரோ, அத்தனை தடவை டாக்டர் முயற்சி செஞ்சும் கண்விழிக்காம, எப்படி ஹீரோயின் விடற கண்ணீர், மேல படும் போது மட்டும் எந்திரிக்கிறார்?

நடக்கவே முடியாம படுத்திருந்தவரால எப்படி, உடனே ஆக்ரோஷமா கத்தி வில்லனை அடிக்க முடியுது?


டவுட் நெ 9:

வில்லனோட அடியாட்கள், மொத்தமா பத்து பேர், பன்னிரெண்டு பேர் ரோட்டில அரிவாளோட சுத்தறாங்களே? அது மாதிரி நிஜ வாழ்க்கையில் யாராவது தெருவில் அரிவாளோட போறாங்களா?

டவுட் நெ 10:

எல்லா ஹீரோவும் ரயிலேறி சென்னைக்கு வராங்களே அது எந்த நம்பிக்கையில?  அப்படி வந்தபிறகும் ஒரு வேலையும் இல்லாம, செல்போன், பைக்-ன்னு எப்படி அவங்களால சுத்த முடியுது?  அட்லீஸ் ஹீரோயினுக்கு வாங்கித் தர ஐஸ்கீரிம் காசுக்கு என்ன பண்ணுவாங்க?

பின்குறிப்பு: இதெல்லாம் சினிமா பார்க்கற எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது.. உங்க அறிவுக்கும் திறமைக்கும் இன்னும் பல டவுட்ஸ் வரும் மக்கா..

Wednesday, June 30, 2010

நீ என்பது நானல்லவோ...

என் காலத்தின் சக்கரம் நீ!
நீ தவறிவிட்ட நிமிடம் நான்!

என் பக்கங்களின் ஆதிச் சுழி நீ!
உன் எழுத்துக்களின் முற்றுப்புள்ளி நான்!

என் உலகத்தின் ஆதிமானுடம் நீ!
நீ கடந்துசென்ற பாதை நான்!

என் வெளிச்சங்களுக்கு காரணம் நீ!
உன் இருளின் பிம்பம் நான்!



என் ஓசைகளின் பரம்பொருள் நீ!
உன் ஒற்றை மெளனம்  நான்!

நான் வரைந்த ஓவியம் நீ!
நீ கிறுக்கிய காகிதம் நான்!

என் வானில் முழு நிலவு நீ!
உன் உதிர்ந்த நட்சத்திரம் நான்!

நான் சேமித்த பொக்கிஷம் நீ!
நீ தூக்கி எறிந்த குப்பை நான்!

Thursday, June 24, 2010

நான் கடவுள்

சாரி ராஜி .. நீங்களும் கடவுள் பத்தி தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அதுக்குப் பிறகு ஏனோ ஒரு போஸ்ட் கூட போடமுடியலை. ஏதாச்சும் சாமி குத்தமா இருக்குமோ?

வழக்கமா எல்லா தொடர் பதிவுகளும், சின்ன வயசில் இருந்து என்று ஆரம்பிக்கும். அதே மாதிரியே நானும் ஆரம்பிக்கிறேன்.

`சின்ன வயசில் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பாட்டி வீட்டுக்குப் போயிருந்தபோது, பக்கத்து வீட்டு மரத்தில் எலுமிச்சை பழம் திருடி வீட்டுக்கு கொண்டு வந்தோம். திருடினா சாமி கண்ணைக் குத்திடும் என்று பாட்டி சொன்னதில் இருந்து கடவுள் என்பவர் அன்றிருந்து எனக்குள் ஒரு ஹீரோ ஆகிப்போனார்.

அதன் பின் எல்லாவற்றிற்கும் எனக்கு சாமிதான் அடிப்படை. நாலாவது படிக்கும் போது, `ஏன் இந்தியா பாகிஸ்தான் கூட சண்டை போடணும். சாமிக்கு சர்க்கரை பொங்கல் வைச்சு வேண்டிக்கிட்டா, சண்டை வராதே-ன்னு நினைச்ச ஆளு நான். ஜாமிண்ட்ரி பாக்ஸ் தொலைஞ்சு போச்சுன்ன்னாக் கூட கடவுள்-க்கிட்ட சூடம் பத்தி வெச்சு தேடிச் தர சொல்லிக்கிட்டு இருந்தேன்.

வளர வளர நிறைய பிராத்தனைகள் இருந்தது. அது நிறைவேறாத போது கடவுள் மீது கோபம் வந்தது.. ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கிற என கோபத்தில் கத்தி அழுவேன். கொஞ்ச நாள் உன் மூஞ்சியிலியே முழிக்க மாட்டேன் என்று டூ விட்டுவிட்டு பின் எதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் சரண்டர் ஆகிவிடுவேன்.

அப்போதெல்லாம் சாமி வந்து ஆடுபவர்களைப் பார்த்தால் எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். நல்ல மனது உடையவர்களுக்கும் பக்தி நிரம்பியவர்களுக்கும்தான் சாமி வரும் என நினைப்பேன்.

அம்மா பிரேமா மேல்மருவத்தூர் கோயிலின் தீவிர பக்தை.. எனக்கும் அந்த கோயிலுக்கு இருமுடி கட்டி கூட்டி போவார்கள். பிரதோஷம், சனிக்கிழமை இப்படி விரதம் இருப்பதற்காகவே காரணம் தேடும் நல்ல மனசுக்காரி அம்மா பிரேமா.

கொடுமுடியில் மகுடேஷ்வரர் கோயில் உண்டு. ஆற்றங்கரையில் மிக அழகாக இருக்கும். அந்த கோயில்தான் பள்ளி காலத்தில் தோழிகளுடன் சுற்றிய பொழுது போக்கு இடம். பிளஸ் டூ படிக்கும் போது, பழனிக்கு பாதயாத்திரை போயிருக்கிறேன்.

படிப்பு முடிந்த்து கோவையில் நான் படித்த கல்லூரியும் மருதமலை அடிவாரத்தில். நான் தங்கியிந்த ஹாஸ்டல் அருகிலேயே பெருமாள் கோவில் இருக்கும். (அங்கே தரும் புளிசாதமும் சர்க்கரைப் பொங்கலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.நான் கோயிலுக்குப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்).  காலேஜ் போகும் போதெல்லாம் அந்த சாமிக்கு விஷ் பண்ணாமல் போனது கிடையாது.


பக்தி முத்திப் போய் ஊர் மாரியம்மன் கோயில் தீ மித்திருக்கிறேன்.. எல்லாம் நான் சென்னையில் வேலைக்குச் சேரும் வரைதான். அதன் பின் எனக்கும் கடவுளுக்குமான இடைவெளி பெருகியது.

மரம் சூழ கோயில் பார்த்த எனக்கு, சென்னையில் செங்கல் கட்டிடத்திற்குள் பார்த்த சாமிகளை பிடிக்கவில்லை. வேலை நேரம் காரணமாக கோயிலுக்கு போக பிடிக்காமல் போக என் போக்கும் மாறியது. அதற்கு காரணம் என் அலுவகத்தில் என்னுடன் வேலை பார்த்தவர்கள்.

`சிவ பெருமான் இப்ப இருந்தார்-ன்னா புளு கிராஸில் அரஸ்ட் பண்ணிருவாங்க.. புலித் தோல் போர்த்திக்கிட்டு சுத்தறார்` என கேலி செய்யும் ஆட்கள். சொல்லப் போனால் கடவுள் இல்லை என்னும் கூட்டம். அவர்களுடன் சேர சேர எனக்கும் சாமி குறித்த நம்பிக்கை மாறியது.. `நீயெல்லாம் ஈரோட்டுக்காரப் பொண்ணா, உங்க ஊரில் இருந்த பெரியார் எத்தனை சொல்லும் புத்தி வராதா உனக்கு` என என்னிடம் கேட்டபிறகுதான நிறைய யோசிக்க ஆரம்பித்தேன்.

கடவுள் பேரைச் சொல்லி நாம்தான் ஏமாற்றிக் கொள்கிறோம். லிட்டர் லிட்டராக சிலைகள் மேலே கொட்டும் பாலை, ரோட்டில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு தரலாமேன்னு என்று நான் யோசித்த நாளில், எனக்குள் நாத்திகமும் ஆத்திகமும் இல்லாத பெண்ணைக் கண்டேன்.

சாமி சாமி-ன்னு லட்ச கணக்கில் நன்கொடை தருகிறீர்களே, ஒரு ஏழை பொண்னின் கல்யாணத்திற்கு உதவி செய்யுங்களேன் -ன்னு எதிர் வாதம் செய்கிறேன் இப்போது வரைக்கும்.

`பொட்டப் புள்ளையா பொறந்திட்டு சாமியை பகைச்சுக்காத` என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதுக்காக கோயிலில் உட்கார்ந்திருந்தா காசு வந்திருமா, இந்த மாசம் வேலைக்கு போனாத்தான் சம்பளம் கிடைக்கும் என்று பதில் சொல்லியிருக்கிறேன்.

ஆக இப்போ எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சாமி பாட்டுக்கு கோயிலில் இருக்கட்டும், நாம் பாட்டுக்கு வேலையைப் பார்ப்போம். பாவமும் புண்ணியமும் ஏற்கனவே எழுதப்பட்டது. அதை மாற்ற முடியாது என விதியின் வீதியில் செல்கிறேன்...

Wednesday, June 9, 2010

அன்றிலிருந்து பூக்கள் பிடிக்கவில்லை


காலையில வாசல் தெளிக்கவும்
மணமணக்கும் பூவோடுதான்
லட்சுமி அத்தை வருவாள்!

முதல் குழந்தை பெத்துக்க
டவுன் ஆஸ்பத்திரிக்கு போனப்ப
மறக்காம பூ வெச்சிக்கிட்டாள்!

‘நீ வாக்கப்பட்டது
என் மகனுக்கா? இல்லை
மல்லிகை செடிக்கான்னு?
கேலியா பாட்டி கேட்பாள்!

பூ வாங்கன்னு போன
துரை மாமா, ராக்காயி கூட
ஓடினதால மல்லிகை புடிக்கலை.




‘இந்தியாவின் தேசிய பூ
தாமரை-ன்னு சொன்னது
பாரதி டீச்சர்தான்!

தண்ணீரில் ஒட்டாத தாமரை
இலையாட்டம், குடிகார புருஷனை
விலகி வந்தாங்க டீச்சர்.

அடம் புடிச்சு அழுதேன்னு
தஞ்சாவூரிலிர்ந்து பத்து ரூபாய்க்கு
ரெண்டு பூ வாங்கித் தந்தாங்க!

விபத்துக்கு டீச்சர் பலியாகி,
இறுதி ஊர்வலத்துல பார்த்ததுல
தாமரை பூவை புடிக்கலை!



 பிறந்தப்ப ரோசாப்பூ நிறமுன்னும்
ஊரே ரசிச்சதுன்னும்,
கொஞ்சறப்ப அம்மாச்சி சொல்லும்!

நேரு மாமா கணக்கா
சட்டையில பூ தைச்சு திரிவேன்
பள்ளிக் கூடம் போறப்ப!

ஒரு லட்சம் காசிருந்தாலும்
ரோசா பூவா வாங்கிருவான்னு
சிநேகிதக்காரங்க சொல்லுவாங்க!

காதலிக்கிறேன்னு சத்தியம் பண்ணியவன்
 மைதிலிக்கு ரோசாப்பூ தந்தான்னு
தெரிஞ்சதுல ரோசா புடிக்கலை...

Sunday, June 6, 2010

கேட்க மறந்த காதல்

கல்யாணம் ஆன நான்கு மாதத்தில் இதுவரை நூற்றி இருபத்தி எட்டு  தடவை கேட்டிருப்பாள் ஆனந்தி..

``ஏங்க உங்க கேர்ள் பிரெண்ட் என்ன பண்ணறாங்க. ஒருநாள் எனக்கு அறிமுகம் செஞ்சு வையுங்களேன்``..

`இல்லம்மா.. அப்படி யாரும் எனக்கு இல்லை` என நானும் இருநூற்று ஐம்பத்து ஆறு முறை பதில் சொல்லியிருப்பேன்..

இது ஒருநாளைக்கு ஒருமுறை என்று இருந்தால் கூட பரவாயில்லை. நாள் ஒன்றுக்கு பல முறையும், மாதம் ஒன்றுக்கு சில முறையும் ஆனந்தியால் கேட்கப்படும் கேள்வி.

`இன்னிக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.. அவளை முதன் முதலில் எங்க பார்த்தீங்கன்னு சொல்லுங்க` என ஒற்றை கால் பிடிவாதமாய் நிற்பாள். அடுத்த நிமிடமே `சூப் சாப்பிடறீங்களா?` என சகஜ நிலைக்கு மாறிவிடுவாள். பரவாயில்லை இனி கேட்க மாட்டாள் என நினைக்கவும் முடியாது.

டிராபிக் சிக்னலில் பைக்கில் நிற்கும் போது, கண்ணுக்கு தட்டுப்படும் அழகான பெண்ணைக் காட்டி `இவ மாதிரி இருப்பாளா, உங்க ஆளு`என்று அன்றைய கச்சேரியை ஆரம்பிப்பாள்.

அதற்காக இதுவரைக்கும் ஒருநாள் கூட ஆனந்தியின் மீது கோபப்பட்டதோ, எரிச்சல்பட்டதோ இல்லை. விளையாட்டுப் பெண்ணின் சீண்டலாகவே தோன்றும்.

நான் வசந்த். இந்திய விவசாய குடிமகனின் மகன் என்ற காரணத்துக்காக கிடைத்த ஸ்காலர்ஷிப் பணத்தில் படித்துவிட்டு, இந்தியாவைத் தவிர பிற நாடுகளுக்கு வேலைப்பார்ப்பவன். டெல்லிவாசி, சமுதாயம் என்னை ஐ.டி ஊழியர் என்கிறது.

இலக்கண விதிப்படி 27 வயதில் பெண் பார்த்து 28-யில் நான் திருமணம் செய்துகொண்டவள்தான் ஆனந்தி..

முதல் இரவில் அவள் கேட்ட கேள்வியே, `வரதட்சனை வேண்டாம்ன்னு சொல்லி என்னை கட்டிக்கிட்டீங்க.. எதாச்சும் லவ் பெயிலியரா` என்பதுதான்.  வெடிச் சிரிப்பு சிரித்தபடி அவள் ஆப்பிள் கன்னத்தை கிள்ளினேன்.

கல்யாண களை, விருந்து எல்லாம் முடிந்து டெல்லியில் நானும் அவளும் தனிக்குடித்தனம் புகுந்தோம். வந்த முதல் நாளே, `இந்த வீட்டை உங்க காதலிக்காக பார்த்து பார்த்து அலங்கரிச்சு வைச்சிருப்பீங்க.. நான் புழங்கி அழுக்காக்கினா அவங்க கோபப்படமாட்டாங்களா?` என்று ஆனந்தி கேட்கும் போது, மெல்ல முருவலுடன் அவளின் தலைகோதி விட்டேன்.

அதன் பின், என்காதலி குறித்த அவளின் கேள்விகளும் என் பதில்களும் பழக்கமான ஒன்று.

அனுமார் தன் நெஞ்சை பிளந்து காட்டிய மாதிரி என்னாலும் முடிந்தால், என் இதயத்தை திறந்து காட்டி, அவளைத் தவிர யாருக்கும் அங்கே இடமில்லை என்பதை நிருபிக்கவேண்டும்..

என்ன சினிமாத்தனமாக பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஆனந்தியின் அடத்தில் ஒரு நாள் சிக்கிப் பாருங்கள் தெரியும்.

அன்று ஆபீஸ் பார்ட்டி முடிந்து வரும் போது மணி பனிரெண்டை தாண்டி இருந்தது.  டி.வியில் ஏதோ குத்துப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க, எங்கோ பார்வையை செலுத்தியபடி அமர்ந்திருந்தவள் என்னைப் பார்த்ததும் `என்ன உங்க ஆளு கூட சேர்ந்து செம ஆட்டமா.. தண்ணி அடிச்சிருப்பீங்க போலயிருக்கு` என்று அர்த்த ராத்திரியில் குரல் உயர்த்தியவளுக்கு  அலட்சிய சிரிப்புடன் நான் நகர்ந்தது,  கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

`நில்லுங்க.. நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டு இருக்கேன்.. திமிரா போறீங்க.. என்னைப் பார்த்தா லூசு மாதிரி இருக்கா?`என்று கத்த ஆரம்பித்தாள். அழுகை சத்தமும் கேட்டது.

ஒருநிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை. பின் அவளருகில் சென்று கைகளை பிடித்தபடி அந்த கண்களை உற்று பார்த்தேன்.

என்ன நினைத்தாலோ அழுகையை நிறுத்திவிட்டு, `ஒருநாள் கூட உங்களுக்கு என் மேல கோபமே வந்ததில்லையா, ஏன் பதிலுக்கு என்கிட்ட, என் காதலைப் பத்தி கேட்டு சீண்டனும்ன்னு கூட தோணலையா?` என்றாள்.

`உன் குழந்தைதனமான முகத்தைப் பார்க்கும் போது, நீ எந்த தப்பும் செய்யலைன்னு தோணுது`என்றேன் அவள் கன்னம் வருடியபடி.

அந்த வார்த்தையில் உடைந்தவள் போல, விருக்கென என் கைகளை உதறி விட்டு, `இல்லைங்க..  நீங்க கேளுங்க.. அப்பத்தான் ரவி மாமாவைப் பத்தி சொல்ல முடியும்.. அவருக்கும் எனக்கும் இருந்த காதலைப் பத்தியும் சொல்ல முடியும்` என்றாள்.

Tuesday, June 1, 2010

பரிட்சை என்றாலும் பயம் எமக்கு....

 இது நான் எழுதப் போகும் ரெண்டாவது தொடர்பதிவு.. முதல் பதிவான ‘பேருந்தில் காதல் பதிவு” க்கு பனித்துளி சங்கர் அழைத்திருந்தார்.. ஓவர் பில்டப் குடுத்து ஆரம்பித்துவிட்டு, ‘சாரிங்க மக்கா.. எனக்கு அப்படி எந்த சம்பவமும் நடவக்கவில்லை.. நானெல்லாம் நல்ல பொண்ணாக்கும்ன்னு தப்பிச்சாச்சு..

இப்போ, அகல்விளக்கு ‘நான் கடந்து வந்த தேர்வுகள்”ங்கிற தலைப்பில் எழுத அழைத்திருக்கிறார்.. இதுக்கு மறுக்கமுடியாதே.. ஏன்னா நாங்கெல்லாம் எஜிகேட்டேட் பேமிலி-யாக்கும்.. சரியா..

‘எங்கம்மா பிரேமா ஸ்கூல் டீச்சர்...(இப்போ அம்மா மட்டுமல்ல, பெரியம்மா பொண்ணுங்க மூணு பேரும், மாமா பொண்னு, பையன் அவங்க மனைவி-ன்னு குடும்பமே டீச்சர் குடும்பம்.. அதில தப்பியது நான் மட்டும்தான்).  அதனால ரெண்டு வயசில இருந்தே ஏ.பி.சி.டி படிக்க வேண்டிய கட்டாயம்.. தோசை சாப்பிடும் போதுகூட ஒன்.டூ. திரி-ன்னு சொல்லிக்கிட்டே சாப்பிடணும்..
அது கூட பரவாயில்லை, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு யார் வந்திட்டாலும் போதும், ‘ பாபா பிளாக்‌ஷீப் ரைம்ஸ் சொல்லு.. ஐந்து கரத்தனை’ பாட்டு பாடுன்னு நம்மை வெச்சு ஒரு மினி எக்ஸிபிஷனே நடத்துவாங்க..

ஊரில் நான் யூ.கே.ஜி படிச்ச ஸ்கூலில் எங்கம்மாவும் டீச்சரா இருந்தாங்க.. அப்போல்லாம் டிக்டேஷன் -ன்னு ஒரு டெஸ்ட் இருக்கும். அதாவது மிஸ் இங்கிலீஷ்-ல ஒரு வார்த்தையை சொல்லுவாங்க.,. அதுக்கு ஸ்பெல்லிங் நாம எழுதணும். கொஞ்ச நேரம் முழிச்சிட்டு, மிஸ் வாட்டர் குடிக்க போறேன்னு ஜகா வாங்கிட்டு, நேரா எங்கம்மா கிளாஸ் ரூம்க்கு ஓடிப் போய், சரியா ஸ்பெல்லிங் கேட்டு எழுதுக்கிட்டு வந்திருவேன்.. எப்பூடி? 

ஆனா அன்னிக்கு ஆரம்பிச்சு காலேஜ் படிக்கிற வரைக்கும் எனக்கு இங்கிலீஷில் பீ என்ற வார்த்தைக்கும் டீ என்கிற வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாது.. b எழுத வேண்டிய இடத்தில் d எழுதிவேன்.. அதுக்காக எங்கம்மாக்கிட்ட முட்டி தேயற வரைக்கும் அடி வாங்கியிருக்கேன்.. பரிட்சை பேப்பரில் மிஸ் சரியா, அந்த வார்த்தைகளை மட்டும் தேடிப் புடிச்சு முட்டை சுழிப்பாங்க.. நம்ம பத்தித்தான் ஸ்கூலுக்கே தெரியுமே... இருந்தாலும் நாமதான் கிளாஸில் பஸ்ட் ரேங்க்.. இல்லாட்டி பிரேமாக்கிட்ட யார் வாங்கிக் கட்டிக்கிறது..

என்னதான் ஜாலியாக எழுத ஆரம்பித்தாலும், தேர்வு என்றால் எனக்கு ஒருவித பயமும் சோகமும் வரத் தான் செய்கிறது.. காரணம் என் வாழ்வில் நடந்த சம்பவங்கள்.. உண்மை சில சமயம் சுடும். எனக்கும் அப்படித்தான்..

`எங்க சயின்ஸ் டீச்சர் விமலாவுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது.. அதென்னவோ தெரியவில்லை.. எப்போதும் என்மீது ஒரு வன்மத்தோடே திரிந்தார்.. பத்தாம் வகுப்பு மாடல் தேர்வில், இங்கிலீஷ் செகண்ட் பேப்பரில் எனக்கு பின்னால் உட்காந்து எழுதிய லலிதா என்னைப் பார்த்து ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடை எழுத, அன்று சூப்பர்வைஸராக வந்திருந்த விமலாவின் கண்களில் மாட்டிக் கொண்டோம்..

`அவ என்னைப் பார்த்து எழுதறான்னு எனக்கு தெரியாது-ன்னு என்று நான் சொல்ல, இல்ல, அவளுக்கு தெரியும் என்று லலிதா சொல்ல, ஹெட் மாஸ்டர் முன்னால் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டோம்... அவளுக்கு பேப்பர் காட்டிய காரணத்துக்காக, எனக்கு 15 மார்க் குறைக்கப்பட்டது.. ஆனால் லலிதாவுக்கோ பத்து மார்க் தான் குறைக்கப்பட்டது.. அன்றைய நாளில் இருந்து எக்ஸாமில் யார் பக்கமும் திரும்பி பார்க்காமல் கடமையே கண்ணாக எழுதி பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தேன்..

அதன் பிறகு எங்க வீட்டில் மிகப் பெரிய பஞ்சாயத்து நடந்தது.. பஸ்ட் குரூப் எடு.. என்ஜினியரிங் படிக்கலாம்ன்னு என்று அக்காக்களின் ஆலோசனை.. ஓக்கேசனல் குரூப் எடு.. நிறைய மார்க் வரும்.. டீச்சர் டிரைனிங் சேரலாம் என்பது மாமாவின் ஆலோசனை.. நான் பொலிட்டிகல் சயின்ஸ் படிக்கிறேன் என்று சொன்னபோது குடும்பமே கதறி தீர்த்தது.. என்னை எந்த குரூப்பில் சேர்ந்துவது என குலசாமி கோயிலில் குறி கேட்டார்கள்.. சாமியாடி ஒருத்தரிடம் வாக்கு கேட்டார்கள்..


 ஒருவழியாக சயின்ஸ் குரூப் எடுக்கிறேன் என ஒத்துக் கொண்டு, ஸ்கூல் சேரப் போன சமயம், ஹெச்.எம்மிடம் நான் அரசியல் அறிவியல் குரூப்பில் சேர்கிறேன் என ஸ்பாட்டில் வைத்து சொல்ல, நான் ஏ.3 எனப்படும் குரூப்பில் சேர்ந்தேன்.. அதன் பிறகு வீட்டில் பூசை வாங்கியது தனிக்கதை.. நான் ஒன்றுக்கும் லாக்கியில்லாதவள் என நினைத்துவிட்டார்கள் வீட்டில்..

இவ்வளவு தூரம் போராடி ஏ.3 யில் சேர்ந்திருக்கிறோம்.. சாதித்து காட்ட வேண்டும் என்று வெறியோடு படிக்க ஆரம்பித்தேன்.. நைட் பன்னிரெண்டு மணி வரையிலுமோ, காலை மூணு மணிக்கோ எங்க ஊரில் யாராவது முணகும் சத்தம் கேட்டால், சத்தியமாய் நான் படிப்பதாய் அர்த்தம்.. அந்தப் படிப்பாளி நான்.. மிக அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தேன்.. ஆனால் நான் பிளஸ் டூவில் எடுத்தது ஆயிரத்து ஆறு மார்க்.. அந்த ஏமாற்றம் என்னை விரக்தியில் தள்ள, தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டேன்..

அப்போது எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை லா காலேஜில் சேர வேண்டும் என்பதுதான். என் சிறுவயது முதல் கொண்ட கனவல்ல, வெறி அது.. டி.வியில் வக்கீல்கள் வரும் சீன்கள் மட்டும்தான் எனக்குப் பிடித்தமானது..அந்தளவுக்கு வெறி.. எண்ட்ரன்ஸ் எக்ஸாமீக்கு என்னை தயார் செய்து கொண்டிருந்த நேரம், அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் ஹாஸ்பிட்டலில் சேர்த்தோம்.. கருப்பை நீக்க வேண்டி ஆப்ரேஷன் செய்யச் சொல்லிவிட்டார்கள்.. அம்மாவுடன் நான் மட்டுமே.. ஆப்ரேஷனுக்கு முந்தி, பிந்தி என 20 நாட்கள் ஹாஸ்பிட்டல் வாசம்.. அம்மாவை பெட்டில் படுக்க வைத்துவிட்டு, ஹாஸ்பிட்டல் வராந்தாவில் உட்கார்ந்து நான் எண்ட்ரஸ் எக்ஸாமீக்கு படித்ததை என்னாலும் சரி, அந்த மருத்துவமனை கட்டிடங்களாலும் சரி மறக்க முடியாது.. படிக்கிற புள்ளை என நாங்க தங்கியிருந்த வராண்டாவில் எப்போதும் லைட் போட்டு வைப்பார் சசி நர்ஸ்.. கடந்து செல்லும் போது தலை தடவிக் தருவார் சுப்பராயண் டாக்டர். சமயங்களில் காபி போட்டுத் தருவார்கள்.

இப்படியாக கடக்க, அம்மாவுக்கு ஆப்ரேஷன் செய்த அடுத்த நாள் எனக்கு கோவையில் எண்ட்ரன்ஸ் எக்ஸாம். அம்மாவோ மயக்கம் தெரியாமல் டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டு படித்திருக்கிறார்கள்.. காலை ஐந்து மணிக்கு பஸ் ஏறினால்தான் ஈரோடு போய் கோவைக்கு 9 மணிக்குள் போக முடியும்.. 10 மணிக்கு பரிட்சை.. அம்மாவிடம் சொல்லாமல் கிளம்ப எனக்கு மனமில்லை.. சொன்னாலும் புரியும் நிலையில் அம்மா இல்லை.. லா படிக்க வேண்டும் என்பது என் ஆசை.. என்ன செய்ய.. கலங்கிய கண்களுடன் கிளம்பி நின்றவளை, ஒட்டு மொத்த மருத்துவமனையும் `ஆல் தி பெஸ்ட்` சொல்லி வழியனுப்பியது.. எக்ஸாம் எழுதிவிட்டு திரும்பி வரும் போது அம்மா கண்விழித்திருந்தார்..

மறுபடியும் பஞ்சாயத்து, ஐந்து வருடம் லா படிக்க வைக்க முடியாது, காசு கரியாகும் என மாமா கொடி பிடிக்க, பெரியம்மா, அக்கா எல்லாரும் அதை வழி மொழிந்தார்கள்.. ஆனால் லட்ச ரூபாய் டெபாசிட் கட்டி என்னை டீச்சர் டிரைனிங்கில் சேர முன்வந்தார்கள். கேட்டால் அதில் வேலை நிச்சயம் என்றார்கள்.. அன்றில் இருந்துதான் எனக்கு டீச்சர்களையே பிடிக்காமல் போனது..

அப்புறம் எண்ட்ரன்ஸில் பாசாகு.. சீட் கிடைக்குதான்னு பார்ப்போம் என்றார்கள்.. ஒருவழியாக சீட் கிடைக்க, மறுபடியும் பஞ்சாயத்து.. டீச்சர் டிரைனிங் சேரு.. ரெண்டு வருஷத்தில் கோர்ஸ் முடிச்சிட்டு, மறுபடியும் லா படிக்க போ.. அதுக்குள்ள உனக்கு வேலையும் கிடைச்சிடும்.. உன் காசில் படிக்கலாம்ன்னு ஆளாக்குக்கு அட்வைஸ்.. ஆனால் நான் பிடிவாதமாய் நின்று கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி படிக்கவில்லை.. காரணம் நாமதான் லா சேர்ந்திட்டோம் என்பதாகவும் இருக்கலாம்,.. அதையும் தாண்டி கஷ்டப்பட்டு படிச்சதுக்கு பிளஸ் டூ ரிசல்ட் தந்த சூடாகவும் இருக்கலாம்.... பல அரியர் வைத்தேன். அதற்காக ஒருநாளும் வருந்தியது இல்லை.. ஆனால் கடைசி செமஸ்டரில் எல்லா பேப்பர்களையும் கிளியர் செய்து வெற்றிப் புன்னகையுடன் லா காலேஜை விட்டு வெளியே வந்தேன்..

நான்காம் ஆணு படிக்கும் போது, சென்னையில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் சேர, பயிற்சி திட்டம் ஒன்று உண்டு.. அதில் தேர்வாக எட்டு கட்ட பரிட்சைகள் இருக்கும்.. எந்த முன்னேற்பாடும் இல்லாமல் மிக இயல்பாக அதில் கலந்து கொண்டு, அந்த வருடம் தேர்வு எழுதிய 2653  மாணவர்களுள் 32 பேரி ஒருவராக தேர்வு பெற்ற சமயம்தான் உணர்ந்தேன், வெறும் அல்ஜிப்ராவும், காம்பவுண்ட் செண்டன்ஸீம், நேர் நேர் தேமாவும் நம் வாழ்க்கையை தீர்மாணிக்கப் போவதில்லை என....

ஆக இப்படியாக நான் தேர்வுகளை கடந்து வந்தேன்.. சரி.. இதுக்கு நாம தொடர் பதிவு எழுத கூப்பிடலாம்ன்னா யாரும் சிக்க மாட்டீங்கறாங்களே.... யாரை மக்கா மாட்டி விடலாம்?

Monday, May 31, 2010

விடை தெரியாத கேள்விகள்

நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
மாடி வீட்டு
நைஜீரியாக்காரியிடம்
என்னவென்று
சொல்லித் தருவது,
பெருமாளுக்கு வைத்த
சர்க்கரை பொங்கலை?


பார்வை கடக்கும்
சமயம் மட்டும்
புன்னகைத்து,
இத்தனை நாட்களில்
நான்கு முறை மட்டுமே
`ஹலோ` சொல்லியிருக்கும்
அடுத்த வீட்டு
வெள்ளைகாரியிடம்
அவசரத்துக்கு
ஒரு டம்ளர் சர்க்கரை
எப்படி கேட்பது?


வருடம் ஒருமுறை
லிவிங் டுகெதர்
ஆட்களை மாற்றும்
பக்கத்து வீட்டு
கருப்பின பெண்ணிடம்,
வெள்ளிக்கிழமை ஆனால்
என்னவென்று தருவது,
மஞ்சள் குங்குமத்தை?


‘கார் பார்க்கிங்-யில்
இடம் தருகிறான்.
கேட்கும் போது
உதவ காத்திருக்கிறான்.
அறிமுகத்தில் அன்பான
இந்தியபெண் என்கிறான்.
எதிர் வீடு என்றாலும்
பயம் ஏற்படுத்தும்
அந்த பாகிஸ்தான்காரனை
‘அண்ணன்” என எப்படி சொல்வது?


ஆட்டு குட்டி வாங்கிருக்காங்க,
ஊரில் இன்னிக்கு மஞ்சநீர்,
வயல்-ல அறுவடை,
அக்கா கருவுற்றிருக்கிறாள்,
இப்படி பகிர்ந்துகொள்ள
எத்தனையோ செய்திகள்.
மொழி அறியாத தேசத்தில்
யாரிடம் சொல்வது?

Tuesday, May 25, 2010

என் கணவனின் காதலிக்காக..

ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணும் போதே, கரண் சொல்லிவிட்டார்... ‘அங்க என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லை, அப்புறம் மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டு திரியக் கூடாது.”

எல்லாத்துக்கும் தலையை தலையை ஆட்டிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் வரை எதுவும் தெரியவில்லை.. தார் ரோட்டில் கால் வைத்தபோது சுள்ளென உரைத்த வெயில் நேரத்தில் தான் சில உண்மைகளும் புரிய ஆரம்பித்தது..

அத்தனை தடவை நானும் கரணும் போன் பண்ணி தகவல் தெரிவித்தும், கிளம்பும் முன் கூப்பிட்டுச் சொல்லியும் ஒருத்தர் கூட ரிசிவ் பண்ண ஏர்போட் வரவில்லை.. சரி தைரியமாய் வீட்டுக்கு கிளம்பலாம் என்றால் மதுரை பழக்கமில்லாத நகரம்.. பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, கரணுக்கு கால் பண்ணினால் வழக்கம் போல கால் வெயிட்டிங்.. கோபத்தில் டிராவல் பேக்கை உதைத்துவிட்டு, வேறுவழியின்றி வீட்டுக்கு கால் பண்ணினேன்.. பேசியது கரணின் அக்கா கணவர்..

‘அட, அதுக்குள்ள வந்திட்டியாம்மா, நாங்க ஃபிளைட் லேட் ஆகும்ன்னு நினைச்சு இப்பத்தான் கிளம்பறோம்.. எப்படியும் நாங்க ஏர்போர்ட் வர ஒரு மணி நேரம் ஆகும், வெயிட் பண்றியா இல்லை-”ன்னு அவர் இழுக்கும் போதே, ’பரவாயில்லை அண்ணா, நான் டாக்ஸி புடிச்சி வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு மனதுக்குள் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு டாக்ஸி தேடினேன்..

ஏர்போட்டில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் முன் என்னைப் பற்றி ஓர் அறிமுகம்..

நான் கெளசல்யா.. டில்லியில் அப்பர் மிடில் கிளாசில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்.. என்னுடன் வேலை பார்த்த கரணுடன் காதலாகிப் போக, வீட்டில் பச்சைக்  கொடி காட்டப்பட்டது.. கரண் வீட்டில் தான் ஏகத்துக்கும் பிரச்சனை.. எங்கள் வீடு தேடி வந்து திட்டிவிட்டுப் போனார்கள்.. ஆனால் என்னைவிட கரண் பிடிவாதமாய் நிற்க, வேறுவழியின்றி டெல்லியில் என் வீட்டு உறவினர்களுடன் எளிமையாய் திருமணம் நடக்க, அட்சதை மட்டும் போட்டுவிட்டு சொல்லிக்காமலேயே விடை பெற்றது அவரின் குடும்பம்.. பின் நானாக போன் பண்ணும் போது, ’நல்லாயிருக்கியாமா’ என்ற ஒற்றை வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்வார்கள் மாமியாரும் மாமனாரும்...

இதோ... ஊரில் திருவிழா.. போயே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நின்று இருவருக்கும் டிக்கெட் புக் பண்ணியது நாந்தான்... கடைசியில் கரண் செக்‌ஷனில் ஆடிட்டிங் நடக்க, லீவ் கிடைக்காத மனிதருக்கு டாட்டா சொல்லிவிட்டு வந்தது தப்போ? என இப்போது உறைக்க ஆரம்பிக்கும் முன் என் மாமியார் வீடு வந்து சேர்ந்தது....

இனி மெயின் சீன்க்குப் போகலாம்..

ஆரத்தி தட்டெல்லாம் சுத்தி மரியாதையாகத்தான் வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள் என் மாமியார் வீட்டில். புதிய இடத்தின் சூழ்நிலையை படிக்கும் முன்னே அன்றைய பொழுது கழிந்தது..

அடுத்த நாள், நான் எழுந்ததே விமலாவின் அதட்டல் பேச்சில்தான்.. ‘என்னதான் சிட்டியில் இருந்தாலும் வாசலில் கோலம் போடற பழக்கம் கூடவா இல்லை’ என்று அவள் சொன்னது என்னைத்தான் என்று புரியாமல், காபியும் ஹிந்து பேப்பருமாய் ஹாலில் உட்கார்திருந்தவள் நான்..

‘நம்ம குடும்பத்துக்குன்னு சில பழக்க வழக்கம் இருக்கு.. வீட்டு ஆம்பிளைங்களா இருந்தாலும் நைட்டி போட்டுக்கிட்டு முன்னாடி வர்றது இல்லை” என்று அவள் குறிப்பு குடுக்கும் சமயம் நான்  துப்பட்டாக் கூட போடாமல் வெளிக் கதவிற்கு அருகில் நின்று தலைதுவட்டிக் கொண்டிருந்தேன்..

இங்கே விமலா என்பது என் கணவரின் மாமா மகள்.. அவளைத்தான் அவர் கல்யாணம் பண்ணுவதாக பேச்சு என்பதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். ஆக இதையெல்லாம் முன்னரே எதிர்பார்த்துதான்..

ஆனால் ஒட்டு மொத்த குடும்பமும் ஏதோ ஒட்டுதல் இல்லாமல் என்னிடம் பேசுவது மட்டும் ஏன் என புரியவில்லை. (இத்தனைக்கும் அந்த மாத சம்பளத்தை அப்படியே மால் ஒன்றில் பில்லாக்கி பட்டுப் புடவைகளுமாய் காஸ்டிலி கிப்டுகளுமாய் அந்த குடும்பத்திற்கு கரைத்திருந்தேன்). கூடவே என்னை எப்போதும் ஒரு ஜோடிக் கண்கள் பின் தொடர்வதாக பிரம்மை வேறு.. தவிர நான் நின்றால், நடந்தால், பேசினால் எல்லாவற்றிற்கும் வார்த்தைகளிலும் பார்வையிலும் வெறுப்பைக் காட்டினாள் விமலா. (அவளுக்கும் சேர்த்துதான் பனாரஸ் பட்டு வாங்கிவந்தேன்).

நானாக பேச முயற்சித்தாலும் வெட்டிச் சென்றாள். அதையும் தாண்டினால் மெளனமான கேள்விகளுடன் என் கண்களை நேருக்கு நேர் பார்க்கிறாள்.. என்னால் எதுவும் கேட்க முடிவதில்லை. திருவிழா முடிந்தும், கரண் போர் அடிக்கிறது சீக்கிரம் வா என் குறுஞ்செய்தி அனுப்பியும் நான் மாமியார் வீட்டில் இருந்து கடையை கட்டாமலிருக்கும் காரணம் விமலா பற்றிய புரிதல்கள் தான்..

ஒருவேளை கரணை தீவிரமாக காதலித்துவிட்டு மறக்க முடியாமல் தவிக்கிறாளோ, நான் பறித்துக் கொண்டேன் என்று கோப்படுகிறாளோ? என்று எல்லா வகையில்லேயும் யோசித்தாயிற்று... ஏனெனில் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவளாக இருந்தாள் விமலா.

உண்மையை உடைக்க வேண்டுமே அதற்காகத்தான் என் மாமியாரிடம், தூண்டில் வீசினேன்..
‘ஏன் அத்தை, உங்க அண்ணா பொண்ணு டிகிரி முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு, மேற்கொண்டு படிக்கப் போறாங்களா...... இல்லை தஞ்சாவூர்ல எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பம் இருக்கு... நம்ம ஜாதிதான்” என்று நான் சொல்லும் போது கூர்மையாய் ஒரு பார்வையை என் மாமியார் செலுத்த, சட்டென உதடு கடித்து ‘இல்ல உங்க ஜாதிதான்.. எம்.பி. ஏ படிச்சிருக்கார்..  மாசம் 25000 சம்பளம். பேசிப் பார்க்கலாமா?” என்று நான் முடிப்பதற்கும் அவர் சோபாவில் அமர்ந்தபடி என்னுடன் பேச தயாராவதற்கும் சரியாக இருந்தது..

‘உன்கிட்ட சில விசயங்களை உடைச்சுப் பேசணும் கவுசி.. இதை விமலா மேல இருக்கற பாசமோ, இல்லை நீ நாங்க தேடாத மருமகள்ங்கிறதாலோ சொல்லலை... கரணோட அம்மாவா இதை சொல்லறேன்..

சின்ன வயசில இருந்து கரண் கூடத்தான் சுத்துவா விமலா.. வளர்ந்தபிறகு ஒருத்தருக்கொருத்தரை பிடிச்சுப் போச்சு.. என் முன்னாடியே அந்த புள்ளைக்கு முத்தம் குடுத்திருக்கான்.. வீட்டில யாரும் இல்லாதப்ப அவகிட்ட தப்பா நடக்க பாத்திருக்கான்.. கேட்டா நான் கட்டிக்கப் போற பொண்ணுதானேன்னு நியாயம் பேசுவான்.. அவகிட்ட கோவிச்சுக்கிட்டுத்தான் டெல்லிக்கே வந்தான்.. இங்க இவளும், ‘இன்னிக்கு கோபம் தெளியும், நாளைக்கு போன் பண்ணி பேசுவான்’ன்னு காத்திருந்தாள்.. நாங்களும் ஏதோ வயசுக் கோளாறுன்னு நினைச்சிருந்தோம்..

’திடிர்ன்னு ஒருநாள் உன்னை லவ் பண்ணறதா சொன்னான்.. எங்களுக்கு ஒன்னும் புரியல.. விமலாவைக் கேட்டா, விடுங்க அத்தை, என்னிக்கு இன்னோரு பொண்ணு அவ மனசில வந்திட்டாளோ, அப்பவே எல்லாம் முறிஞ்சிப் போச்சுன்னு கண்ணீர்ல கரையறா.. எங்களுக்கு உன் மேலயோ, காதல் கல்யாணத்திலேயோ வெறுப்பு இல்லை.. விமலாவை நினைச்சுத்தான் வருத்தம்.  கரணைக் கேட்டா, ‘என் ஸ்டைலுக்கும் டேலண்டுக்கும் அவ ஒத்துவரலை.. கவுசிதான் பெட்டர்-ங்கிறான்..

வீட்டுக் கடனை கட்டி குடும்பம் தலைநிமிர வெச்சவனை எதிர்த்துப் பேச உங்க மாமாவால முடியல.. பெத்த பாசம் எனக்கு.. உன் மேல பாசம் காட்டினா, விமலா துடிப்பா.. என்ன செய்யச் சொல்லற என்னை.. ஆண்கள் தப்புப் பண்ணினா கடந்துப் போய்க்கிட்டே இருக்காங்க.. அவங்களைச் சுத்தி இருக்கற பெண்கள்தான் அதனால பாதிக்கப் படறாங்க” என்று அவர் கண்ணீருடன் பேசி முடிக்கும் போது, அந்த மடியில் தலை சாய்த்திருந்தேன் நான்..

அடுத்த நாளே டெல்லிக்கு கிளம்ப ரெடி.. ஏர்போர்ட்டுக்குப் போக கார் வாசலில் நின்றது.. இந்த முறை நான் பார்க்கும் போது விமலா கண்களில் துயரம் இருப்பதாக உணர, அருகில் சென்று அவள் கை இரண்டையும் பிடித்துக் கொண்டு ‘என்னை மன்னிச்சிடுங்க” என்றேன்..

எதற்கு என்று அவளும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை.....

Tuesday, May 18, 2010

அவனை அறியும் தருணம்

லிப்டில் மிக நெருக்கமாய்
நானும் அவனும்!
ஒரு முறை கண்ணடித்தேன்..
இரு முறை
கண் சிமிட்டினான் அவன்!
அள்ளி அணைத்து
முத்தமிட்டேன்!
மூணு வயசு
ஆகுதுன்னு சொன்னாங்க
அவங்க அம்மா!


பேரழகு தேவையில்லை
அவன் காதலைப் பெற!
சிரித்த முகமும்
கொஞ்சம் குறும்பும்
இருந்தால் போதும்
பார்க்கும் சமயமெல்லாம்
எனக்கு முத்தம் தருகிறான்
அந்த எல்.கே.ஜி பையன்!


அவன் என் எதிர் வீடு!
ஜன்னல் விழி
தரிசனம் மட்டுமே!
அதிகாலை அவனுக்கான
பூக்களுடன் காத்திருப்பேன்!
எனக்கான புன்னகையுடன்
வருவான் அவன்!
சில நேரம் பறக்கும் முத்தம்
பரிசாய்  கிடைக்கும்!
காதலுக்கு மொழி தடையில்லை!
ஆம் இப்போதுதான்
அவன் எ.பி.சி.டி
சொல்லப் பழகுகிறான்!

அப்பா பெயர் கேட்டால்
சிரிக்கிறான்!
சாப்பிட சொன்னால்
அழுகிறான்!
அடுத்த ஆண் மகனுடன்
பேசினால் முறைக்கிறான்!
டாட்டா சொன்னால் மட்டும்
ஐ லவ் யு என்கிறான்
பள்ளி செல்லும் முன்னே!



சில நேரம் கிறுக்கல்,
சில நேரம் கிள்ளல்,
தட்டிக் கொடுக்க,
கட்டிப் பிடிக்க
என எப்போதும்
  அவனுக்கு
என் உள்ளங்கை
தேவையானது!
இப்போதெல்லாம்
கூட்டல் கழிதல் கணக்குக்கு
காதலுடன் கேட்கிறான்!

Thursday, May 13, 2010

விடை பெறுகிறேன்


ஒரு காதல்
பகிர்வை விட கடினமானது
விடை பெறும் தருணம்...
இன்று என்னுடனானது அது!
உறவுகளை விட்டு
அயல் தேசம் போகிறேன்
அன்பைத் தேடும் அகதியாகி!

தவழ்ந்து நடைபழகி
நான் நிமிர்ந்து நின்ற‌
இந்திய மண் வழியனுப்புகிறது
வேறொரு நாட்டிற்கு
தத்துப் பிள்ளையாக!

இனி என் எல்லை
கடக்கும் விமானத்தில்
அம்மாவுக்கான முத்தங்களையும்
நட்புகளுக்கான பிரியங்களையும்
ஏக்கங்களுடன் அனுப்பி வைப்பேன்!

ஐ.பி.எல் கிரிக்கெட்டும்
தேர்தல் கலவரமும்
நான் குடியேறிய பிரதேசத்தில்
பெட்டிச் செய்தியாக,
காணும் இந்திய முகங்களில்
என் உறவுகளின்
சாயலைத் தேடுவேன்!

முதன் முதலான சைக்கிள்,
மாமர நிழல்,
சோளக் காட்டு நேசம்,
மல்லிகைப் பூ வாசம்,
செம்மண் சாலை,
தென்னங் காற்று,
மரப்பாச்சி பொம்மை
அத்தனையும் வழியனுப்புகின்றன‌
என் சம்மதம் கேட்காமலே!

ஊர் கூட்டி பெயர்
வைத்துக் கொண்டவள்,
மொழி அறியா ஊரில்
மெளனமாய் வாழ‌
விடை பெறுகிறேன்
நான் பிறந்த
இந்திய மண்ணிலிருந்து!





Wednesday, May 5, 2010

ஊனாகி உயிராகி மழையாகிறான்..

 உன் அறிவிப்பை
கட்டியம் கூறும்
பெருங்காற்று
என் திசையுடன்
திரும்பி போகும்!
பின்னே
காதலன் வருவதையும்
காதல் நுகர்வையும்
அறியாதவளா நான்?


சில சமயம்
துளித்துளியாய்!
பல நேரம்
பேரிடியாய்!
சட் சட் சட்
ராகத்தோடு,
இல்லையெனில்
தென்றலின் சாரலோடு!
பொதுவாக ஊருக்கும்
தனிமையில் எனக்கும்
காதலைச் சொல்கிறாய்!
மழை கண்ட எனக்கு
மனம் சொல்ல தெரியவில்லை.


முதலில்
ஒரு முத்தம்..
அடுத்ததாய்
ஆரத் தழுவுகிறாய்!
சங்கமிக்கும்
பொழுதுகளில்
கட்டவிழ்க்கப்படுகிறது
என் வெட்கங்கள்
அக்கம் பக்கம் அறியாமல்!
என் ஏக்கத்தை
தணிக்கவே
அடிக்கடி வருகிறாய்
மழையாகி!


அது ஒரு
ஆடை நனைந்த பொழுது!
உன்னைப் பருகி
நீ என்னைத் தழுவி!
உயிரும் உணர்வும்
கூத்தாடுகையில்
விடை பெறுகிறாய்
வானம் தெளிந்ததென!
இன்று பெய்கிற‌
மழை
என்றோ பெய்த
மழையின் மிச்சமென
குதுகலிக்கிறேன் நான்!


''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன‌
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!

Friday, April 30, 2010

அண்ணன் என்பவன் ஒழிக...

தலைப்பைப் பார்த்ததும், ஏதோ பெரிய பட்டாளக் குடும்பத்தில் தங்கையாய் பிறந்திருப்பேன்.. எனக்கு முன் வரிசையாய் அண்ணன்கள் இருப்பார்கள், அராஜகம் நிறைந்தவர்கள், கட்டுப்பாடான குடும்பம் என நினைத்தால், மக்கா அதுக்கு நான் பொறுப்பில்லை..

சுப்பிரமணி‍ பிரேமா தம்பதிக்கு பிறந்த ஒற்றை மகள் நான்.. ('குட்டிச்சாத்தான் வந்து எனக்கு பொண்ணா பொறந்திருக்கு'.. இது பிரேமாவின் டயலாக்).

தமிழ் சினிமாவில் சண்டைப் போடும், கொஞ்சிக் குழாவும் அண்ணன் தங்கைகளை பார்த்து வளர்ந்ததால் எனக்கும் அண்ணன் என்ற உறவு மீது தீராத ஏக்கம் இருந்தது... இருக்கிறது... மிக அழகான அந்த பந்தத்தை நான் நேசிக்கிறேன்.... சந்திக்கும் ஆண்களிடம் நன்கு பழகிய பிறகு, அவர்கள் மீதுள்ள பாசத்தால் அண்ணா என்று உரிமை கொண்டாடுவேன்... என்னுடன் பிறக்காவிட்டாலும், சொந்த தங்கையைப் போல அன்பு செலுத்தும் என் பக்கத்து வீட்டு முருகன்னா, பள்ளியில் கெளரி சங்கர் அண்ணா, கல்லூரியில் ராஜேஷ் அண்ணா, (உடல்நல குறைவினால் என் கல்லூரி இறுதி ஆண்டில் இறந்துவிட்டார்), வேலை பார்க்கும் இந்த அலுவலகத்தில் பிரபு அண்ணா, பிளாக்கில் என் அன்பு அண்ணாச்சி பாலாசி இவர்களைத் தாண்டி, சொல்லிக் கொள்ளும் உறவுகள் எனக்கில்லை..

சரி இதுக்கும் 'அண்ணன் என்பவன் ஒழிக' என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது..... அதை என் கொசுவர்த்தி சுருள் பிளாஸ்பேக்கில் சொல்கிறேன்..

பிளாஸ்பேக் 1.

கல்லூரியில் காலெடுத்துவைக்கும் வரை, அந்நிய ஆண்மகன்களின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காத, குட்டிப்பாப்பா நான்... படிப்பு மார்க் என்று 18 வயது வரை புத்தக புழுவாக இருந்த நான், கல்லூரியில் முதல் வார விடுமுறையில் வீட்டுக்கு வருதற்கும், எங்கள் ஊரில் குத்து விளக்கு பூஜை நடப்பதற்கும் சரியாக இருந்தது..
நட்பு வட்டாரத்துடன், மாலை ஏழு மணி பூஜைக்கு, பகல் 3 மணிக்கே ஆஜர். (அங்கேதான் முதன் முதலில் நான் அண்ணன் என்ற வார்த்தையை  வெறுக்கத் துவங்கினேன்..) கோயிலுக்குள் போய் செட்டில் ஆன கொஞ்ச நேரத்துக்குள்ளேயே, என்னை சீண்ட ஆரம்பித்தான் அவன்.... எங்க கூட்டத்தில் எல்லா பெண்களிடமும் அர்ச்சனை கூடை தந்தான், என் முறை வந்த போது சிரித்துகொண்டே போய்விட்டான்.. அடுத்து 'எண்ணையும் திரியும் தர முடியாது' என மறுத்தான்.. 'காலேஜ் சேர்ந்திட்டா, நீ என்ன பெரிய இவளா' என்று வெளிப்படையாகவே வம்பிழுத்தான்.. அவன் செய்கை பார்த்து நான் விழிக்கவும் 'போடி போடி யாரை வேண்டுமானாலும் கூட்டி வா.. என்னைக் கேட்கட்டும், பதில் சொல்லிக்கிறேன்' என்று வீறாப்பு காட்டினான்.... முதன் முதலால் ஒரு அந்நிய ஆண் என்னை டீ போட்டு கூப்பிடுகிறான்.. நியாயமாய் எனக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெட்கம் வந்தது.. பாரதி ராஜா பட ஹீரோயின் மாதிரி, என்னை முதன் முதல் சீண்டயவனை பிடித்திருந்தது.. என் பார்வைகள் அவனையே சுற்றி சுற்றி வந்தன..குத்து விளக்கு பூஜை முடிந்தது.. நான் வாங்கிய பிரசாதத்தை உரிமையோடு எடுத்து சாப்பிடும் போது சரியாக வந்து சேர்ந்தார் என் தூரத்து உறவு பெரியம்மா.. ''பார்க்கணும், அவக்கிட்ட பேசணும்ன்னு சொன்னியே. இப்போ கேளு" என்று அவர் நிக்க வைத்து பேச, அவனோ என் கண்ணை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். எனக்ககோ எதுவுமே புரியவில்லை. '..உனக்கு பாலாவைத் தெரியலையா.. ஆமா, கல்யாணத்துக்கு  கூட நீ வரலையே?  உன்கிட்ட பேசாம இருக்கான் பாலா" என்றார் பெரியம்மா.. 'என்னது இத்தனை நேரம் என்னை சீண்டியவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று நான் முளிக்க, அதுசரி, வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடந்தா இப்படித்தான் அண்ணன் தம்பியைக் கூட தெரியாம போய்டும்..  இதுதான் உன் பாலாண்னா... என் பையன்....' என்று அவனை அறிமுகம் செய்து வைத்ததோடு என் கையை பிடித்து அவன் கையில் தந்தார் பெரியம்மா.. மெல்ல உடைந்தது இதயம்..

பிளாஷ் பேக். 2..

பெரிய பெண்ணாக நான் வளர்ந்ததாக நினைத்துக் கொண்டிருந்த   பிறகு,, அதாவது கல்லூரி முதலாம் ஆண்டு விடுமுறையில் நான் சென்ற கல்யாணம்.. என் கிளாஸ்மெட் சசியுடையது... மாப்பிள்ளை வீடும் எங்களுக்கு உறவுக்காரர்கள் என்பதால் களை கட்டிய கச்சேரி.. அப்போது நான் பார்த்தேன்.. அந்த ஹீரோ ஹோண்டாவின் நாயகனை.. கருப்பாய் களையாய் இருந்தான்.. பல முறை திரும்பி பார்க்க வைத்தான்.. ஒரு முறை சிரித்தேன்.. அவனும் சிரித்தான்.. எங்கே பார்த்த முகமாகவே இருந்தது.. கூட்டத்தில் அவனை மட்டுமே என் கண்கள் தேடின..

என் குடும்பம் மிக கலகலப்பான குடும்பம்.. டி.வியில் டி.ராஜேந்திர் பாட்டு ஓடினால், ஹே 'உன் மாமனாரு' என்றும் நயன்தாரா வந்தால், 'ஹே உன் அக்கா,' என்றும் சிம்பு வரும் போது வெளிப்படையாய் 'உன் சைட் வந்திருக்கான் பாரு' என்றும் நண்டு சிண்டில் இருந்து தாத்தா வரை கிண்டல் பண்ணுவார்கள்.. (அந்தளவுக்கு சிம்பு பைத்தியம்..ஏ.ஆர்.ரஷ்மான்-க்கு சொந்தமான ஸ்டூடியோவில் சிம்புவுடன் ஒரு மீட்டிங்.. அவன் சொல்லுங்க என்று என் பெயரை உச்சரித்ததுக்கே மூன்று நாள் சாப்பிடாமல் இருந்தவள் நான்.. அந்தளவுக்கு அவன் மீது பைத்தியம்). அந்த தைரியத்தில், என் அத்தையிடம் போய் 'யார் அத்தே அந்த பிகர்' என்று அவனைக் கைக் காட்டி கேட்டேன்.. 'ஹே உனக்கு மாமா வீட்டில் வளர்ந்தா சொந்த பந்தம் தெரியாம போய்டுமா? அவன் உங்கண்ணன் கார்த்தி.. பங்காளி வீட்டுப் பையன். முறைப்படி அவன் கல்யாணத்துக்கு நீ சீர் செஞ்சிருக்கணும்..சின்னப் பொண்னுன்னு விட்டிட்டோம்.. இப்ப அவனையே யாருன்னு கேக்குறியா" என்று அவர் திட்ட, நான் 'பிகர்'ன்னு சொன்னது காதில் விழுந்திருக்குமா இல்லையா என்ற பயம் எனக்கு.. இதற்கு இடையில் அவன் எங்கள் அருகில் வந்தான்.. பெரியதாய் சிரித்து என் கன்னத்தை கிள்ளி, 'நல்லாயிருக்கியாட்டா குட்டி' என்றான்.. மறுபடியும் உடைந்தது இதயம்..


பிளாஷ்பேக் 3.

கல்லூரி மூன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. விடுதியில் ஞாயிற்றுக் கிழமை, பத்துமணிக்கு வரைக்கும் தூங்கிய தூக்கத்தை கெடுத்தது அன்று வந்த போன் கால்.. பண்ணியது என் கிளாஸ்மெட் சசிகலா.. (இது வேறோரு சசி).. விசயம் இதுதான்.. காதலித்த பையனை ஓடிப் போய் கல்யாணம் பண்ணி ஐந்து நாள் ஆகிவிட்டது..எனக்கு தகவல் சொல்லத்தான் போன்.. நானே அவள் கேலி செய்கிறாள் என நம்ப மறுக்க, தன் கணவரின் கையில் தந்தாள் போனை.. 'நான் சசியோட ஹஸ்பெண்ட் பேசறேன்.. என் பேரு பிரபு. உன்னைப் பத்தி நிறையா சொல்லிருக்காடா. வீட்டில் பிரச்சனை அதான்.. உன்கிட்ட கூட சொல்ல முடியல" என்றவர் தன் செல்போன் எண்னைத் தந்தார். பிறகு அடிக்கடி அவங்களுக்கு போன் பண்ணி சசியிடமும்  பிரபுவிடமும் பேசுவேன்.. எங்க ஊரு வழக்கப்படி, தோழியின் கணவரை அண்ணா என்று அழைத்து பேசுவேன்.. அவருக்கும் தங்கை இல்லாததால் என் மீது ரொம்ப பாசமாக இருப்பார்.. நான்கைந்து மாதத்துக்குள் அந்த சசி அவள் பெற்றோருடன் சேர்ந்துவிட, அடுத்த முறை விடுமுறைக்கு வரும் போது என்னை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.. நானும் அப்படியே சென்றேன்.. பஸ்ஸில் இருந்து இறங்கிய என்னை அழைத்துச் சென்றது சசிதான்... வீட்டுத் திண்ணையில் காலார நான் உட்கார, உள்ளே சென்றாள் சசி.. அப்போதுதான் வாசலில் குறுக்கும் நெடுக்குமாய் செல் போன் பேசிக்கொண்டு நடந்த அவனைக் கவனித்தேன்.. கிராமத்து ஆண்களுக்கு உரிய மிருக்கு.. கம்பீரமாய் இருந்தான்.. அவனோ செல் போனில் பேசுவதுமாய் என்னை பார்ப்பதுமாய் இருந்தான்.. நான் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சசி வெளியே வர, 'யார் டீ இது, உங்க ஊரில் இவ்வளவு அழகான பையன்" என்று நான் சொல்வதை காதில் வாங்காமல், ''ஏங்க உங்க தங்கச்சி வந்திருக்கா.. அவளை கவனிக்காம செல்போனில் யார் கூட பேசறீங்க" என்றவள் என்னிடம் திரும்பி 'உங்க பிரபு அண்ணன் எப்பவுமே இப்படித்தான்.. போனில் பேசிக்கிட்டே இருப்பார்" என்பதற்கும் அவன் என்னிடம் வந்து ஹாய் சொல்வதற்கும் சரியாக இருந்தது.. மறுபடியும் உடைந்தது இதயம்.

பிளாஷ்பேக். 4

''எங்க ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா எனக்கு பிடிக்கும்.. காரணம் மஞ்சள் நீர் ஊற்றும் வைபவம்.. நமக்கு பிடித்தவர்கள் மீது மஞ்சள் நீ ஊற்றுவது மிக பிடித்தமானது... ஒவ்வோரு ஆண்டும் புதிதாய் நாம் யார் மீது தண்ணீர் ஊற்றுகிறோம்.. நம் மீது யார் தண்ணீர் ஊற்றுகிறார்கள் என்பதில்தான் பரவசம்.. ஊரில் இருந்தா எல்லா மாமன் மீதும் தண்ணீர் ஊற்றி விளையாடிய பிறகு, எதார்த்தமாய் பார்த்தேன் அவனை.. மஞ்சள் தண்ணீர் ஊற்ற ஆசை வர, அவனை நோக்கி நடந்தேன்.. என் நோக்கம் புரிந்து அவன் விலக, நான் தண்ணீருடன் ஓட, ஆனந்தமான நிமிடங்கள்.. அவை.. தேடிப் பிடித்து அவன் மீது மஞ்சள் நீர் ஊற்றிவிட்டு வெற்றிக் களிப்பில் மிதந்தேன்..

அன்று இரவு ஊர் கிணற்றில் விளையாடும் போது சுமதி என்னை நோக்கி வந்தாள்.. (அப்போது அவளுக்கு திருமணம் ஆகி 3 மாதம் ஆகியிருந்தது..உறவு முறையில் என் அத்தை மகள்)..' ஏன்டி உங்க விளையாட்டுக்கு அளவில்லாம போச்சா.. யார் மீது தண்ணி ஊத்தறதுன்னு இல்ல, உங்க அண்ணன் மீதா தண்ணி ஊத்துவ. அறிவிருக்கா உனக்கு.. அவரே கல்யாணத்துக்கு பிறகு இப்பத்தான் நம்ம ஊருக்கு வர்றாரு'.. என்றவாறு தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றாள்... நான் ஊற்றிய மஞ்சள் தண்ணீரில் திளைத்துக் கிடந்தவன், 'கழுதை, உனக்கு என்னை அடையாளம் தெரியல," என்றபடி தலையில் செல்லமாய் ஒரு கொட்டு வைக்க, வலித்தது இதயம்.
பிளாஷ்பேக் 5.

இப்ப வரைக்கும் எங்க ஊர் திருவிழா, பண்டிக்கைக்கு போகும் போது,, அவனைப் பார்ப்பேன்.. அவனும் என்னைப் பார்ப்பான்.. பெயர் தெரியாது.. காரணம் எல்லோருக்கும் அவனை 'சித்ரா வீட்டுக்காரரு" என்று பெயரிட்டு அழைப்பார்கள்..
எங்கக்கா கீதா தான்.. ஒரு முறை சொன்னாள்..  சித்ராவை கட்டின முறையில், அந்தாளு நமக்கு அண்ணன் முறை'என்றாள்.. 'இப்ப அதுக்கு என்ன? அண்ணனாம், குன்னன்'கோபத்தில் கத்தினேன் நான்...

''உங்க ஊரில் எல்லா பொண்ணுகளும் என்கிட்ட பேசறாங்க.. ஆனா பிரேமா-க்கா பொண்ணு மட்டும் பேசறதில்லை.. ஏன் உங்க குடும்பத்துக்கும் அவங்க குடும்பத்துக்கும் ஆகாதா" என்று சித்ராவிடம் ஒரு நாள் கேட்டிருக்கிறான் அவன்,,, அதன் பிறகு அவனிடம் நான் பேச முயற்சிக்கவில்லை.. இனிமே என்ன ஆப்ரேஷன் பண்ணினாலும் தாங்காது மக்கா.. என் இதயம்..

இப்ப சொல்லுங்க... அண்ணன் என்பவன் ஒழிந்து போகட்டும்தானே,....

Tuesday, April 27, 2010

நீ கடல்.. நான் அலை..

.'நட்பா காதலா'
அலை பாய்ந்த‌ தருணம் அது!
கரையில் பதிந்த‌
என் காலடி தடத்தை,
'மணலில் ஒரு கவிதை"
என பெயரிட்டாய்.
ஒரு சிப்பிக்குள்
முத்து கண்ட
அத்தருணத்தில் தான் 
கடல்   என் கடவுளானது!
  மணலை அளந்தபடி
'கடலை பிடிக்குமா'
இப்படித்தான்
ஆரம்பித்தாய் நீ..
உன் உதட்டில்
குடியிருந்த
ஒற்றைத்துளியில்
ஆழிப் பேரழை
உருவானது
என் இதயத்தில்!..
 கடற்கரையோர
நடை பயணத்தில்
தெரியாமல்
விழப் போவேன் நான்!
அரவணைத்துக் கொள்ளும்
உன் கரங்களுக்குள்,
தெரிந்து கொண்டே
விழித்துக் கொள்ளும்
என் காதலின் மயக்கம்.!

ஒவ்வோரு
விடைபெறுகையிலும்
என் முகத்தில்
ஒட்டிக்கிடக்கும்
உப்பு காற்றின் வாசம்!
என் முந்தானையில்
ஒளிந்து கிடைக்கும்
உன் தவிப்புகளின்
வாசனைகள்!
சிலிர்த்துப் போகிறது கடல்..
வந்து போன
அலையில்
ஒட்டிக் கிடக்கிறது
என் காதல்.
சென்று வரும்
பேரழையில்
கரைந்து போகின்றன‌
என் ஏக்கங்கள்!

Thursday, April 22, 2010

வோட்காவுடன் ஒரு நாள்.

இந்த பதிவை படித்த பிறகு என் மீது இருக்கும் உங்கள் அபிமானம் மாறிப் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல..

காரணம் முதன் முதலில் நான் தண்ணியடிக்க (அட பைப்பில் இல்லைங்க) காரணமாக இருந்த சம்பவத்தைத்தான் இங்கே..............

இனி கச்சேரி ஆரம்பம்..

சிறுவயதில் அங்கே இங்கே இடம் மாறி, மூன்றாவது படிக்கும் போதுதான் என் மாமா வீட்டில் அடைக்கலம் ஆனேன்.. ஊர் கொத்துக்காரர் என் மாமா.. நான் பிளஸ் டூ படிக்கும் வரை சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.. அப்புறம் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிட்டல் போய் வந்த பிறகு, சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார். ஆனால் அவர் தண்ணியடித்து அதாவது எங்க ஊர் பாஷையில் சொல்வதென்றால் சாராயம் குடித்ததில்லை... அந்த ஏரியா பக்கமே போக மாட்டார். இதனாலேயே எங்க மாமாவுக்கு ரொம்ப மரியாதை.. அவர் வீட்டிலேயே நான் வளர்ந்ததால் எனக்கும் தண்ணியடிப்பவர்களை பிடிக்காது.. பார்க்கவே அறுவருப்பாக இருக்கும்.. (எல்லாம் என் கையில் ஒரு வோட்கா பாட்டில் வரும் வரைதான்).

ஆனால் என் அப்பா அப்படியில்லை.. டீ குடிச்சா நல்லாயிருக்கும்ன்னு அவர் சொன்னாலே தண்ணியடிக்கப் போகிறார்ன்னு அர்த்தம்.(அவரோட கோட் வேட் அது)... தினமும் டீ குடிக்காம அவரால்  இருக்க முடியாது... அவர் நட்பு வட்டமும் அப்படித்தான்..

அவரை நான் சந்திக்கும் சமயமெல்லாம் தண்ணியடிப்பதை பார்த்திருக்கிறேன்.. வளர்ந்த பிறகு, அப்பாவுக்கு முட்டை வறுத்து தந்திருக்கிறேன். அவர் தண்ணியடிக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து சிப்ஸீம், சிக்கனும் சாப்பிட்டிருக்கிறேன்..

என் பெரியம்மாவிற்கு மூன்று மகள்கள்.. ஒற்றை பெண்ணான நான் அவர்களை என் சொந்த சகோதிரிகளாகத்தான் நினைப்பேன்.. நான்  பிளஸ் ஒன் படிக்கும் போதுஎன் அக்காக்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகியிருந்தால், விடுமுறைக்குச் செல்ல எனக்கு நிறைய வீடுகள் இருந்தன..அப்படி ஒரு மே மாதத்தில் தான் நான் தண்ணியடிக்க கற்றுக் கொண்டது..

அட... எங்க மாமா தண்ணியடிப்பார்... நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.. எங்க வீட்டில் யாரும் அப்படி ஒன்றும் மொடாக் குடியர்கள் இல்லை.. ஒரு லார்ஜ் வரை தான்.. ஒயின் ஷாப்பில் போய் தண்ணியடித்து, அதை தெரிந்தவர்கள் பார்ப்பது, பக்கத்து டேபிள்க்காரனிடம் வீண் சண்டை இதை தவிர்க்க, வீட்டிலேயே தண்ணி அடிப்பதில் தப்பில்லை என்பது எங்கள் குடுமபத்தின் கருத்து.. வீட்டு ஆண்கள் மொத்தமாய் சேர்ந்து மாடியிலோ, தோட்டத்திலோ தண்ணி அடிக்க, பெண்கள் ஆம்லேட்டும், சில்லி சிக்கனும் செய்து தருவார்கள்.. அதை டேஸ்ட் பார்ப்பதுதான் என் வேலை..

போகப் போக எனக்கும் சைட்டிஸ் செய்து தருவது பழகிவிட்டது.. நானே உருவாக்கிய சைட்டிஸ் ஒன்றின் ரெசிபி சொல்லட்டுமா?
பொறி, பெப்பர், சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, இதையெல்லாம் பதமாக வருத்து எடுத்து முட்டை பொரியலுடன் கலந்து சாப்பிட,.. அட சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்...

சரி.. நான் தண்ணியடிக்க நேர்ந்த கதையை சொல்கிறேன்...

தமிழ் வருட பிறப்பிற்கு அடுத்த நாள், எங்க அலுவலகத்தின் சார்பில் மூனாறு டூருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ( டூர் என்றால், எங்களுக்கு பைசா செலவில்லை.. எல்லாமே ஆபீஸ் ஸ்பான்ஸர்) சென்னையில் இருந்து பஸ்ஸில் கிளம்பினோம்.. மொத்தம் 120 பேரில் எட்டு பேர் மட்டுமே பெண்கள். அடுத்த நாள் காலையில் உடுமலைப்பேட்டையில் காலை உணவு சாப்பிட்ட போது, எல்லார் கையிலேயும் ஒரு வெள்ளை பேப்பர் தரப்பட்டது..
அதாவது, அன்று இரவு பயர் கேம்பில் தண்ணியடிக்க யார் யாருக்கு என்ன பிராண்ட் வேண்டும் என்பதை எழுதித் தர வேண்டும்.. எங்க ஆபிஸில் இருக்கும் எல்லா ஆண்களும் தங்களுக்கு பிடித்த பிராண்ட் பெயரை எழுதித் தந்தார்கள்.. எங்கள் பெண்கள் குழுவிடம் மட்டும் அந்த வெள்ளை தாள் தரப்படவில்லை.. இது தெரிந்து நாங்கள் கேட்டதும், வேண்டா வெறுப்பாக எங்களிடம் தர, எல்லா பெண்களும், பெப்சி, கோக் என்று எழுதி தர, நான் மட்டும் ஒரு வோட்கா பாட்டிலும் செவன் அப்-பும் என்று எழுதி தந்தேன்..

அப்போதே எல்லோரும் என்னை கிண்டல் செய்ய, அதென்ன ஆணுக்கு ஒரு நியாயம் பெண்க்கு ஒரு நியாயமா, மத்த ஆண்கள் எழுதி தந்தா மட்டும் எதுவும் சொல்லவில்லை-ன்னு வாயாடிக்கொண்டிருந்தேன்..

மதிய உணவின் போது, எங்க சீனியர் ‘கண்டிப்பா உனக்கு வோட்கா வேண்டுமா’ என்றார்... நிஜமாகவே வேண்டும் என்றேன் நான்..

அன்று பயர்  கேம்ப் முடிந்ததும், இரவு உணவு பப்பே முறையில்... எங்க ஆபீஸ் அட்டண்ட் போன் பண்ணி, ‘மேடம் உங்களுக்கு ஒரு பாட்டில் தரச் சொன்னாங்க” என்று பம்மியபடியே, ஒயின் பாட்டில் ஒன்றை மறைத்து மறைத்து குடுத்தார்.. நான் கொஞ்சம் கூட சங்கடப் படாமல், அந்த பாட்டிலை என் டேபிள் மேல் வைத்துவிட்டு சாப்பிட, (அட டின்னர்ங்க) ஒட்டு மொத்த ஆபீஸீம் அதிர்ச்சியாகிப் பார்த்தது .
நானோ கூலாக, மறுபடியும் எங்க அட்டண்டருக்கு போன் பண்ணி, நான் கேட்டது வோட்கா, நீங்க ஏன் ஒயின் குடுத்தீங்க,, என்னை ஏமாத்தறீங்களா, என்று கேட்டேன்.. அவர் மறுபடியும் எங்க ஆபீஸ் சீப்-க்கு தகவல் சொல்ல, என்னை தேடி வந்தது வோட்கா பாட்டில்....

அதற்கும் பூசணிக்கா,(எங்க ஆபீஸில் எனக்கு வைத்த செல்ல்ல்ல்ல்ல பெயர்) வோட்க்கா பாட்டில் வாங்கிடுச்சாம் என்று ஒட்டு மொத்த டூர் டீம்க்கும் தகவல் போய்விட்டது.. பக்கத்தில் இருந்தவர்கள், என்னை அதிர்ச்சியாய் பார்க்க, தொலைவில் இருந்தவர்கள், கேரளா ரோம்மிங்கையும் தாண்டி எனக்கு போன் பண்ணி விசாரித்தார்கள்..

அப்படியே இரவு தூங்குவதற்காக, ஹோட்டலில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்துவிட்டேன்.. நோட் தி பாயிண்ட். அந்த வோட்காவும் ஒயினும் என் ஹேண்ட் பேக்கினுள். அறையில் என்னுடன் வேலை செய்யும் மற்ற இரு பெண்கள்.ஆக களை கட்டியது அரட்டை கச்சேரி..  மறுபடியும் அட்டண்டருக்கு போன் பண்ணி சைட்டிஸ் கேட்டேன்.. அவர் ஒரு சோடா பாட்டிலும் மிக்ஸர் பாக்கெட்டும் தந்தார்.
அதன் பின் பரபரப்பு தொற்றிக் கொண்டது.... குடிக்கலாமா வேண்டாமா, என மனசு குதியாட்டம் போட்டது.. இதற்கு முன் டேஸ்ட் பார்த்தது இல்லை என்றாலும், சின்னதாய் ஒரு ஆர்வம்.. அதற்கு ஆப்பு வைக்க வந்தது ஒரு போன்..
என்னுடன் வேலையை செய்யும் பிரபு அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எல்லோரிடமும் என் அண்ணா என்று அறிமுகம் செய்வேன்.. அவர் போன் பண்ணி தூங்கிட்டியாம்மா என விசாரிக்க,, நான் ஆர்வக் கோளாறில், அண்ணா என்கிட்ட ஒரு ஒயின் பாட்டில் இருக்கு.. உனக்கு தர்றேன் என்று சொன்னதோடு, அப்போதே அட்டண்டர் மூலமாக அவர் அறைக்கு குடுத்து விட்டேன்.

அதன் பிறகு நானும் வோட்கா பாட்டிலும் மட்டுமே..

   நான் குடித்தால் உடன் இருக்கும் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.. அதனால் பாட்டிலைப் பார்க்கிறேன்.. யோசிக்கிறேன்.. இந்த கால நேர நகர்தலில் மிக்சரும் சோடா பாட்டிலும் காலி யாகிவிட்டது.. இருப்பினும் அந்த வெள்ளை நிற திர வோட்கா என்னைப் பார்த்து சிரிக்கிறது.. மனசுக்கும் புத்திக்கும் யுத்தம் நடக்கிறது.. குழந்தை குணத்தில் ஒரு குட்டிச்சாத்தான் ஆட்டம் போடுகிறது.. மணி 12‍யை தாண்டி விட்டது.. ஹோட்டல் அறை முழுவதும் நிசப்பதம்.. என் அறையில் இருந்தவர்களும் தூங்கி விட்டார்கள்.. இதுதான் சமயம் என வோட்கா பாட்டிலை எடுத்து முகர்ந்து பார்த்தேன்....

இனி ஓவர் டூ அடுத்த நாள்..

காலை டிபன் சாப்பிடும் போதே, எல்லோரும் ஆர்வமாய், ’வோட்கா குடிச்சியா’  என்று கேட்க, சிரித்து மட்டும் வைத்தேன்.. நீ தண்ணியடிச்சிருக்க, உன் கண்ணைப் பார்த்தாவே தெரியுது என ஏகப்பட்ட கேள்விகள்.. ஆனால் எதற்கும் பதிலில்லை என்னிடம்.... அன்றிறவு டின்னருடன் டூர் முடியப் போகிறது.. பஸ் ஏறினால் அடுத்த நாள், சென்னையில் கொண்டு வந்து விடுவார்கள்.. எல்லோரும் சாப்பிட்டு முடித்து, டூர்க்கு செண்ட் ஆப் குடுக்க போகிற நேரம், கை தட்டி எல்லோர் கவனத்தையும் திருப்பினேன்..

‘’என் கிட்ட ஒரு வோட்க்கா பாட்டில் இருக்கு.. ஆபீஸ்ல இருந்து எனக்கு தந்துதான் என்றதும் எல்லோரும் என்னை உற்று நோக்கினார்கள்.. அப்ப நீ தண்ணி அடிக்கலையான்னு எல்லா விழிகளும் என்னைக் கேட்டன.  ஏனெனில் வாங்கிய எல்லா பிராண்ட் சரக்கும் காலியாக, டூரை முடிவை கொண்டாட அவர்கள் காத்திருந்த சமயம் அது..

நான் வோட்கா பாட்டிலை உயர்த்தி பிடித்தபடி, இதை எனக்கு பிடிச்சவங்களுக்கு தரப் போறேன் என்று சொன்னேன்.. என்னை சைட் அடிக்கும் ஆண்களும் நான் சைட் அடிக்கும் ஆண்களும் ஆர்வமாய் பார்க்க, ரெண்டு நிமிடம் அமைதியாய் இருந்துவிட்டு, இதை என் பிரபு அண்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று என் அண்ணனிடமே அந்த பாட்டிலை தந்துவிட்டேன்..
அப்புறம் டூர் முடிந்து எல்லோரும் ஊருக்கு வந்து விட்டோம்..

இதுதான் மக்கா.. நான் முதன் முதலில் தண்ணியடிச்ச கதை.. சரி.. நீதான் வோட்கா பாட்டிலை மோர்ந்து பார்த்தியே‍ன்னு கேக்கிறீங்களா? அட அது மூடி மேல இருந்த லேபிள் கூட கிழிக்காம முகர்ந்து பார்த்தது..

விடுங்க மக்கா.. யார்கிட்டேவாவது, ‘தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்” பாட்டு இருந்தா தாங்களேன்.. ரிங் டோனா வைக்கணும்..

அட, இப்பெல்லாம் நான் ஹம் பண்ற பாட்டு என்ன தெரியுமா?

போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்..
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான்..

எங்க நீங்களும் பாடுங்க........

Monday, April 12, 2010

மெளனம் சம்மதமல்ல!

வெறுப்பை
உரித்துக் காட்ட‌
ஓராயிரம் வார்த்தைகள்
தேவைப்படுகிறது
உனக்கு!
ஆனால்
தண்டனை தர‌
ஒற்றை நிமிட
மவுனம் போதும்
எனக்கு!


மனதுக்குள்
தாழ் இட்டுக்கொண்ட‌
என் மெளனங்களை
உன் கத்தி வீச்சு
வார்த்தைகள்
எப்படி காயப்படுத்தும்?



தெரிந்தே
மெளனம் கொள்கிறேன்..
ஒவ்வோரு படியாக‌
உன்னை
மனதிலிருந்து
இறக்கிய படியே!

தணலில்
சாயம் பூசியது
உன் வார்த்தைகள்!
புன்னகையில்
பூத்து எழும்பும்
என் மெளனங்கள்!
நீ ராட்சசனானதும்
நான் தேவதையானதும்
அந்த கணத்தில்தான்!


பகற் பொழுதின்
மூர்க்கம் மறைத்து
'முத்தமிடவா' என்கிறாய்!
மெளனமாகிறேன் நான்!
உன் கண்களில்
அது சமாதானத்தில் அடையாளம்!
என் பார்வையின்
அது வெறுப்பின்
உச்சகட்டம்!

Saturday, April 3, 2010

பெண் பார்த்த கதை..

தமிழ் சினிமாவைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசுக்குள் பரவசம் இருக்கும்.. சிறுவயது முதல் அதன் மீதான ஏக்கங்களும் உண்டு.. என் வாழ்விலும் அது போன்ற சம்பவங்கள் நடக்காதா என்று ஏங்கியிருக்கிறேன்..


முக்கியமாக பெண் பார்க்கும் படலம்.. ''அதெப்படி ஒரு பெண்ணை காட்சி பொருளாக்கி அவளை காப்பி கொண்டு வரச் சொல்லலாம்.. அவள் என்ன சந்தைப் பொருளா? நாலு பேர் பார்த்து பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று சொல்ல? ''என்றெல்லாம் பன்னிரெண்டாவது படிக்கும் போது பேச்சுப் போட்டியில் பேசி பரிசு வாங்கியிருக்கிறேன்.. ஆனால் மனதுக்குள், என்னை பெண் பார்க்க வரும் சம்பவம்  குறித்த ஆயிரம் கனவுகள் இருந்தது..

சினிமாவை தவிர்த்து, பெண் பார்க்கும் நிகழ்ச்சியை நான் நேரில் பார்த்தது இல்லை.. அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன்.. அந்த சமயத்தில் எப்படி பேச வேண்டும். எப்படி நடக்க வேண்டும் என்று ஒரு மாஸ்டர் பிளானே இருந்தது..

என்னைப் பார்த்தவுடனே அவருக்கு பிடிக்குமா? உடனே சம்மதம் சொல்வாரா? கல்யாணத்துக்கு இடைப்பட்ட நாளில் எப்படி இருக்கும்? முதன் முதலில் என்ன பேசுவது? என் பெயரை எப்படி செல்லமாய் அழைப்பார் என்று நித்தமும் கனவுகள் சுமந்த பதின் பருவம் எனக்கு பொற்காலங்கள்..

காலங்களும் காட்சிகளும் மாறின.. என்னைப் பெண் பார்க்கும் படமும் ஆரம்பித்தது.. இதுவரை என்னை ஐந்து பேர் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்..
ஆனால் நான் கட்டைவிரல் கோலம் போட்டதில்லை.. காபி சுடும் என்று சொன்னதில்லை.. ஜன்னல் வழியே அவன் சுருள் கேசத்தை ரசித்ததில்லை.. கிளம்பும் போது புன்னகையை பரிசாக பெற்றதில்லை..

இன்னும்  விரிவாக சொன்னால் அப்படி பெண் பார்க்கும் படலம் எனக்கு நிகழ்ந்ததில்லை... ஒரு வசந்த காலத்தை தவறவிட்டிருக்கிறேன் நான்..


''அப்போது நான் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி.. விடுமுறை சமயம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள என் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.. சின்னதாக சலசலப்பும் அதற்கு காரணம் நான் எனவும் என் வீட்டாரின் வார்த்தைகளில் புரிந்து போனது..

மனதுக்குள் குருகுருப்பு எட்டிப் பார்க்க, கடைசியில் என் அத்தையின் மூலமாக விசயம் வெளிவந்தது.. அதாவது ஒரு டாக்டர் என்னை பெண் கேட்டு வந்திருக்கிறார்... எனக்கு திருமண வயது வரவில்லை என்று சொல்லி, அவர்களே அனுப்பி விட்டார்கள்... அது தெரிந்த நிமிடம் முதல் என்  மனசுக்குள் இனம் புரியாத சந்தோஷம்..

பின்னே.. என்னைப் பொறுத்தவரை விவசாயியும், மருத்துவரும்தான் தான் எனக்கு ரோல் மாடல்கள்.. அப்படி ஒரு டாக்டரே என்னை திருமணம் செய்து கொள்ள முன் வந்தது தெரிந்தும் தலைகால் புரியாமல், கட்டை விரலில் கோலம் போட்டு புது வெட்கத்துடனே அலைந்தேன்.. அவர் பெயர் என்ன தெரிந்து கொள்ள மனதுக்குள் ஆர்வம் தோன்ற.. விசாரித்ததில்.. அவர் என் தாத்தாவுக்கு மிகவும் பழக்கமானவர் என்று தெரிந்ததுமே ஜெர்க்கானது..
காரணம் ஹாஸ்பிட்டல் போகவே விருப்பம் இல்லாத தாத்தாவுக்கு எப்படி டாக்டரை தெரியும்? என் கேள்விக்கு ரெண்டே நாளில் விடை கிடைத்தது.. எங்க தாத்தா வீட்டில் இருக்கும் எருமைக்கு உடம்பு சரியில்லாமல் போக, வைத்தியம் பார்க்க வந்த மாட்டு டாக்டர்தான் என்னை பெண் கேட்டிருக்கிறார்..

அடுத்த நிமிடம்''ஓ" என கத்தி கூப்பாடு போட்டுவிட்டேன்.. பின்னே எருமை மாடு கூட சுத்தற ஒரு வெட்னரி டாக்டர் எனக்கு மாப்பிள்ளையா? என்று நான் அழ மொத்த குடும்பமும் என்னைப் பார்த்து சிரித்தது. அதில் இருந்து நான் எதாவது குறும்பு செய்தால், மாட்டு டாக்டருக்கு கட்டி வைத்துவிடுவேன் என்று மிரட்டுவார்கள்..

மனது தேற்றி வந்ததில்,, அடுத்த முறை மாரியம்மன் திருவிழாவிற்கு ஊர்க்கு வந்திருந்தேன்.. அதற்கு முதல் நாள்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் அரவிந்த் என்னும் வழக்கறிஞர் என்னை பெண் கேட்டு சென்றிருக்கிறார்.. படிப்பு முடியட்டும் என்று எங்கள் வீட்டில் சொல்லி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்..

அட.. அதை அவர்களே முடிவு செய்தால் எப்படி? என்னிடம் ஒரு வார்த்தை கேக்க வேண்டாமா? இத்தனைக்கும் அந்த மாப்பிள்ளை என் போன் நெம்பர் கேட்டிருக்கிறார். ஆனால் என் லூசு குடும்பம்  (இது எங்க பேமிலியின் பெட் நேம்) எதும் சொல்லாமல் அந்த ஆளை துரத்திவிட்டிருக்கிறது.. எனக்கு அழுகையாக வந்துவிட்டது.. பாவிங்களா... நான் வெட்கப்பட்டு நடந்து வர்றதுக்கு ஒரு சான்ஸ் குடுங்கன்னா விட மாட்டிங்கறாங்களே?
சரி.. இன்னோரு சந்தர்ப்பம் வரும் என்று நானும் காத்திருந்தேன்..

கடவுள் ரொம்ப நல்லவருங்க;..நான் சிக்சர் அடிக்க இன்னோரு பாலும் போட்டார். பட் வழக்கம் போல என் குடும்பம் பேட் பிடிக்காமல் தடுக்க விட்டுவிட்டது,, இந்த முறையும் லாயர்தான்.. அதுவும் எங்க சொந்தக்காரர்தான்.. கல்யாணத்துக்கு பிறகு என்னை தொடர்ந்து படிக்க வைப்பதாக சொல்ல எல்லோரும் அவரை பிடித்திருக்கிறது..

அதே சமயம் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் எந்த சீர்வரிசையும் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டில் ஏகத்துக்கும் பேச, உஷாரான என் குடும்பம் உணமையாகவே ஒரு போலீஸ் வைத்து அவரைப் பற் றி விசாரித்திருக்கிறது.. கடைசியில் வெளிப்பட்டது குட்டு..

அவனுக்கு ஏற்கனவே வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் ஆகியிருக்கிறது.. அந்த பெண் வெளியூர் சென்ற சமயம் பார்த்து இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.. உண்மை  தெரிந்தும் அவன் வீடு ஏறிப் போய் சண்டை போட்டது என் குடும்பம்.
அந்த மாத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் உள்ள மின்சார துறையில் என்ஜினியர் மகேந்திரன் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து பேசியிருக்கிறார்.. வேற்று ஜாதிக்காரர் என்பதால் 'சாரி" சொல்லிவிட்டார்கள் இவர்கள்..

சை.. ''இதுக்கும் மேல நம்மால முடியாதுப்பா.''.. என்று நானே வெறுத்திருத்துப் போயிருந்தேன்.. படிப்பும் முடிய, சென்னையில் பிரபல நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன்.

அப்புறம் என் திருமணம் பற்றி என் வீட்டில் தீவிரம் காட்ட,  நான் மறுத்து வந்தேன்.. ஊருக்கு போகும் போதெல்லாம் யாராவது ஒரு மாப்பிள்ளை பற்றி பேச்சு  அடிபடும். கடைசி கிளைமாக்ஸில்தான் கொதித்துப் போய்விட்டேன் நான்..
'நீ மட்டும் சரின்னு சொல்லு.. ஒரு பிசினஸ் பண்ற பையன் இருக்கான்.. ஜாதகமும் ஓ.கே'' என்று சொன்னார் மாமா..

அப்போது நான் திருமணத்தை வெறுத்திருந்த சமயம்.. வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள்.. ஊருக்கு போகவே வெறுப்பாக இருக்கும்.. என் திருமணப் பேச்சே பெரும் பேச்சாக இருக்கும்.. ஒரு கட்டத்தில் என் மீது தண்ணி தெளித்து விட்டார்கள்.. அப்புறமாய் கிடைத்த தகவல் அந்த பிசினஸ் மேனில் பிசினஸ்.. புண்ணாக்கு மற்றும் மாட்டு தீவனங்கள் விற்பதுதான்.... எங்க ஊரில் இருந்து ஈரோடு போகும் வழியில் அவர் கடை உள்ளதாம்.. விசயம் தெரிந்ததும் எனக்கு சிரிப்புதான்  வந்தது..

அலுவலக நண்பர்களிடன் ஒரு ஓய்வு நேரத்தில் இந்த கதையைச் சொன்னேன்..

''இரு இரு.. முதலில் ஒரு மாட்டு டாக்டர், கடைசியா மாட்டுத் தீவனம் விக்கறவர்.. நீ என்ன உங்க வீட்டு செல்லப் பிராணியா. (அதற்கு மேல் சொன்ன கமெண்ட் எல்லாம் என் மானத்தை வாங்கும் என்பதால் நானே சென்சார் பண்ணுகிறேன்) என்று என்னை காலி செய்துவிட்டார்கள்..

இன்றும் தமிழ் சினிமா பார்க்கும் போதும் அடிக்கடி சிரித்துக் கொள்கிறேன்.. என்ன செய்ய நான்."

Monday, March 29, 2010

நானும் சாத்தானும்..

தனிமை சாத்தான் என் எதிர் நின்றது.
தாகம் தணிக்க என் கனவுகள் கேட்டது.


தனிமையில் கரைந்த நாட்கள் எத்தனை..
தலை முடி கோதிய கணங்கள் எத்தனை..
உறுபசியோடு விரல்கள் கோர்த்து
உலகினை மறந்த பொழுதுகள் எத்தனை..

கடல் மணல் பரப்பில் நிலவொளி தன்னில்
மடிதுயில் கண்ட மகிழ்வுகள் எத்தனை..
வரும் வழியெங்கும் நினைவுகள் விதைத்து
திசைகளை மறந்து தவித்தது எத்தனை.....

பகல் வெளியெங்கும் பசியினை மறந்து
தேடித் களைத்த தினங்கள் எத்தனை...
வெட்க சிறகுகள் விரித்துப் பறந்து
முத்தச்சத்தம் மொத்தம் எத்தனை....

அச்சம் துளிர்த்திட ஆரத்தழுவி
சொர்க்கம் கண்ட சுகங்கள் எத்தனை...


எத்தனை எத்தனை என்றது சாத்தான்- இவை
எதுவுமே நிகழ்ந்ததில்லை என்றேன் நான்!
 சித்தக் காதல் துறக்க சென்று - இவை
மொத்தமும் கண்டு வா என்றது...

Monday, March 22, 2010

அவன் என் காதலன்

இது என் முதல் காதலனைப் பற்றிய பக்கங்கள்...

 ''என் முதல் காதலன்'
அறிமுகப்படுத்துகிறேன்
உன்னை!
அதிரச் சிரிக்கிறான்
என் கணவன்...

இரவு நேரத்தில்
உன்னுடன்
ஊர் சுற்றுவதாய்
புகார் செய்கிறார்கள்
அக்கம்பக்கத்தினர்..
என்னை
தைரியமாய்
வளர்த்ததாய்
பெருமைப்படுகிறாள் அம்மா!

என் சந்தோஷ‌
தருணங்களில்
உன்னை
கட்டியணைத்து
முத்தமிடுகிறேன்!
பைத்தியம்
என்கிறது
இந்த சமூகம்..

உனக்கும் எனக்கும்
என்ன உறவு!
விலை கொண்டு
வந்தாய்!
என் உயிர் கொண்டு
வளர்த்தேன்!.
என் முதல்காதல் ஆனாய்!

நீ
என் உயிருக்கும் மேல்
உருகினேன் ஒருநாள்!
பதினைந்தாயிரம்
கூட தேறாது
என்கிறார் அப்பா..



என் காதலனைப் பற்றி..

மார்ச் 22‍ இந்த நாளில் ஒவ்வோருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கலாம்.. என்னைப் பொறுத்தவரை என் முதல் காதலனைச் சந்தித்த நாள்.. இன்று அவனது மூன்றாவது பிறந்த நாள்.. அவனை என் பாய்பிரெண்ட் என்று நட்பு வட்டாரம் சொல்லும்.. நான் செல்லமாய் 'பிளாக்கான்" என்று சொல்லுவேன்...அரசாங்கம் அவனை TN 38 AL 8850  என்று சொல்கிறது..

ஆம்... என் ஸ்கூட்டி டீன்ஸ் டூவீலர்தான் என் முதல் காதலன்..



2007‍ வருடம், நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது அவனை என்னுடன் அழைத்து வந்தேன்.. படிக்கும் போதே என் எழுத்து திறமை மாதம் 4000 வரை சம்பாதிக்க உதவியது.. அந்த சேமிப்பின் முதலீடுதான் என் பிளாக்கான்.. என் வாழ்வில் நான் சம்பாதித்த முதல் சொத்து மற்றும் நம்பிக்கை.. அவன் வந்த பிறகுதான் எனக்கான வசந்தம் வந்தது.. 'பரவாயில்லையே, படிக்கும் போதே சம்பாதித்து வண்டி வாங்கியாச்சு" என்று என் மதிப்பும் கூடியது..  இதுவரை அவனை நான் உயிரற்றவனாய் நினைத்தது இல்லை..


என் புன்னகை, தனிமை, ஏக்கம், சந்தோஷம், துரோகம், கண்ணீர், தவிப்பு, துக்கம் என அனைத்துக்கும் அர்த்தம் அறிந்தவன் அவன்.. சென்னை வந்த புதிதில் நட்பில்லாமல் நான் தவித்த போது, என்னை தாங்கிய சுமைதாங்கி ஆனான். அவனின்றி ஒரு அணுவும்  அசையாது எனக்கு.....  பிரிய மனமின்றி, சர்வீஸ் ஸ்டேசனில் நாள் முழுக்க காத்திருந்து அவனை அழைத்து வந்திருக்கிறேன்..

இதுவரை‍க்கும் என்னை ஒரு நாள் கூட நடுரோடில் தவிக்க விட்டது இல்லை.. ஒத்துழைக்காமல் அழிச்சாட்டியம் செய்தது இல்லை.. 2008‍‍ ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு ஒரு விபத்து நேர்ந்தது... சத்தியமாய் அதற்கு என் காதலன் காரணம் இல்லை.. விபத்தில் என் இடது கால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.. முட்டி‍‍யில் உள்ள ஜாயிண்ட் உடைந்து ஸ்குரூ வைக்க வேண்டிய நிலை... 80000 வரை செலவானது. ஆப்ரேஷன் தியேட்டரில் நான் டாக்டரிடம் கேட்ட கேள்வி.. என்னால் மறுபடியும் வண்டி ஒட்ட முடியுமா? முடியும் எனில் எனக்கு ஆப்ரேஷன் செய்யுங்கள். இல்லையெனில் என்னை இப்படியே விட்டுவிடுங்கள் என்று நான் அழுததைப் பார்த்து சகிக்கமுடியாமல் மயக்க ஊசி போட்டார் டாக்டர்..

அந்த கொடுமையிலும் ஒரு சந்தோஷம்.. விபத்தில் என் காதலனுக்கு சின்ன சிராய்ப்பு கூட ஏற்படவில்லை.. அப்படியே ராஜகுமாரன் மாதிரி கம்பீரமாய் நின்றான்.. அதன் பின் படுத்த படுக்கையாய் ஒரு மாதம் இருந்தேன்.. மீண்டும் என்னை பழைய வாழ்க்கைக்கு திரும்ப வைத்தது சத்தியமாய் அவன் மட்டுமே!.

இந்த சென்னை மாநகரத்தில் நானும் அவனும் கால்பதித்த தடங்கள் அதிகம்..

காதல் என்றால் கண்ணீர் உண்டுதானே.. வில்லன் உண்டுதானே...

இதே அவனை விடுத்து, இன்னும் கொஞ்ச நாளில்,  நான் வெளித் தேசம் போகப் போகிறேன்.. அவனில்லா முதல் மற்றும் இறுதிப் பயணம்.. இன்னும் எத்தனை நாட்கள்  எங்கள்  இருவருக்குமான உறவு என்ற நினைப்பில் கண்ணீரில் கரைகிறது என் நிமிடங்கள்.. சத்தியமாய் என் முதல் காதலன் அவன்... நான் திரும்பி வரும் போது அவன் எங்கே எப்படி இருப்பான் என தெரியாது..

அவன் தந்த சந்தோஷமும், பிரிவின் வலியும் என் ஆயுளுக்கும் இருக்கும்...

ஐ லவ் யூ பிளாக்கான்.. ஐ மிஸ் யூ லாட்.....