Monday, May 31, 2010

விடை தெரியாத கேள்விகள்

நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
மாடி வீட்டு
நைஜீரியாக்காரியிடம்
என்னவென்று
சொல்லித் தருவது,
பெருமாளுக்கு வைத்த
சர்க்கரை பொங்கலை?


பார்வை கடக்கும்
சமயம் மட்டும்
புன்னகைத்து,
இத்தனை நாட்களில்
நான்கு முறை மட்டுமே
`ஹலோ` சொல்லியிருக்கும்
அடுத்த வீட்டு
வெள்ளைகாரியிடம்
அவசரத்துக்கு
ஒரு டம்ளர் சர்க்கரை
எப்படி கேட்பது?


வருடம் ஒருமுறை
லிவிங் டுகெதர்
ஆட்களை மாற்றும்
பக்கத்து வீட்டு
கருப்பின பெண்ணிடம்,
வெள்ளிக்கிழமை ஆனால்
என்னவென்று தருவது,
மஞ்சள் குங்குமத்தை?


‘கார் பார்க்கிங்-யில்
இடம் தருகிறான்.
கேட்கும் போது
உதவ காத்திருக்கிறான்.
அறிமுகத்தில் அன்பான
இந்தியபெண் என்கிறான்.
எதிர் வீடு என்றாலும்
பயம் ஏற்படுத்தும்
அந்த பாகிஸ்தான்காரனை
‘அண்ணன்” என எப்படி சொல்வது?


ஆட்டு குட்டி வாங்கிருக்காங்க,
ஊரில் இன்னிக்கு மஞ்சநீர்,
வயல்-ல அறுவடை,
அக்கா கருவுற்றிருக்கிறாள்,
இப்படி பகிர்ந்துகொள்ள
எத்தனையோ செய்திகள்.
மொழி அறியாத தேசத்தில்
யாரிடம் சொல்வது?

Tuesday, May 25, 2010

என் கணவனின் காதலிக்காக..

ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணும் போதே, கரண் சொல்லிவிட்டார்... ‘அங்க என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லை, அப்புறம் மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டு திரியக் கூடாது.”

எல்லாத்துக்கும் தலையை தலையை ஆட்டிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் வரை எதுவும் தெரியவில்லை.. தார் ரோட்டில் கால் வைத்தபோது சுள்ளென உரைத்த வெயில் நேரத்தில் தான் சில உண்மைகளும் புரிய ஆரம்பித்தது..

அத்தனை தடவை நானும் கரணும் போன் பண்ணி தகவல் தெரிவித்தும், கிளம்பும் முன் கூப்பிட்டுச் சொல்லியும் ஒருத்தர் கூட ரிசிவ் பண்ண ஏர்போட் வரவில்லை.. சரி தைரியமாய் வீட்டுக்கு கிளம்பலாம் என்றால் மதுரை பழக்கமில்லாத நகரம்.. பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, கரணுக்கு கால் பண்ணினால் வழக்கம் போல கால் வெயிட்டிங்.. கோபத்தில் டிராவல் பேக்கை உதைத்துவிட்டு, வேறுவழியின்றி வீட்டுக்கு கால் பண்ணினேன்.. பேசியது கரணின் அக்கா கணவர்..

‘அட, அதுக்குள்ள வந்திட்டியாம்மா, நாங்க ஃபிளைட் லேட் ஆகும்ன்னு நினைச்சு இப்பத்தான் கிளம்பறோம்.. எப்படியும் நாங்க ஏர்போர்ட் வர ஒரு மணி நேரம் ஆகும், வெயிட் பண்றியா இல்லை-”ன்னு அவர் இழுக்கும் போதே, ’பரவாயில்லை அண்ணா, நான் டாக்ஸி புடிச்சி வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு மனதுக்குள் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு டாக்ஸி தேடினேன்..

ஏர்போட்டில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் முன் என்னைப் பற்றி ஓர் அறிமுகம்..

நான் கெளசல்யா.. டில்லியில் அப்பர் மிடில் கிளாசில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்.. என்னுடன் வேலை பார்த்த கரணுடன் காதலாகிப் போக, வீட்டில் பச்சைக்  கொடி காட்டப்பட்டது.. கரண் வீட்டில் தான் ஏகத்துக்கும் பிரச்சனை.. எங்கள் வீடு தேடி வந்து திட்டிவிட்டுப் போனார்கள்.. ஆனால் என்னைவிட கரண் பிடிவாதமாய் நிற்க, வேறுவழியின்றி டெல்லியில் என் வீட்டு உறவினர்களுடன் எளிமையாய் திருமணம் நடக்க, அட்சதை மட்டும் போட்டுவிட்டு சொல்லிக்காமலேயே விடை பெற்றது அவரின் குடும்பம்.. பின் நானாக போன் பண்ணும் போது, ’நல்லாயிருக்கியாமா’ என்ற ஒற்றை வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்வார்கள் மாமியாரும் மாமனாரும்...

இதோ... ஊரில் திருவிழா.. போயே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நின்று இருவருக்கும் டிக்கெட் புக் பண்ணியது நாந்தான்... கடைசியில் கரண் செக்‌ஷனில் ஆடிட்டிங் நடக்க, லீவ் கிடைக்காத மனிதருக்கு டாட்டா சொல்லிவிட்டு வந்தது தப்போ? என இப்போது உறைக்க ஆரம்பிக்கும் முன் என் மாமியார் வீடு வந்து சேர்ந்தது....

இனி மெயின் சீன்க்குப் போகலாம்..

ஆரத்தி தட்டெல்லாம் சுத்தி மரியாதையாகத்தான் வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள் என் மாமியார் வீட்டில். புதிய இடத்தின் சூழ்நிலையை படிக்கும் முன்னே அன்றைய பொழுது கழிந்தது..

அடுத்த நாள், நான் எழுந்ததே விமலாவின் அதட்டல் பேச்சில்தான்.. ‘என்னதான் சிட்டியில் இருந்தாலும் வாசலில் கோலம் போடற பழக்கம் கூடவா இல்லை’ என்று அவள் சொன்னது என்னைத்தான் என்று புரியாமல், காபியும் ஹிந்து பேப்பருமாய் ஹாலில் உட்கார்திருந்தவள் நான்..

‘நம்ம குடும்பத்துக்குன்னு சில பழக்க வழக்கம் இருக்கு.. வீட்டு ஆம்பிளைங்களா இருந்தாலும் நைட்டி போட்டுக்கிட்டு முன்னாடி வர்றது இல்லை” என்று அவள் குறிப்பு குடுக்கும் சமயம் நான்  துப்பட்டாக் கூட போடாமல் வெளிக் கதவிற்கு அருகில் நின்று தலைதுவட்டிக் கொண்டிருந்தேன்..

இங்கே விமலா என்பது என் கணவரின் மாமா மகள்.. அவளைத்தான் அவர் கல்யாணம் பண்ணுவதாக பேச்சு என்பதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். ஆக இதையெல்லாம் முன்னரே எதிர்பார்த்துதான்..

ஆனால் ஒட்டு மொத்த குடும்பமும் ஏதோ ஒட்டுதல் இல்லாமல் என்னிடம் பேசுவது மட்டும் ஏன் என புரியவில்லை. (இத்தனைக்கும் அந்த மாத சம்பளத்தை அப்படியே மால் ஒன்றில் பில்லாக்கி பட்டுப் புடவைகளுமாய் காஸ்டிலி கிப்டுகளுமாய் அந்த குடும்பத்திற்கு கரைத்திருந்தேன்). கூடவே என்னை எப்போதும் ஒரு ஜோடிக் கண்கள் பின் தொடர்வதாக பிரம்மை வேறு.. தவிர நான் நின்றால், நடந்தால், பேசினால் எல்லாவற்றிற்கும் வார்த்தைகளிலும் பார்வையிலும் வெறுப்பைக் காட்டினாள் விமலா. (அவளுக்கும் சேர்த்துதான் பனாரஸ் பட்டு வாங்கிவந்தேன்).

நானாக பேச முயற்சித்தாலும் வெட்டிச் சென்றாள். அதையும் தாண்டினால் மெளனமான கேள்விகளுடன் என் கண்களை நேருக்கு நேர் பார்க்கிறாள்.. என்னால் எதுவும் கேட்க முடிவதில்லை. திருவிழா முடிந்தும், கரண் போர் அடிக்கிறது சீக்கிரம் வா என் குறுஞ்செய்தி அனுப்பியும் நான் மாமியார் வீட்டில் இருந்து கடையை கட்டாமலிருக்கும் காரணம் விமலா பற்றிய புரிதல்கள் தான்..

ஒருவேளை கரணை தீவிரமாக காதலித்துவிட்டு மறக்க முடியாமல் தவிக்கிறாளோ, நான் பறித்துக் கொண்டேன் என்று கோப்படுகிறாளோ? என்று எல்லா வகையில்லேயும் யோசித்தாயிற்று... ஏனெனில் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவளாக இருந்தாள் விமலா.

உண்மையை உடைக்க வேண்டுமே அதற்காகத்தான் என் மாமியாரிடம், தூண்டில் வீசினேன்..
‘ஏன் அத்தை, உங்க அண்ணா பொண்ணு டிகிரி முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு, மேற்கொண்டு படிக்கப் போறாங்களா...... இல்லை தஞ்சாவூர்ல எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பம் இருக்கு... நம்ம ஜாதிதான்” என்று நான் சொல்லும் போது கூர்மையாய் ஒரு பார்வையை என் மாமியார் செலுத்த, சட்டென உதடு கடித்து ‘இல்ல உங்க ஜாதிதான்.. எம்.பி. ஏ படிச்சிருக்கார்..  மாசம் 25000 சம்பளம். பேசிப் பார்க்கலாமா?” என்று நான் முடிப்பதற்கும் அவர் சோபாவில் அமர்ந்தபடி என்னுடன் பேச தயாராவதற்கும் சரியாக இருந்தது..

‘உன்கிட்ட சில விசயங்களை உடைச்சுப் பேசணும் கவுசி.. இதை விமலா மேல இருக்கற பாசமோ, இல்லை நீ நாங்க தேடாத மருமகள்ங்கிறதாலோ சொல்லலை... கரணோட அம்மாவா இதை சொல்லறேன்..

சின்ன வயசில இருந்து கரண் கூடத்தான் சுத்துவா விமலா.. வளர்ந்தபிறகு ஒருத்தருக்கொருத்தரை பிடிச்சுப் போச்சு.. என் முன்னாடியே அந்த புள்ளைக்கு முத்தம் குடுத்திருக்கான்.. வீட்டில யாரும் இல்லாதப்ப அவகிட்ட தப்பா நடக்க பாத்திருக்கான்.. கேட்டா நான் கட்டிக்கப் போற பொண்ணுதானேன்னு நியாயம் பேசுவான்.. அவகிட்ட கோவிச்சுக்கிட்டுத்தான் டெல்லிக்கே வந்தான்.. இங்க இவளும், ‘இன்னிக்கு கோபம் தெளியும், நாளைக்கு போன் பண்ணி பேசுவான்’ன்னு காத்திருந்தாள்.. நாங்களும் ஏதோ வயசுக் கோளாறுன்னு நினைச்சிருந்தோம்..

’திடிர்ன்னு ஒருநாள் உன்னை லவ் பண்ணறதா சொன்னான்.. எங்களுக்கு ஒன்னும் புரியல.. விமலாவைக் கேட்டா, விடுங்க அத்தை, என்னிக்கு இன்னோரு பொண்ணு அவ மனசில வந்திட்டாளோ, அப்பவே எல்லாம் முறிஞ்சிப் போச்சுன்னு கண்ணீர்ல கரையறா.. எங்களுக்கு உன் மேலயோ, காதல் கல்யாணத்திலேயோ வெறுப்பு இல்லை.. விமலாவை நினைச்சுத்தான் வருத்தம்.  கரணைக் கேட்டா, ‘என் ஸ்டைலுக்கும் டேலண்டுக்கும் அவ ஒத்துவரலை.. கவுசிதான் பெட்டர்-ங்கிறான்..

வீட்டுக் கடனை கட்டி குடும்பம் தலைநிமிர வெச்சவனை எதிர்த்துப் பேச உங்க மாமாவால முடியல.. பெத்த பாசம் எனக்கு.. உன் மேல பாசம் காட்டினா, விமலா துடிப்பா.. என்ன செய்யச் சொல்லற என்னை.. ஆண்கள் தப்புப் பண்ணினா கடந்துப் போய்க்கிட்டே இருக்காங்க.. அவங்களைச் சுத்தி இருக்கற பெண்கள்தான் அதனால பாதிக்கப் படறாங்க” என்று அவர் கண்ணீருடன் பேசி முடிக்கும் போது, அந்த மடியில் தலை சாய்த்திருந்தேன் நான்..

அடுத்த நாளே டெல்லிக்கு கிளம்ப ரெடி.. ஏர்போர்ட்டுக்குப் போக கார் வாசலில் நின்றது.. இந்த முறை நான் பார்க்கும் போது விமலா கண்களில் துயரம் இருப்பதாக உணர, அருகில் சென்று அவள் கை இரண்டையும் பிடித்துக் கொண்டு ‘என்னை மன்னிச்சிடுங்க” என்றேன்..

எதற்கு என்று அவளும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை.....

Tuesday, May 18, 2010

அவனை அறியும் தருணம்

லிப்டில் மிக நெருக்கமாய்
நானும் அவனும்!
ஒரு முறை கண்ணடித்தேன்..
இரு முறை
கண் சிமிட்டினான் அவன்!
அள்ளி அணைத்து
முத்தமிட்டேன்!
மூணு வயசு
ஆகுதுன்னு சொன்னாங்க
அவங்க அம்மா!


பேரழகு தேவையில்லை
அவன் காதலைப் பெற!
சிரித்த முகமும்
கொஞ்சம் குறும்பும்
இருந்தால் போதும்
பார்க்கும் சமயமெல்லாம்
எனக்கு முத்தம் தருகிறான்
அந்த எல்.கே.ஜி பையன்!


அவன் என் எதிர் வீடு!
ஜன்னல் விழி
தரிசனம் மட்டுமே!
அதிகாலை அவனுக்கான
பூக்களுடன் காத்திருப்பேன்!
எனக்கான புன்னகையுடன்
வருவான் அவன்!
சில நேரம் பறக்கும் முத்தம்
பரிசாய்  கிடைக்கும்!
காதலுக்கு மொழி தடையில்லை!
ஆம் இப்போதுதான்
அவன் எ.பி.சி.டி
சொல்லப் பழகுகிறான்!

அப்பா பெயர் கேட்டால்
சிரிக்கிறான்!
சாப்பிட சொன்னால்
அழுகிறான்!
அடுத்த ஆண் மகனுடன்
பேசினால் முறைக்கிறான்!
டாட்டா சொன்னால் மட்டும்
ஐ லவ் யு என்கிறான்
பள்ளி செல்லும் முன்னே!சில நேரம் கிறுக்கல்,
சில நேரம் கிள்ளல்,
தட்டிக் கொடுக்க,
கட்டிப் பிடிக்க
என எப்போதும்
  அவனுக்கு
என் உள்ளங்கை
தேவையானது!
இப்போதெல்லாம்
கூட்டல் கழிதல் கணக்குக்கு
காதலுடன் கேட்கிறான்!

Thursday, May 13, 2010

விடை பெறுகிறேன்


ஒரு காதல்
பகிர்வை விட கடினமானது
விடை பெறும் தருணம்...
இன்று என்னுடனானது அது!
உறவுகளை விட்டு
அயல் தேசம் போகிறேன்
அன்பைத் தேடும் அகதியாகி!

தவழ்ந்து நடைபழகி
நான் நிமிர்ந்து நின்ற‌
இந்திய மண் வழியனுப்புகிறது
வேறொரு நாட்டிற்கு
தத்துப் பிள்ளையாக!

இனி என் எல்லை
கடக்கும் விமானத்தில்
அம்மாவுக்கான முத்தங்களையும்
நட்புகளுக்கான பிரியங்களையும்
ஏக்கங்களுடன் அனுப்பி வைப்பேன்!

ஐ.பி.எல் கிரிக்கெட்டும்
தேர்தல் கலவரமும்
நான் குடியேறிய பிரதேசத்தில்
பெட்டிச் செய்தியாக,
காணும் இந்திய முகங்களில்
என் உறவுகளின்
சாயலைத் தேடுவேன்!

முதன் முதலான சைக்கிள்,
மாமர நிழல்,
சோளக் காட்டு நேசம்,
மல்லிகைப் பூ வாசம்,
செம்மண் சாலை,
தென்னங் காற்று,
மரப்பாச்சி பொம்மை
அத்தனையும் வழியனுப்புகின்றன‌
என் சம்மதம் கேட்காமலே!

ஊர் கூட்டி பெயர்
வைத்துக் கொண்டவள்,
மொழி அறியா ஊரில்
மெளனமாய் வாழ‌
விடை பெறுகிறேன்
நான் பிறந்த
இந்திய மண்ணிலிருந்து!

Wednesday, May 5, 2010

ஊனாகி உயிராகி மழையாகிறான்..

 உன் அறிவிப்பை
கட்டியம் கூறும்
பெருங்காற்று
என் திசையுடன்
திரும்பி போகும்!
பின்னே
காதலன் வருவதையும்
காதல் நுகர்வையும்
அறியாதவளா நான்?


சில சமயம்
துளித்துளியாய்!
பல நேரம்
பேரிடியாய்!
சட் சட் சட்
ராகத்தோடு,
இல்லையெனில்
தென்றலின் சாரலோடு!
பொதுவாக ஊருக்கும்
தனிமையில் எனக்கும்
காதலைச் சொல்கிறாய்!
மழை கண்ட எனக்கு
மனம் சொல்ல தெரியவில்லை.


முதலில்
ஒரு முத்தம்..
அடுத்ததாய்
ஆரத் தழுவுகிறாய்!
சங்கமிக்கும்
பொழுதுகளில்
கட்டவிழ்க்கப்படுகிறது
என் வெட்கங்கள்
அக்கம் பக்கம் அறியாமல்!
என் ஏக்கத்தை
தணிக்கவே
அடிக்கடி வருகிறாய்
மழையாகி!


அது ஒரு
ஆடை நனைந்த பொழுது!
உன்னைப் பருகி
நீ என்னைத் தழுவி!
உயிரும் உணர்வும்
கூத்தாடுகையில்
விடை பெறுகிறாய்
வானம் தெளிந்ததென!
இன்று பெய்கிற‌
மழை
என்றோ பெய்த
மழையின் மிச்சமென
குதுகலிக்கிறேன் நான்!


''கோடை மழை
சூடு கிளப்பும்''
என்கிறாள் அம்மா!
காதல் வேறென்ன‌
செய்யும்-
மெளனமாய் சிரிக்கிறேன்
மழைக்கு மாமியார்
ஆனவளைப் பார்த்து!