Monday, October 18, 2010

முகமூடி மனிதர்கள்

முதன் முறை வட்சலா மேடத்தைப் பார்த்ததுமே, இனி எனக்கு ஜெயம்-தான் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. ஆமாம், பிரபல தமிழ் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்து மாதம் இரண்டாகப் போகிறது. ஆனால் உருப்படியாக இன்னும் ஒரு பேட்டியையும் எடுத்த மாதிரி இல்லை. எடிட்டரிடம் பேச்சு வாங்கியதுதான் மிச்சம். நானும் முயற்சிக்காமல் இல்லை. இட்லி கடை நடத்துகிற பாட்டியில் ஆரம்பித்து இன்போஸிஸ் கம்பெனியின் தலைவர் வரை எல்லோரையும் பேட்டி எடுக்க முயற்சி செய்தாகிவிட்டது. சினிமாக்காரர்களை பேட்டி எடுக்க முயற்சித்ததில் ’புது ஆள், உனக்கு என்ன தெரியும்’ என தட்டிக் கழித்தனர்.


திறமைசாலிகளைத் தேடிச் சென்றால் அவர்களுக்கு பத்திரிக்கைக்கு தகுந்தமாதிரி பேசத் தெரிவதில்லை. நாமாக கேள்வி கேட்டாலும் வாய் பொத்தி சிரிக்கிறார்கள். அதைத் தாண்டி பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றிய செய்தியோ, கட்டுரையோ வர வேண்டும் என நினைப்பவர்களிடம் விஷயம் இல்லை. முகஸ்துதி பாடும் விளம்பரமாகவே இருக்கிறது அவர்கள் பேச்சு. திக்கிக் திணறி இதையெல்லாம் கட்டுரையாக எழுதித் தந்தால் `ஜீவனில்லை` என துரத்தி அடிக்கிறார் சப் எடிட்டர்.

இன்னும் ஒரு வாரம் அவகாசம். அதற்குள் உருப்படியாய் ஒரு பேட்டி எழுதித் தந்து வேலையை தக்க வைத்துக் கொள்கிற வழியைப் பார் என அலுவலகத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்ட மூன்றாவது நாளில் தான் வட்சலா மேடத்தை சந்தித்தேன். ஓவியர், சமூக சேவகி, கலை இலக்கிய வாதி என ஏகப்பட்ட பட்டங்களை சுமந்து கொண்டிருந்தவரிடம் என்னை அறிமுகப்படித்திக் கொண்டவுடன் முகம் மலர வரவேற்றார். தன்னைப் பற்றி அதிக விவரங்களை அடக்கத்துடன் தந்தவர் நிச்சயம் என் வேலையை காப்பாற்றி விடுவார் என நினைத்தேன்.

வட்சலா மேடம் சாதாரண மனுஷி இல்லை என அன்றே புரிந்து போனது. ஓவியங்களில் மிக கடினமானதும், திறமையானதுமான தஞ்சாவூர் ஓவிய பாணியில் கடவுள் உருவங்கள் வரைவதை மட்டுமே அவர் லட்சியமாக கொண்டிருந்தார், இலக்கியத்தில் இலக்கணங்களை கரைத்து குடித்தவராக இருந்தார். படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு பணம் தந்து உதவி செய்தல், ரக்‌ஷா பந்தன் (சகோதரன் நலமாக இருக்க வேண்டும் என அவரின் சகோதிரிமார்கள் கடவுளை பிரார்த்தனை செய்து, கையில் ராக்கி என்னும் கயிறு கட்டி விடுவார்கள்) அன்று இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ராக்கி கயிறு வாங்கி அனுப்பி வைப்பார். முதியோர் இல்லங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி வைப்பார். தவிர சமூக நல அமைப்பு ஒன்றில் சென்னை வட பகுதிக்கு தலைவியாக இருந்தார். அவரின் பிள்ளைகள் இருவரும் அமெரிக்க வாசிகள். மூத்தவர் அங்கு வேலை பார்க்க, இளையவரோ படித்துக் கொண்டிருந்தார். வட்சலா மேடத்தின் கணவர் சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர்.

அறிந்த விசயங்களை அழகான தமிழில் கோர்வையாய் எழுதிக் கொடுக்க, அது அடுத்த வார பத்திரிக்கையில் மூன்று பக்க கட்டுரையாக பெரிய புகைப் படத்துடன் வந்திருந்தது. அன்றே பத்திரிக்கையை தூக்கிக் கொண்டு டூவீலரில் அவரின் வீட்டிற்கு விரைந்தேன். மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்று பலகாரங்கள் தந்து உபசரித்தார். இதுவரை செய்தித்தாள்களில் ஓரிரு வரிகளில் அவரைப் பற்றி செய்தி வந்திருக்கிறதாம். முழுதாய் மூன்று பக்க அளவில் அதுவும் பிரபல பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வந்தது இதுவே முதல் தடவை என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் என்பது அவரது வார்த்தைகளில் தெரிந்தது. இனி நாம் இருவரும் நண்பர்கள், அடிக்கடி என் வீட்டிற்கு வர வேண்டும் என அவர் சொல்லும் போது `நடக்கிற விசயமா` என்றாலும் விரைவில் 52 வயதான வட்சலா மேடமும் 21 வயதான நந்தினி ஆகிய நானும் நண்பர்கள் ஆனோம்.

அந்த மாதக் கடைசில் நான் தங்கியிந்த மகளீர் விடுதியில் இருந்து மாற வேண்டிய சூழ்நிலை. ஏனோ விதி அவங்க இருக்கும் அதே ஏரியாவுக்கே என்னையும் இடம் மாற்றியது. அதிகாலை வாக்கிங் நேரத்தில் இருவரும் `ஹாய்` சொல்லிக் கொள்வோம். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதிய உணவுக்கு என்னை அழைத்தார். சென்னையில் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கியிருந்த எனக்கு அன்று அமிர்தமாக உணவு ருசித்தது. வீட்டில் பிள்ளைகள் யாரும் இல்லாததால் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். நானும் வேலை இல்லாத சமயங்களில் அங்குதான் இருப்பேன். ஊரில் இருக்கும் அம்மாவுக்கும் வட்சலா மேடத்தைப் பத்தி சொல்லி போனிலும் பேச வைத்தேன். வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் என்னை சுருக்கமாக `நந்து` என அழைக்க இவர் மட்டும் ஸ்பெஷலாக `நதி` என அழைப்பார். அந்த வார்த்தை உச்சரிப்பு மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்க இன்னும் அவரை எனக்கு பிடித்துப் போனது.


இருவரும் சேர்ந்து கபாலிஸ்வரர் கோயில், தீ நகர் ஷாப்பிங், அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லம் என சுத்தாத இடம் இல்லை. அவங்க வீட்டில் ரெண்டு கார் இருந்தும் என் டூவிலரில் வெளியே செல்வது என்றால் கொள்ளை விருப்பம் அவருக்கு. இந்த இரண்டு மாத பழக்கத்தில் ஒரு நாள், `நீ ஏன் என்னை மேடம்-ன்னு கூப்பிடற. அம்மா-ன்னு கூப்பிடலாமே`ன்னு வாய்விட்டே கேட்க மிகுந்த தயக்கத்திற்கு பிறகு வட்சலாம்மா என அழைக்க ஆரம்பித்தேன்.


ஒரு மாலை நேர மழை காலத்தில் பால்கனியில் அமர்ந்தபடி இருவரும் வெங்காய பக்கோடாவும் காப்பியும் சாப்பிட்டபடி கதையடித்துக் கொண்டிருந்தபோதுதான் மனதில் இருந்த அந்த ஆசையைச் சொன்னார். `நதி... எனக்கு ரொம்ப வருஷமா ஒரு ஆசை. பெண் குழந்தை வேணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா பிறந்தது ரெண்டும் பசங்க. அவங்க வளர்ந்து படிப்பு, வேலைன்னு பிஸியாகிட்டாங்க. அப்பத்தான் பெண் குழந்தை இல்லாத ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது. ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்க்கனும்ன்னு இப்ப வரைக்கும் நினைக்கிறேன். ஆனா இந்த வயசுல ஒரு கைக்குழந்தைக்கு அம்மா-ங்கிறதை சமூகம் எப்படி ஏத்துக்கும்ங்கிற தயக்கம் இருக்கு. அதையும் தாண்டி அந்த குழந்தை வளர வரைக்கும் நான் திடமா இருப்பேன்னான்னு தெரியலை` என்று அவர் சொல்லும் போது கண் கலங்கியிருந்தது. அவர் பேச்சில் எப்போதும் பெண்கள் பற்றிய உயர்வாக கருத்து இருக்கும். ஆண்களை நம்பாமல் சொந்த காலில் நிற்க வேண்டும், எந்த காலத்திற்கும் பெண் தளர்ந்து போகக் கூடாது என சொல்லிக் கொண்டே இருப்பார்.

அதுவரை எனக்கு பிடித்த வட்சலா மேடம், என்னுடைய ரோல் மாடலானார். அந்தஸ்து பார்க்காமல் பழகும் அவரின் பண்பு எனக்கு இன்னும் இன்னும் பிடித்துக் கொண்டே போனது. தீபாவளி சமயம் எனக்கு ஒரு சுடிதார் எடுத்து தந்தார். வறுமையின் நிழலில் வளர்ந்திருந்த நான் அந்த சுடிதாரின் விலையைப் பார்த்ததும் பிரமித்துப் போனேன். கொஞ்ச நாளில் எனக்காக நிஜமாகவே அம்மா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துக்கும் வரன் பார்க்க ஆரம்பித்தார்.

ஆனால் அவருடன் பழகிய அந்த ஏழு மாத காலத்தில் நான் எந்த உதவியும் அவரிடம் எதிர்பார்த்து நின்றது இல்லை. ஒரு முறை தன் கணவரின் அலுவலகத்திலேயே நல்ல பதவி வாங்கித் தருகிறேன் என்றும் சொன்னார். அவர் குறிப்பிட்ட சம்பளம் நான் இப்போது வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்கு இருந்தும் ஏனோ ஒப்புக் கொள்ள தோன்றவில்லை. என் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் கூட கேலி செய்வார்கள். `ஏன் நந்து.. பெரிய வி.ஐ.பி-யை கைக்குள் வைச்சிருக்க.அப்படியே செட்டில் ஆகிடு` என்று அக்கறையாய் அட்வைஸ் செய்தாலும், எனக்கு ஏனோ அவரிடம் உதவி கேட்க மட்டும் இஷ்டமில்லை. கேட்க கூடாது என கொள்கையாகவே வைத்திருந்தேன்.

ஆனால் அடுத்த வாரமே அவரிடம் கையேந்தும் நிலை வருமென எதிர்பார்க்கவில்லை. நான் தங்கியிருக்கும் விடுதியின் வேலைக்காரம்மா சாலை விபத்தில் ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டார். கணவரும் இல்லாத நிலையில் அந்தம்மா மற்றும் அவரின் மகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதானது. ஆதரவற்று நின்றவர்களை எங்கள் விடுதி நிர்வாகம் அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதித்தது. ஆனால் அந்த இளம் பெண்ணின் படிப்புக்கு உதவ முடியாது என்று கைவிரித்து விட்டது. வேலைக்காரம்மாவுக்கு தான் ஊனமானதை விட, மகளை படிக்க வைக்காமல் போன நிலை குறித்து மிக்க வருத்தம். எதோ என் வருமானத்திற்கு அந்த பெண்ணுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தர முடியும். ஆனால் பள்ளிக் கட்டணம் கட்டி முழு செலவையும் ஏற்க முடியாத நிலையில் வேறு வழியின்றி வட்சலா மேடத்தை சரண் அடைந்தேன்.

’நதி, நீ செய்ய நினைக்கிறது நல்ல விசயம்தான். மனமார உன்னை பாராட்டறேன். ஆனா ஒரு பெண் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட எனக்கு இஷ்டம் இல்லை. ஆண் புள்ளைன்னா படிச்சு சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாத்துவாங்க. பெண் புள்ளைங்க அப்படி இல்லையே? என்னிக்கு இருந்தாலும் கல்யாணம் ஆகிப் போறவங்க தானே. அந்தப் பொண்னு எப்படி ஊனமான தன் அம்மாவை கடைசி வரை வெச்சு காப்பாத்தும் சொல்லு? வேண்ணா நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரச் சொல்லு. இல்லை நானே நல்ல இடத்தில் வேலை வாங்கித் தரேன்`` என்று அவர் சொல்ல எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

`ஏன் பெண்ணா இருந்தா படிச்சு குடும்பத்தை காப்பாத்த மாட்டாங்களா? எல்லா பசங்களும் பெத்தவங்களை கடைசி வரைக்கும் பார்க்கறாங்களா என்ன? என்ற என் வாதத்துக்கு அவர் தந்த பதில் இன்னும் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

`இல்லை நதி. பெண்ணுங்களை படிக்க வைக்கிறது வேஸ்ட். சாரிம்மா என்னால அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முடியாது` என்று அவர் திட்டவட்டமாக சொல்ல வெறுப்பின் உச்சத்தில் `சரி நான் வரேன் மேடம்` என்று சொல்ல அந்த வார்த்தை மாற்றத்தில் கண்கள் சுருக்கி பார்த்தார். அதை பொருட்படுத்தாது நான் விடுவிடுவென வந்து விட்டேன்.

அதன் பின் அவர் வீட்டு வாசலை மிதிக்க எனக்கு இஷ்டமில்லை. என் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்தவர், சடாரென உடைந்து போனார். சமூக சேவை செய்வதும், பெண்ணியம் பேசுவதும் பணக்காரர்கள் அணிந்து கொள்ளும் முகமூடி என்பது புரிந்து போக, பேச்சிலேயே காரியம் சாதிப்பவர்கள் என அறிந்தேன். அது வரைக்கும் ஒரு சுயநல வாதியிடம் பழகியிருந்தேனே என்ற வருத்தம் இப்போது வரை இருக்கிறது எனக்கு.



பின்குறிப்பு: சொந்த அனுபவத்தில் உருவான இக்கதை ‘முகமூடி மனிதர்கள் என்ற தலைப்பில் ஆம்பல் பத்திரிக்கையில் வந்துள்ளது..  முடிந்தால் அங்கேயும் வந்து பாருங்கள்.