Thursday, January 28, 2010

எஸ் மை லார்ட்

ஒவ்வொரு பொங்கலின் போதும் எங்கள் ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். பன்னு திங்கறது, பலூன் உடைக்கிறது, கைக் கட்டிக்கிட்டு பின்னாடி நடக்கிறது, தண்ணி குடம் தலையில் வெச்சுக்கிட்டு நடக்கறது, பானை உடைக்கிறது, வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பற்றது,  கயிறு இழுக்கறது, குடத்து தண்ணீருக்குள் பந்து போடுவது -ன்னு விதவிதமா யோசிச்சு போட்டி வெச்சாலும், ஏழு மணிக்கு மேல வழக்கம் போல , பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, மாறுவேடப் போட்டி-ன்னு அரைச்ச மசாலாவையே அரைப்போம்.
 நன்கொடை வசூலிக்க வரும் போது, அம்மா நூறு ரூபாய் தந்தாங்க. ''அக்கா ஊரில் இருந்து எப்பு வந்தீங்க, போட்டி நடக்குது, கண்டுக்கவே இல்லை" என்று எங்கள் ஊர் இளந்தாரிகள் சொல்ல, பிரேமா முன்னிலையில் நூறு ரூபாயும், தெரியாமல் நூறு ரூபாயும்  தந்தேன். பத்திரிகைகளில் 'பலோ அப்" என்று ஒரு விஷயம் நடக்கும். அதுதான் எனக்கும் இந்த பொங்கல்-யிலும் போன பொங்கல்-யிலும் நடந்தது.

போன வருடம், போட்டி நடத்தியவர்கள் பாட்டு, கோலம், நடனம், மாறுவேடம் ஆகிய நான்கு  போட்டிகளுக்கும் நடுவராக என்னை நியமித்தார்கள். (அப்பாடா, இப்போதுதான் நான் படித்த படிப்புக்கு சரியான மதிப்பு கிடைத்திருக்கிறது.). ஒரு வகையில் எனக்கும் பெருமைதான், பின்னே இந்த ஊரில் ஜட்ஜாக இருக்க என்னை விட யாருக்கு தகுதி இருக்கிறது என்ற நினைப்பு. (சும்மா இல்ல, மெரிட்டில் சீட் வாங்கி ஐந்து வருடம் சட்ட கல்லூரியில் படித்திருக்கிறேன்). நானும் கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்து கை தட்டிவிட்டு, மார்க்கும் போட்டுக் குடுத்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது பரிசு தந்து முடியும் வரை. மைக் பிடித்த தம்பி ஒருவன், 'இது வரை நடந்த போட்டிககுக்கு  நடுவராய் இருந்த .............(என் பெயரை சொல்லி) நன்றி என்று சொன்னான், அப்போது ஆரம்பித்த அதகளம் இந்த பொங்கல் வரை தொடர்ந்தது.

அடுத்த நாள் காலையில் நான் எழுந்ததே திவ்யாவின் பாட்டி  போட்ட கூச்சலில் தான். ''எங்க புள்ள நல்லத்தான் பாடிச்சாம், நீதான் வேணும்ன்னே மார்க் கம்மியா போட்டியாம், எங்க புள்ள சொல்லுது" என்று கத்தினார். இல்ல, என்று நான் ஆரம்பிக்கும் முன்னே, சண்டை வாபஸ் ஆனது.
வழக்கம் போல, பதினோரு மணி வாக்கில், அரட்டை அடிக்க என் பிரென்ட் துளசி வீட்டுக்கு போனேன். எப்போதும் சிரித்து பேசும் அவளின் அம்மா அன்று என்னிடம் பேசவில்லை, அவளோ, என்னைக் கண்டதும் உள்ளே போய் விட்டாள்.
(வேறொன்றும் இல்லை, அவள் கோலப் போட்டியில் கலந்திருக்கிறாள். ஆறுதல் பரிசு கூட கிடைக்க வில்லை.  அன்றும் அதற்கு அடுத்த நாள் நான் ஊருக்கு கிளம்பும் வரை, அங்கிருந்தவர்கள் என்னிடம் வித்தியாசமாகவே நடந்து கொண்டார்கள் என்று நினைத்தேன். அது உண்மை என்பது மூன்று மாதம் கழித்து பிரேமா போன் செய்யும் போது தெரிந்தது.
கை மாத்தாக பிரேமாவிடம் 2000 ரூபாய் கடன் கேட்டிருக்கிறார்  பக்கத்து வீட்டு பெரியம்மா.  அவர் இல்லை என்று சொல்ல, 'எல்லாம் இவ புள்ள ஜட்ஜா இருந்த திமிரு(பாவிகளா, நான் என சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாவா இருந்தேன்). என்று கேலி செய்திருக்கிறாங்க.
இந்த வருடமும் அதே பயத்துடன்தான் ஊருக்கு சென்றேன். வழக்கமாய் அப்போதுதான் அரிதாக சந்திக்கும் தோழிகளை பார்க்க முடியும். ஊரில் யார் யாரை காதலிக்கிறார்கள், எந்த காதல் இடம் மாறப் போகிறது, யார் ஓடிப் போகும் நிலையில் இருக்கிறார்கள்?,  எந்த காதல் ஊத்திக்கிச்சு போன்ற அத்தியாவசிய தகவல்கள் கிடைக்கும். மொத்தமாக சேர்ந்த திமிரில், எங்க ஊர் இளங் காளைகளை கிண்டல் செய்வோம். ஆனால் இந்த முறை அந்த கூட்டத்தில் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை. வெட்டிய கரும்பும், கை முறுக்கும் எனக்கு மட்டும் தீர்ந்து போயிருந்தது. அது கூட பரவாயில்லை. ஏன் அண்ணனை சைட் அடிக்கும் சம்பூர்ணா கூட என்னிடம் சரியாக பேசாதது போலவே தோன்றியது.

'இந்த வருஷமும் நீதான் ஜட்ஜாம், கமிட்டில சொன்னாங்க" என்னும் போதே, அடப் பாவிகளா என்று மனசுக்குள் தவித்தேன்.

கடைசி போட்டி-யாக நடனம். 'என்  பேரு மீனாக்குமாரி" என்று இடுப்பை வளைத்து பவித்ரா ஆட்டும் போது எனக்கு என்ன மார்க் போடுவது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவள் யு.கே.ஜி -பி கிளாசில் படிக்கிறாள். (மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொறி. கட்டில் பந்தியில...  -என்று அவள் உதட்டை சுழிக்கும்  போது அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு தெரியவில்லை).

அடுத்து பரிசு பெற்றவர்கள் பெயர் அறிவிப்பு. முதல் பரிசு- தேவன், இரண்டாம் பரிசு- சந்தோஷ், மூன்றாவது  பரிசு-கீர்த்தனா. அறிவுப்பு முடிந்ததுமே அழத் துவங்கி விட்டான் வினோத். ''நான் நல்லத்தனே ஆடுனேன், ஏன் பிரைஸ் தரல?" என்று கேட்கும் போது, என்னால் ஏதும் பேச முடியவில்லை. தேம்பி தேம்பி அழுதான். அங்கு குழுமி இருந்த ஊரே என்னை கரிச்சு கொட்டுகிறது, பிரேமா வேறு என்னிடம் கத்துகிறார். 'உனக்கு எப்பவுமே அவன்கிட்ட போட்டித்தான், நான் அவன் மேல பாசமா இருக்கேன்னு உனக்கு பொறாமை" என்றார். ஆம் பிரேமாவின் சொந்த தம்பி மகன் வினோத். நான் உரிமை கொண்டாடும் முறைப் பையன். என்னை திருமணம் செய்ய ஆசைப் பட்டவன்( வாசகர் கவனத்திற்கு, வினோத் இபபோது மூன்றாவது படிக்கிறான். எனக்கு வயது 25 ) இருந்தும் அவன் சரியாக ஆடாததால் நான் மார்க் போடவில்லை. ஆனால் அதுவே எனக்கு பிரச்சனை ஆகிவிட்டது. ஒருவழியாக அழுது, மீதம் இருந்த ஒரு பிளாஸ்டிக் டப்பாவை அவன் பரிசாக வாங்கி கொண்டான்.
இதையும் தாண்டி கொடுமை அடுத்த நாள் நடந்தது.  ஆறுதல் பரிசு வாங்கிய பூமிகா -விடம் ஏன்  முதல் பரிசு கிடைக்கவில்லை என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவளோ, 'இந்த ....... (ஜாதியின் பெயர்). இப்படித்தான், அவங்களே போட்டி நடத்தி அவங்களுக்கே பரிசு தருவாங்க" என்று சொல்லியிருக்கிறாள். ஜாதி குறித்து பேச அவள் வயது ஒன்றும் அதிகமில்லை. ஜஸ்ட் 7 ..

காத்து வழி செய்தி வந்தது. (அடப் பாவிங்க, இதில் எங்கடா ஜாதி வந்தது). அடுத்த நாள் வினோத்-கிட்ட, எதுக்கு அழுதே-ன்னு திட்டினேன்.''டி.வியில் தோற்றுப் போய்ட்டா, அழுவராங்கள்ள, அதான் நானும் அழுதேன்" என்னும் போது தலையில் அடித்துகே கொள்ள தோன்றியது.

இப்போதெல்லாம் நான், டி.வியில் கூட நடனப் போட்டிகளைப் பார்ப்பதில்லை. ( பாராங்கல்லில் முட்டிக் கொண்டு, முட்டைக்கென்ன வேதாந்தம்)..








 

Friday, January 22, 2010

என் முதல் கதாநாயகி


நமீதாவின் முச்சு காற்று உங்கள் மீது படும் அளவிற்கு, அருகில் நின்றால் உங்களுக்கு எப்படி இருந்திருக்குமோ அந்த உணர்வு எனக்கு துளியும் இல்லை, அவரை முதன் முதலில் சந்திக்கும் போது.
 2007 -வது வருடம், மாதமும் தேதியும் நியாபகம் இல்லை. கோவையில் நடைபெற்ற, அழகிப் போட்டிக்கு நடுவராக வந்திருந்தார். மேடை-ஏறும் முன்  அவருக்கு கீழே சீட் போடப்பட்டது. அந்தற்கு பக்கத்து சீட்டில் நான் மட்டுமே. பூட் கட் ஜீன்ஸ், அழகான டி.சர்ட்டுமாய் அவரை இது வரை எந்த தமிழ் சினிமாவிலும் பார்த்திருக்க முடியாது.

சுமார் இரவு ஒன்பது மணி இருக்கும். அப்போதும் அவரை சுற்றி கூட்டம் கும்மியடித்தது. எங்கள் இருவரைத் தவிர அங்கிருந்த அத்தனை பெரும் ஆண்கள். நமீதாவை சிரிக்க சொல்லி, பேச சொல்லி வித விதமாய் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள் எங்கிருந்த வந்தான் ஒருவன்.நமிதாவை கூப்பிட அதை அவர் கவனிக்க வில்லை. சத்தமாய் அதட்ட திரும்பினார் நமி.'' போட்டோ எடுக்கராங்கள்ள? உன் பனியனை இறக்கி விடு, நிமிர்த்து உட்கார்," என்றார் கட்டளையாக, அவரும் உடனே தான் சட்டையை கீழ் இறக்கி விட்டார். அடுத்து விடாமல் அடித்தன கேமராவின் கண்கள்.

ஸ்டேஜ் மேல போன உடனே, ''ஐ லவ் யு சொல்லணும். உதடு குவிச்சு பசங்களை பார்த்து பிளையிங் கிஸ் தரனும். என்ன புரியுதா?"" என்றார். அப்போது நமியின் முகத்த்தில் இருந்த ஏக்கத்தை பார்த்திருந்தால், இன்று அவரின் மச்சான் தமிழை ரசிக்க மாட்டீர்கள் நீங்கள். 

அதற்குள் அவருக்கு செல் போன் பாட்டு பாட, பேச விடாமல் பறித்து கொண்டார் அந்த கட்டளை இட்ட மனிதர்.
அடுத்த அதிர்ச்சி உடனே வந்தது. என் பெயரை சொல்லி அழைத்த, பிரபல ஆங்கில நாளிதழ் போட்டோ கிராபர், என்னிடம் கேமராவை தந்து, நமியை லோ ஆங்கிள் போட்டோ ஒன்றை எடுத்து தர சொன்னார். எதுவே பேசாமல் அவரிடம் கேமராவை தந்து விட்டேன். 'சாரி மா, அப்படி போட்டோ எடுத்தா தான், நாளைக்கு போட்டோ வரும். இல்லாட்டி என்ன போட்டோ-ன்னு ஆபீஸ்-ல கத்துவாங்க. ரீடர்ஸ் அதைத் தான் விரும்பறாங்க "' என்றார் என் முகத்தை பார்க்காமலே.

சில நிமிடங்களில் நமீதா மேடை ஏறி, அதே போல் ஐ.லவ் யு  சொல்ல, பாவமாய் இருந்தது எனக்கு. அதன் பின் குத்து பாட்டுகளால் அரங்கம் கலை கட்ட, மணி 11.

''இதற்கு மேல், இங்க இருக்க வேண்டாம்"என்று சொல்லி என்னை வீட்டிற்கு போக சொன்னார் ராஜேஷ் அண்ணா.(கோவையில் இருக்கும் பிரபல  போடோக்ராபர்).

அன்றில் இருந்து நமியைப் பார்க்கும் போதெல்லாம்(டி.வி-இல்தான் ) பாவமாய் தோன்றும். 'வா, ஒரு டம்ளர் மோர் குடி" என்று அவரின் தலை கோதி ஆறுதல்  சொல்லத்  தோன்றும்.
 (நமிதாவின் பெயரை ஏன் போட்டீங்க, பின்னாளில் அவர் வருத்தப் படுவார், உங்களுக்கும் பிரச்சனை வரும், என்று நீங்கள் சொல்லலாம். அவரின் பெயரைப் போடாவிட்டால் ஏதோ மஞ்சள் பத்திரிகையில் கிசு கிசு எழுதினது போல் தோன்றும். அதனால்தான். நமிதாவின் வருங்கால கணவர் என்னை மன்னிப்பாராக).

Thursday, January 21, 2010

நான் செய்த தவறு என்ன?

சமிபத்தில் முன்னால் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்திக்க சென்றேன். தொடர்பு என்னும் இல்லை. வீட்டு முகவரியும் தெரியாது. தி.நகரில் சிவாஜி கணேசன் ரோட்டில் வீடு என்பது மட்டுமே அலுவலகத்தில் இருந்து எனக்கு தரப்பட்ட தகவல்.

என் ப்லக்கன் (என் டு விலரின் செல்லப் பெயர்) உதவியுடனும், ஆட்டோ டிரைவர்கள் மற்றும்  தி.நகர் ஏரியா வேலைக்கார பெண்மணிகளில் ஆதரவுடனும் ஒருவழியாக வீட்டை கண்டு பிடித்தேன்.
'சார் அமேரிக்கா போயிருக்கார்: வாசலிலேயே வழி மறித்தான் விசுவாசமான கூர்க்கா.
'இல்லை, அவரை நேரில் பார்க்கணும். போன் நெம்பரவது தாங்க" என் கத்தல்களுக்கு கிடைத்த பதில் 'சலோ சலோ"
பரிதாப்பட்ட பக்கத்து வீட்டு வாட்ச்மேன் சொன்னார், ''பிட்டர்ஸ் ரோட்-ல வீடு இருக்கு. போய் பார்.
அங்கேயும் உடன் வந்தது என்  ப்லக்கன்.
அங்கேயும்  வாட்ச்மேன் தான். ஆனால் இந்த முறை வீட்டுக்குள், வரண்டாவில் உட்கார சேர் தந்தார்கள். இதோ தலைவர் வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார் ஸ்டைலில் சில பல நிமிடங்கள் காக்க வைத்து விட்டு வந்தார்.
''வணக்கம் சார். நல்ல இருக்கிங்களா?"
'ஏன்  நல்ல இல்லன்னா என்ன பண்ண போறிங்க?"
என்னிடம் அமைதி.அதை கலைத்தது அடுத்த கேள்வி.
'எதுக்கு வந்தீங்க,?""
''உங்களை பார்க்கத்தான்" மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.
  'அதான் பார்தச்சுல; கிளம்புங்க"
 முதல் தேதியில் வாங்கும் சம்பளம் நினைவுக்கும் வர, இப்போதும் அதே அமைதி.
 நின்று கொண்டே இருக்கும் என்னிடம் கேட்டார்,
'என்ன விஷயம் சொல்லுங்க?"
'சீனியர் சிட்டிசன்- பத்தி உங்க கிட்ட பேசணும்" பயந்து  பயந்து வந்தது என் குரல்.
'நான் சீனியரும் கிடையாது. சிட்டிசனும் கிடையாது. என்னைப் பார்க்க யாரும் வேண்டாம். எந்த முட்டாளையும் சந்திக்க நான் விரும்பல. யாரும் வரக் கூடாது-ன்னு தானே வீடு மாறி வந்தேன். இப்பவும் ஏன் வந்து தொந்தரவு பண்ணறிங்க, நீங்க போகலாம்"
அவமானம்
பிடுங்கித் திங்க, கழுத்தில் கிடந்த ஐ.டி.கார்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.
'போங்க, இன்னும் ஏன் நிக்கறிங்க, ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன். வாட்ச்மேன் இவங்களுக்கு கேட் திறந்து விடு." தோரணையில் வந்தது வார்த்தைகள்.

சேற்றில் விழுந்த அருவருப்புடன் வெளியே வந்தேன்.
அந்த வாட்ச்மேன் பார்த்த பார்வை இன்னும், மனசுக்குள் உறுத்தலாய் இருக்கிறது.

டு விலரை எடுக்கும் போது அழக் கூடாது என்ற என் வைராக்கியம் உடைந்து, கண்ணீர் வந்தது. என் வேலையில் அவமானம் புதிது இல்லைதான். இருந்தும் எதோ வருத்தம்.

அலுவலகத்தில் சீனியர் கேட்டார், ''என்ன ஆச்சு"
நடந்த விஷயங்களை சொன்னேன்.
'சரி விடுங்க, அவருக்கு நம்ப ஆபிஸ் மேல கோபம், நாம வேற ஆள்கிட்ட பேசிக்கலாம்."

என்னை அனுப்பி வைத்தவர் சொன்னார். 'நாங்க பார்க்காத அவமானமா? நீங்களும் கத்துக்கங்க"
அவரே ஆறுதலும் சொன்னார்.
''அத்தனை சொத்து இருக்கு. ஆனா ஒரு குழந்தை இல்லை. பதவி போனதும் யாரும் மதிக்கல, அந்த கோபம், வருத்தம், ஆதங்கம் தான் அது. இப்போ கவனிக்க யாரும் இல்லாம முதியோர் இல்லத்துல சேரப் போறார். அவர் மனசின் வலி-தான் உன்கிட்ட பேசினது" என்றார்.
இருந்தும் ஆறவில்லை மனது. அலுவலகத்தின் மீது கோபம் என்றால், அதற்க்கு நான் என்ன செய்தேன்?  இந்த சமுதாயத்தின் மீது வருத்தம் என்றால், என்னை அவமானப்படுத்தியது மூலம் அது சரியாகுமா?

சில நாள் என் மனதில் இருந்த கேள்வி மாறி, இப்போது எனக்கும் அவர் மீது பரிதாபப் படத்தோன்றுகிறது.

உங்களுக்கும், எதாவது முதியவரிடம் இந்த அனுபவம் ஏற்படலாம். அப்போது கோபம் வேண்டாம், அந்த முதுமையின் வருத்தத்தை உணருங்கள்.






 

Tuesday, January 12, 2010

சிறகுகள் விரியும் நேரம்....

யாரும் அற்ற சாலை-யில் காத்திருக்கிறது என் கனவுகள்.
உன் கோபத்தை மட்டுமாவது அனுப்பி வை
வண்ணம் பூசிக் கொள்ளும் என் கனவுகள்

உனக்காக

அந்திப் பொழுதுகளில் சுட சுட காத்திருக்கிறது தேநிரூம் நானும். உன் உதடு படிதழுக்காக...

ரம்யமான நேரங்களில் அர்த்தம் அற்று போகிறது நம் வீட்டு கடிகாரம்..

சுவர்கள் கூட சிவந்து போகிறது, உன் காதல் மொழியில் கொண்ட வெட்கத்தில்