Monday, March 29, 2010

நானும் சாத்தானும்..

தனிமை சாத்தான் என் எதிர் நின்றது.
தாகம் தணிக்க என் கனவுகள் கேட்டது.


தனிமையில் கரைந்த நாட்கள் எத்தனை..
தலை முடி கோதிய கணங்கள் எத்தனை..
உறுபசியோடு விரல்கள் கோர்த்து
உலகினை மறந்த பொழுதுகள் எத்தனை..

கடல் மணல் பரப்பில் நிலவொளி தன்னில்
மடிதுயில் கண்ட மகிழ்வுகள் எத்தனை..
வரும் வழியெங்கும் நினைவுகள் விதைத்து
திசைகளை மறந்து தவித்தது எத்தனை.....

பகல் வெளியெங்கும் பசியினை மறந்து
தேடித் களைத்த தினங்கள் எத்தனை...
வெட்க சிறகுகள் விரித்துப் பறந்து
முத்தச்சத்தம் மொத்தம் எத்தனை....

அச்சம் துளிர்த்திட ஆரத்தழுவி
சொர்க்கம் கண்ட சுகங்கள் எத்தனை...


எத்தனை எத்தனை என்றது சாத்தான்- இவை
எதுவுமே நிகழ்ந்ததில்லை என்றேன் நான்!
 சித்தக் காதல் துறக்க சென்று - இவை
மொத்தமும் கண்டு வா என்றது...

Monday, March 22, 2010

அவன் என் காதலன்

இது என் முதல் காதலனைப் பற்றிய பக்கங்கள்...

 ''என் முதல் காதலன்'
அறிமுகப்படுத்துகிறேன்
உன்னை!
அதிரச் சிரிக்கிறான்
என் கணவன்...

இரவு நேரத்தில்
உன்னுடன்
ஊர் சுற்றுவதாய்
புகார் செய்கிறார்கள்
அக்கம்பக்கத்தினர்..
என்னை
தைரியமாய்
வளர்த்ததாய்
பெருமைப்படுகிறாள் அம்மா!

என் சந்தோஷ‌
தருணங்களில்
உன்னை
கட்டியணைத்து
முத்தமிடுகிறேன்!
பைத்தியம்
என்கிறது
இந்த சமூகம்..

உனக்கும் எனக்கும்
என்ன உறவு!
விலை கொண்டு
வந்தாய்!
என் உயிர் கொண்டு
வளர்த்தேன்!.
என் முதல்காதல் ஆனாய்!

நீ
என் உயிருக்கும் மேல்
உருகினேன் ஒருநாள்!
பதினைந்தாயிரம்
கூட தேறாது
என்கிறார் அப்பா..



என் காதலனைப் பற்றி..

மார்ச் 22‍ இந்த நாளில் ஒவ்வோருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கலாம்.. என்னைப் பொறுத்தவரை என் முதல் காதலனைச் சந்தித்த நாள்.. இன்று அவனது மூன்றாவது பிறந்த நாள்.. அவனை என் பாய்பிரெண்ட் என்று நட்பு வட்டாரம் சொல்லும்.. நான் செல்லமாய் 'பிளாக்கான்" என்று சொல்லுவேன்...அரசாங்கம் அவனை TN 38 AL 8850  என்று சொல்கிறது..

ஆம்... என் ஸ்கூட்டி டீன்ஸ் டூவீலர்தான் என் முதல் காதலன்..



2007‍ வருடம், நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது அவனை என்னுடன் அழைத்து வந்தேன்.. படிக்கும் போதே என் எழுத்து திறமை மாதம் 4000 வரை சம்பாதிக்க உதவியது.. அந்த சேமிப்பின் முதலீடுதான் என் பிளாக்கான்.. என் வாழ்வில் நான் சம்பாதித்த முதல் சொத்து மற்றும் நம்பிக்கை.. அவன் வந்த பிறகுதான் எனக்கான வசந்தம் வந்தது.. 'பரவாயில்லையே, படிக்கும் போதே சம்பாதித்து வண்டி வாங்கியாச்சு" என்று என் மதிப்பும் கூடியது..  இதுவரை அவனை நான் உயிரற்றவனாய் நினைத்தது இல்லை..


என் புன்னகை, தனிமை, ஏக்கம், சந்தோஷம், துரோகம், கண்ணீர், தவிப்பு, துக்கம் என அனைத்துக்கும் அர்த்தம் அறிந்தவன் அவன்.. சென்னை வந்த புதிதில் நட்பில்லாமல் நான் தவித்த போது, என்னை தாங்கிய சுமைதாங்கி ஆனான். அவனின்றி ஒரு அணுவும்  அசையாது எனக்கு.....  பிரிய மனமின்றி, சர்வீஸ் ஸ்டேசனில் நாள் முழுக்க காத்திருந்து அவனை அழைத்து வந்திருக்கிறேன்..

இதுவரை‍க்கும் என்னை ஒரு நாள் கூட நடுரோடில் தவிக்க விட்டது இல்லை.. ஒத்துழைக்காமல் அழிச்சாட்டியம் செய்தது இல்லை.. 2008‍‍ ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு ஒரு விபத்து நேர்ந்தது... சத்தியமாய் அதற்கு என் காதலன் காரணம் இல்லை.. விபத்தில் என் இடது கால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.. முட்டி‍‍யில் உள்ள ஜாயிண்ட் உடைந்து ஸ்குரூ வைக்க வேண்டிய நிலை... 80000 வரை செலவானது. ஆப்ரேஷன் தியேட்டரில் நான் டாக்டரிடம் கேட்ட கேள்வி.. என்னால் மறுபடியும் வண்டி ஒட்ட முடியுமா? முடியும் எனில் எனக்கு ஆப்ரேஷன் செய்யுங்கள். இல்லையெனில் என்னை இப்படியே விட்டுவிடுங்கள் என்று நான் அழுததைப் பார்த்து சகிக்கமுடியாமல் மயக்க ஊசி போட்டார் டாக்டர்..

அந்த கொடுமையிலும் ஒரு சந்தோஷம்.. விபத்தில் என் காதலனுக்கு சின்ன சிராய்ப்பு கூட ஏற்படவில்லை.. அப்படியே ராஜகுமாரன் மாதிரி கம்பீரமாய் நின்றான்.. அதன் பின் படுத்த படுக்கையாய் ஒரு மாதம் இருந்தேன்.. மீண்டும் என்னை பழைய வாழ்க்கைக்கு திரும்ப வைத்தது சத்தியமாய் அவன் மட்டுமே!.

இந்த சென்னை மாநகரத்தில் நானும் அவனும் கால்பதித்த தடங்கள் அதிகம்..

காதல் என்றால் கண்ணீர் உண்டுதானே.. வில்லன் உண்டுதானே...

இதே அவனை விடுத்து, இன்னும் கொஞ்ச நாளில்,  நான் வெளித் தேசம் போகப் போகிறேன்.. அவனில்லா முதல் மற்றும் இறுதிப் பயணம்.. இன்னும் எத்தனை நாட்கள்  எங்கள்  இருவருக்குமான உறவு என்ற நினைப்பில் கண்ணீரில் கரைகிறது என் நிமிடங்கள்.. சத்தியமாய் என் முதல் காதலன் அவன்... நான் திரும்பி வரும் போது அவன் எங்கே எப்படி இருப்பான் என தெரியாது..

அவன் தந்த சந்தோஷமும், பிரிவின் வலியும் என் ஆயுளுக்கும் இருக்கும்...

ஐ லவ் யூ பிளாக்கான்.. ஐ மிஸ் யூ லாட்.....

Tuesday, March 16, 2010

ஸ்டாலினுடன் நேருக்கு நேர்..

சென்னையில் புதிய சட்டசபை கட்டிட வளாகம் திறந்துவைக்கப்பட்டது...
செய்தி..

அதான் ஊரில எல்லா பத்திரிக்கையும், எழுதி துவைச்சு தொங்க விட்டாச்சே, நீ புதுசா என்ன சொல்ல வந்திட்ட? என்று நீங்கள் கேட்க்கலாம். சட்டசபை திறந்தது மேட்டர் இல்லை.. அதனால் மவுண்ட் ரோட்டில் ஏற்படும் டிராபிக்தான் இங்கே அலசல், அவியல், கொத்துபுரோட்டா எல்லாமே!

மாண்புமிகு கலைஞர் அங்கிள் (அதாகப்பட்டது கல்யாணம் ஆன ஆண்களை அங்கிள் என்று மட்டுமே  அழைக்கவேண்டும் என்று எங்கள் அலுவலகத்தில் இளம்பெண்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்தோம்.. அப்படித்தான் எங்களுக்கு தெரிந்த நபர்களையும் அழைப்பது... அது எம்.டி ஆகட்டும் பியூன் ஆகட்டும்,. அந்த வரிசையில் கருணாநிதியும் அங்கிள் ஆகிவிட்டார்.) ஆபீஸ் போக வேண்டுமானால் அதாவது சட்ட சபைக்கு போக வேண்டுமானால், கோபாலபுரத்தில் இருந்து லாயிட்ஸ் ரோடு வந்து மவுண்ட் ரோட்டைத் தொட்டு, (அதாவது ஜெமினி பிரிட்ஜ்‍க்கு அருகில் வந்து கட் அடிப்பார்) அதே வழியில் சட்ட சபைக்குச் செல்வார்.. அந்த வழியாகவே திரும்பி வருவார்... இதிலும் எந்த பிரச்சனையும் இல்லை.. பாவம் அங்கிள் இந்த வயதிலும் அயராது உழைக்கிறார்.. அதை நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.

ஆனால் அவர் போலவே பலருக்கும் மவுண்ட் ரோட்டில் ஆபீஸ் இருக்கும். அவர்களும் நேரத்திற்கு போய் சேர வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட்டார் என்பதுதான் வருத்தம்.. காரணம் மவுன்ட் ரோட்டில் ஆபீஸ் இருப்பவர்களுள் நானும் ஒருத்தி..

அங்கிள்‍ ஏற்கனவே கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவுக்கு வரும் போதும் இதே வழியில்தான் வருவார்.. அப்போதும் டிராபிக் ஜாம் ஏற்படும். அதுவும் ஜெமினி மேம்பால இறங்கத்தில் வண்டிகளை நிறுத்தி விடுவார்கள்... பாலம் முழுக்க காரும் டூவிலருமாய் நிக்கும். இதில் சில சைக்கிள் ஆசாமிகள், இடையே புகுந்து இடித்து சைக்கிளை தூக்கிக் கொண்டு முன் செல்ல முனைவார்கள். உறுமிக் கொண்டிருக்கும் வாகன கூட்டம்.. முன்னே செல்லவும் முடியாமல், பின் செல்லவும் முடியாமல் மேம்பாலத்தில் அடிக்கடி மாட்டிக் கொண்டு தவிக்கும் சென்னை வாசிகள் அதிகம்..
(இப்போ துணை முதல்வர் வேற இருக்காறா? இனி அவருக்கும் சேர்த்து, தரிசனத்திற்கு காத்திருக்கும் கூட்டம் கணக்கா, ரோட்டில் நிக்கணும்..)

புதிய சட்ட சபை, திறப்புவிழா அன்னிக்கு சென்னையில் உள்ள குழந்தைகள் சந்தோசமா இருந்ததா கேள்வி.. அட ஆமாங்க.. இவங்க பாட்டுக்கு நாலு மணிக்கு மேல பாதி பஸ் ஓடாதுன்னு அறிவிச்சிட்டாங்க.. உண்மையில பாதி பஸ்கள் மூணு மணிக்கே ஓடல.. அந்த பயத்தில எல்லா ஆபீஸ்க்கும் மதியத்தோட லீவ் விட்டிட்டாங்க.. அம்மா அப்பாவும் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட, புள்ளைங்கல்லாம் சந்தோஷமா ஸ்நாக்ஸ் தின்னுக்கிட்டு அவங்க கூட ஐ.பி.எல் பார்க்க உட்கார்ந்திடுச்சுங்க..ஆக அதுங்க மட்டும் கருணாநிதி அங்கிள்‍க்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கும்.

இனியும்  இந்த தொந்தரவு தொடரும் பாவம் அதுங்களுக்கு தெரியல...ஆமாங்க... ஒரு நாள் சோனியாவும் சர்தார்ஜியும் சாரி மன்மோகன் சிங்‍கும் சென்னை வந்ததுக்கே, அல்லோகப்பட்டது சென்னை.. இனி எந்த வி.ஐ.பி சட்ட சபைக்கு வந்தாலும் மவுண்ட் ரோடு வழியாகத்தான் வருவாங்க.. நாங்களும் நடு ரோட்டில் நிப்போம்... ஒரு வேளை பொதுமக்களை நடு ரோட்டில் நிக்க வைக்கிறதுதான் அவங்க நோக்கமா?

சரிங்க.. இதே மாதிரி டிராபிக் ஜாமில் மாட்டிக்கிட்டு நிக்கிறீங்க... அப்போ மந்திரியே போலீஸை கூப்பிட்டு, உங்க பேரைச் சொல்லி.. அவங்க போகட்டும்,‍நாம அப்புறமா போகலாம்‍ன்னு சொல்றார்.. போலீஸீம் உடனே உங்க வண்டிக்கு வழி ஏற்பாடு செய்யறாங்க.. அப்படியே குலுமணாலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி குலுகுலு‍ன்னு இருக்குமே? அப்படி இல்லை என்றாலும் அது போன்ற மனநிலையில் இருந்தேன் நான்...

சம்பவ இடம்: சென்னை அறிவாலயம்..
தேதி: நியாபகம் இல்லை...
நேரம்: அநேகமாக மாலை நாலு மணி..

இனி கதைக்களம்....

அப்போது அறிவாலயத்தில் சன்.டிவி இருந்தது.. அதில் என் பேட்ச்மெட் கோபி கேமராமேனாக வேலை செய்து கொண்டிருந்தான்.. அவனைப் பார்ப்பதற்காக என் டூவீலரின் சென்று இருந்தேன்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் ''உள்ளே" ''வெளியே'' அம்புக்குறிகளை மதிக்க மாட்டேன்.. வெளியே என்று எழுதி இருக்கும் வழியே உள்ளே சென்று,  உள்ளே செல்லும் வழியில் வெளியே வருவேன்.. எல்லாம் என் ஐ.டி கார்டு தரும் தைரியம்..

அப்படி ஒருநாள் என் பேட்ச்மெட்டை பார்த்துவிட்டு வெளிவரும் போது, ''மேடம் வெயிட்" என்று ஏதோ கத்துகிறான் நேபாளி கூர்க்கா.. எனக்கு இந்தி தெரியாததால் அந்த கூர்க்கா‍வின் வார்த்தைகள் புரியாமல் வேகமாக வந்து கொண்டிருந்தேன்... பின்னாடியே அவரும் துரத்திக் கொண்டு வந்தவர் வேகமாக கத்துவதற்கும், நான் சடன் பிரேக் போடுவதற்கும் சரியாக இருந்தது..
காரணம் நான் அங்கு 'உள்ளே' வழியாக வந்த பிரமாண்ட வண்டியினை இடிப்பதற்கு சில அடிகள்தான் வித்தியாசம் இருந்தன... அது வரைக்கும் என் பின்னாடி வந்த கூர்க்கா அமைதியாக, நானும் காரில் இருந்தவரிடம் திட்டு வாங்கும் எண்ணத்துடன்  பார்த்தேன்...


திரில் கதைகளில் வருவது போல, சொல்ல வேண்டுமென்றால், என்ன ஆச்சரியம்... அந்த காரில் இருந்தவர் ஸ்டாலின்.. துணை முதல்வர்...
என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் என் உடம்பு பதறிவிட்டது. காரணம் தப்பு என் மேல்...


அதிர்ச்சியில் அப்படியே என் டூவிலரில் உட்கார்ந்திரூந்தேன்.. அந்த காரின் டிரைவரும் அப்படியே என்னைப் பார்க்கிறார்.. ஸ்டாலின்தான் உடனே  சுதாரித்து அந்த காரை பின்நோக்கி எடுக்கச் சொன்னார்.. கார் பின்செல்ல நான் முன்சென்றேன்... எனக்கு சிரித்துக் கொண்டே வழிவிட்டார் அவர்... ஆனால் எனக்குத்தான் பயத்தில் எதுவும் தோன்றவில்லை.. அறிவாலயத்தை விட்டு வெளியே வந்ததும், என்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது...

இன்று வரை டிராபிக்கில் எதாவது வி.ஐ.பி‍க்காக காத்திருக்கும் போது இந்த நியாபகம் வந்து போகும்..

ஆக இதில் நான் சொல்ல வருவது, துணை முதல்வர் ஸ்டாலினே எனக்கு வழி விட்டு ஒதுங்கிப் போகிறார்.. என் அருமை, பெருமை தெரிஞ்சு.... அதனால ஆனாளப்பட்ட பொது மக்களே கவனமாக இருங்க......

அது!.... அந்த பயம்!....இருக்கட்டும்...

Friday, March 12, 2010

ஏமாற்றுக்கார கடவுள்..

பொழுது ஒன்று
போகா நேரத்தில்
இமையிரண்டும் மூடி
இருகை கோர்த்த‌
ஒரு அசாதாரண நேரத்தில்
வரம் தர வந்தான்
கடவுள் என்பவன்..


கூப்பிய கைகளுக்கு
பரிசு தருவது
அவன் பரம்பரை
பழக்கமாம்!
இஷ்டமானது
கூறு‍ என்றதில்
பட்டியலிட்டது மனது!

ஊர் சுற்ற...
செலவுக்கு பணம் தர..
அழும் போது
ஆறுதல் சொல்ல..
என் பாட்டுக்கு
தலையாட்டி பொம்மையாய்...
இரவு நேர காவலாளியாய்..

அவ்வப்போது
எனக்கு கட்டளையிட்டு...
என் கேள்விகளுக்கு
பதில் சொல்லி
நான் செல்லம் கொஞ்சவும்..
சோர்ந்த நேரம்
பணியாளாய்...
முக்கியமாய்
நான் விளையாட
பொம்மையுமாய்...
எதாவது தா!
என்றேன் கடவுளிடம்!

உடனே அனுப்பி வைத்தான்
கணவன் என்றோருவனை!
 

எல்லாம் சரி..
இந்த டம்மி பீஸ்‍க்கு
முப்பது பவுனும்
ஐந்து லட்சமும் 
கட்டணமாய் வாங்கியதுதான்
கடவுள் செய்த  மோசடி!
 

Wednesday, March 10, 2010

காதல் கதை‍ன்னு சொல்லலாம்‍‍‍ பார்ட் 2

யாராவது அமுதம் வேண்டாம் என்று சொல்வார்களா? மதுமிதா சொல்வாள்!.

ஆம். 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு" என்பதை தீவிரமாக மனதுக்குள் ஜபித்துக் கொண்டிருப்பவள் மதுமிதா. காரணம் அவள் கணவன் திவாகர் அவளிடம் அன்பை வெளிப்படுத்தும் அதீத முறைகள்தான்!.

''சர்ப்ரைஸ் கொடுக்கறேன்னு சில நாள், நான் எழுந்து கோலம் போடப் போறதுக்கு முன்னாடியே வாசல் கூட்டி தெளிச்சு வைக்கிறார். தெருவுல பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?"

''எனக்கு பிங்க் கலர் பிடிக்கும்ன்னு சொன்னேங்கிறதுக்காக ஒரே நேரத்துல பத்து பிங்க் கலர் சுடிதார் எடுத்துட்டு வர்றார்.. வேஸ்ட் தானே?"

''அவங்க அண்ணா, அண்ணிக்கிட்ட .. ''நான் ஏன் பொண்டாட்டிய செல்லமா 'ஏஞ்சல்  "-ன்னுதான் கூப்பிடுவேன்'ங்கிறார். மானம் போகுது."
-இப்படியாக நீளுகின்றன மதுமிதாவின் குற்றசாட்டுகள்.

''என் பொண்டாட்டி மேல உயிரையே வச்சிருக்கேன்.. அதை அவகிட்ட நான் பின்ன எப்படிப்பா எக்ஸ்பிரஸ் பண்ணுவேன்?"
-டாஸ்மாக் கடை ஒன்றின் பக்கத்து டேபிளில் இருந்த முகம் தெரியாத நபரிடம் திவாகர் உளறிய வார்த்தைகள் இவை. டாஸ்மாக் போகும் அளவுக்கு அப்படி என்ன குழப்பம் கும்மி அடிக்க ஆரம்பித்து விட்டது?

திருமணம் ஆகி ஐந்து மாதங்கள் கூட முடியவில்லை. மாலை மயங்கிய நேரங்களில் பூவோடு வந்தவனை ''எதுக்கு இவ்வளவு பூ? கொஞ்சமா வாங்கிகிட்டு வாங்கன்னு சொன்னா கேட்க மாட்டிங்களே!"" என்றாள் மது.
அடுத்த நாள் வருத்தம் மறைத்து, 'இன்னிக்கு நான் டின்னர் பண்றேன்" என்று ஆசையாக் கிளம்பியவனை, 'ஆம்பிளையா.. லட்சணமா இருங்க" என்றாள் கண்டிப்புடன்..

மற்றொரு நாள்.. 'உனக்கு பிடிச்ச பாசந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்" என்றவனை, ''ஐயோ... இந்த அஞ்சு மாசமா நீங்க அதையே வாங்கிக் கொடுத்ததுல எனக்கு பாசந்தியே வெறுத்திடுசசுப்பா!'' என்றாள். இப்படியாக ஒவ்வொரு நாளும் வருத்தங்கள் எழுந்தன அவர்களுக்குள். விளைவு... திவாகர் வாங்கி வந்த பூவின் வாசம் சில தினங்களாக தொடர்ந்து மறுக்கப்பட்டது. அவன் டாஸ்மாக் வாசம் பிடிக்கத் துவங்கிவிட்டான்.


 எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்குமாம். ஆனால் இங்கே அதற்கு நேரெதிர்.

திவாகர் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக குட்டிக்கரணம் கூட அடிக்கும் ரகம்.   நண்பர்களுக்கு  அவர்களின் குடும்ப போட்டோக்களைத் தேடி பிடித்து பிறந்த நாளுக்கு
பிரேம் செய்து கொடுத்து, அவர்கள் சந்தோஷப் படுவதைப் பார்த்து தானும் சந்தோஷப்படும் பிரியக்காரன். நண்பர்களுக்கு இப்படி சர்ப்ரைஸ்கள் கொடுத்து சந்தோஷப்படுத்துபவன், தன் மனைவிக்காக எத்தனை சர்ப்ரைஸ்களை  தேக்கி வைத்திருப்பான்? அதன் வெளிப்பாடுகள் தான் இப்போது மதுமிதாவின் குற்றசாட்டுகளாக வடிவெடுத்து நிற்கின்றன.


மதுமிதாவும் அன்பானவள் தான். ஆனால் அவள் வளர்ந்த சூழலில் நிலவிய அன்பு பரிமாறல்கள் வேறு ரகம். எப்போதாவது அம்மாவைக் கோயிலுக்கு அழைத்து செல்லும் அப்பாவின் அன்பும், கல்யாண நாளில் மனைவிக்கு புடவை வாங்கிக் கொடுத்து 'நல்லாயிருக்கா?'' எனும் அண்ணனின் அன்பும்தான் அவள் அறிந்தது.

ஆனால், திவாகர் காட்டும் அன்பு அனைத்துமே இவளுக்கு அதிர்ச்சி ரகம்தான். இருவரையும் ஊர் கூடி  உறவு பந்தத்தில் இணைத்து வைக்க, முதலிரவு அன்று கைகளில் பால் ஏந்தி வந்தவளிடம், ''ஒரு சேஞ்சுக்கு பீர் தரமாட்டிங்களா?"" என்று திவாகர் கேலி செய்ய, 'அய்யய்யோ.. ஒரு அயோக்கியன்கிட்ட மாட்டிக்கிட்டோமே" என்று அன்றே பதறிப் போனாள் மது. தொடர்ந்த நாட்களில் சந்தடி சாக்கில் புதுப் பொண்டாட்டியை முத்தமிட துடித்த திவாகரை ரவுடியாக பார்த்தாள். அவனின் சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாமே அவளுக்கு திகட்ட செய்தன. தள்ளித் தள்ளி சென்றாள். ஆனால் அது எத்தனை நாளைக்கு நீடிக்கும்.. அன்று காத்திருந்தது.. அவர்களின் இடைவேளைக்கான க்ளைமாக்ஸ்!

திவாகர் மேல் எழுந்த அதிருப்தியை மறக்க, டி.வி சீரியல் பார்க்க ஆரம்பித்திருந்தாள் மது. சீரியலில் கை தவறி கதாநாயகி காபி டம்ளரை கீழே கொட்டி விட, 'பளார்' என கன்னத்தில் அறைந்தான் அவள் கணவன். மதுவுக்கு திவாவின் நினைவு வந்தது. அன்று ஆபீஸ்க்கு கிளம்பியவன், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது  இவள் கைதவறி சாம்பாரை கொட்டிவிட, 'அட... சாம்பார்ல கூட மார்டன் ஆர்ட் வரைவியா நீ?" என்றபடி வேறு சட்டையை மாற்றிக் கொண்டான். 

அடுத்து ஒரு சீரியல். உடம்பு முடியாமலிருக்கும் தன் மனைவியை என்னவென்று கூட கேட்காமல் இருந்த அந்த சீரியல் கணவனைப் பார்த்தபோது, இவள் தலைவலிக்கு தைலம் தடவிவிட்ட திவாவின் விரல்களை நெஞ்சம் தேடியது.

இரவு இன்னுமொரு சீரியல். மளிகை வாங்க கொடுத்த நூறு ரூபாய்க்கு தன் மனைவியிடம் கறார் கணக்கு கேட்டுக் கொண்டிருந்தான்  அந்த சீரியல் ஹீரோ. திருமணம் முடிந்த மாதமே மது பெயரில் பேங்க் அக்கவுன்ட் ஆரம்பித்து தந்த திவாகரின் நியாபகம் மட்டுமல்ல... அவன் சீக்கிரமாக வரும் மாலை நேரங்களில் தன்னை சுற்றி சுற்றி வருவது, காதுக்குள் 'ஏஞ்சல" என்று கிசுகிசுப்பது, உள்ளங்கையில் முதல் முத்தம் வைப்பது என.. ஒவ்வொன்றாக அவள் மனதுக்குள் மின்னின.

'எத்தனையோ பெண்கள் கணவனோட அன்புக்காக ஏங்கிக் கிட்டிருக்கும்போது, அன்பே கணவனா கிடைச்ச திவாவை புரிஞ்சுக்காம விட்டுட்டோமே" என்று முழு மனதாக வருந்தினாள் மது. வாசலில் திவாவின் அழைப்பு மணி கேட்டது. கதவை திறந்தவள், இந்த கணத்துக்காகத் தான்  காலமெல்லாம் காத்திருந்தது போல அவனைக் கட்டிக் கொண்டாள்.
''என்ன .... மோகினிப் பேய் இன்னுமா சாப்பிடாம இருக்கு?" என்று வழக்கம் போல திவா கிண்டலடிக்க, 'ம்ம் .. ஜோடிப் பேய்க்காக காத்திட்டு இருக்கு" என்று தானும் அவன் மொழி பேசினாள்!.
ஆம்! இங்கே எதிர் எதிர் துருவங்கள் சம புள்ளியில் மையம்  கொண்டுவிட்டன.

Monday, March 8, 2010

பயணத்தில் பரிதவிக்கும் மனசு

சொல்லாமல்
ஊருக்கு
செல்லாதே!
தவிக்கிறது
உன்
என்
நம்
தலையணை!


சுவடு படிந்த
தேநீர் கோப்பை!
தூசு நிறைந்த
ஜன்னல்!
பறிக்கப்படாத
மல்லிகை மணம்!
கிழிக்கப்படாத
காலண்டர் தேதிகள்!
ஏக்கத்தில் நான்!
என அத்தனையும்
பறைசாற்றுகின்றன
நீ ஊருக்கு
சென்றுவிட்டதை!


ஒரு நாள் மேற்கு
அதற்கு அடுத்து
வடகிழக்கு
மற்றோரு நாளில்
தெற்கு
என மாற்றம் கொண்டு
உதிக்கின்றது
என் ஜன்னல் வழி
சூரியன்!
நீ ஊர் சென்ற
நாட்களில்.



உன் பயண நாட்களில்
மனதாள்வது எது?
தங்களுக்குள்
சண்டையிடுகின்றன‌
என் ஜிமிக்கியும்
கால் கொலுசும்!
என் கண்ணீரின் ஏக்கம்
அறியாமல்!


ஒவ்வோரு நிமிடமும்
ஆயிரக்கணக்கானோர்
பயணிக்கிறார்கள்.
புள்ளிவிபர தகவல்!
ஏனோ
நீ ஊர் சென்றால்
மட்டும்
என் உயிர்வாங்கி செல்கிறாய்!.

Friday, March 5, 2010

ஹேப்பி ஹாலிடே..

சென்ற வார விடுமுறையில் என் அக்கா‍வின் புகுந்த வீட்டிற்குச் சென்றேன். நான் ஆறாவது படிக்கும் போதே என் அக்காவுக்கு (பெரியம்மா மகள்) திருமணம் ஆகிவிட்டது. அதனால் என் பள்ளி கல்லூரி கோடைகால விடுமுறை நாட்களில் அங்கேதான் இருப்பேன். ஏப்ரல் மாதத்தில் அங்கே காளியம்மன் கோயில் திருவிழா வரும், அதைத் தொடர்ந்து கிடா வெட்டு விருந்து நடக்கும். அதற்கு குடும்பத்தோடு சென்றுவிட்டு, நான் மட்டும் ஜுன்  மாதம் பள்ளி திறக்கையில வந்து சேருவேன்.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் இருந்து என்னால் அங்கே செல்ல முடியாமல் போயிவிட்டது. ஆக சமீபத்திய பயணம் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தது.. சேலம் ராசிபுரம் அருகில் உள்ள ஆண்டலூர் கேட் என்ற ஊரில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை மினிபஸ் மட்டுமே வந்து செல்லும் அக்மார்க் கிராமம் அது.
 
இத்தனை பில்டப் தருவதற்கு முன் என் அக்கா வீட்டைப் பற்றி சிறு விளக்கம் தருவது முக்கியம். ஒரு மலையில் அடிவாரத்தில் இருக்கும் வீடு அது. வீட்டின் பின் புறம் எப்போதும் சலசலக்கும் வாய்க்கால் ஓடை. அதனை ஒட்டி உள்ள வயலில் சோள  செடிகள், பக்கத்தில் பம்பு செட், வீட்டிற்கு முன் கவுரவ தோற்றதுடன் தென்னந் தோப்பு. அதற்குள் சிறப்பு விருந்தினர்களாக கொய்யா, மாதுளை மற்றும் மருதாணி மரம். இப்போது சொல்லுங்கள் என் பயணத்தைப் பற்றி நான் பெருமை பேசலாம் தானே!

பஸ் ஸ்டாண்டிலேயே என்னை அழைத்துச் செல்வதற்கு மாமா காத்திருந்தார். அவருடன் வீடு வரை பைக் பயணம். பவுர்ணமி இரவில் ஒன்பது மணி அளவில், அந்த காட்டுப் பாதையில் நிலா வெளிச்சத்தில் பயணம் சென்றது என் பொக்கிஷ நேரத்தில் ஒன்று.

வீடு சென்றதும் சென்னையில் இருந்து ரயில், பஸ் என மாறி மாறி வந்த களைப்பில் சாப்பிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலையில் என்னை எழுப்பியது என் அக்காவின் மாமனார். 'பிரேமா (என் பெரும்பான்மையான உறவினர்கள் என் அம்மாவின் பெயரை வைத்துதான் என்னைக் கூப்பிடுவார்கள்). பம்பு செட் போட்டாச்சு, குளிக்க போறியா" என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கே நான் ஓடிவிட்டிருந்தேன். வெள்ளை நுரை பூசிவந்த அந்த தண்ணீரைப் பார்த்ததும் குளிக்க அவ்வளவு ஆசை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக சென்னையில் நான் கற்ற நாகரிக வாழ்க்கையும் என் வயதும் அந்த வெட்ட வெளியில் குளிக்க வெட்கம் தந்தது.

அந்த ஏக்கத்துடனே வீடு திரும்பினேன். என் அக்காவின் வீட்டு வாண்டுகளுடன் சேர்ந்து அன்று முழுவதும் ஆசை தீர விளையாடிவிட்டு, நைட் சேலம் ஜங்சனில் சென்னை செல்ல, ஏற்காடு எக்ஸ்பிரஸ்காக காத்திருந்த போது, சிறு வயதில் நான் அக்கா வீட்டிற்கு போனதற்கும் இப்போதைய பயணத்திற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தேன். அந்த உணர்வு நான் இழந்தவற்றை பட்டியல் போட்டு காட்டியது.

 அந்த பட்டியல் உங்கள் மனதிலும் தோன்றலாம். இதோ இன்னும் சில நாட்களில் கோடைகால விடுமுறை வரப் போகிறது.. இங்கே நான் குறிப்பிட்ட என் பட்டியல் ஏக்கங்களில் உங்களுக்கும் ஏதேனும் இருந்தால் மரியாதையாக லீவ் போட்டுவிட்டு சிறுவயதில் உங்களை கொண்டாடிய கிராமத்திற்கு சென்று வாருங்கள்.

அந்த பட்டியல்:

* டயர் வண்டி உருட்டறது, பனை மர ஓலையில் காத்தாடி செய்றது, அரச‌ மர இலையில் பீப்பி செஞ்சு ஊதறது,

* கூடாஞ்ச் சோறு, புளியங்கா அல்லது மாங்கா பறிச்சு, உப்பு மிளகாய் வெச்சு அரைச்சு திங்கறது,

* திருவிழா நடந்தா, சின்ன சொம்போ அல்லது குடமோ எடுத்துக் கிட்டு, சாமிக்கு தீர்த்தம் ஊத்தப்போறேன்னு சொல்லிக்கிட்டு, கூட்டத்தோடு ஆடிக்கிட்டே கோயிலுக்கு போறது.

* சவ்வு மிட்டாய் வாட்ச், தேன் மிட்டாய் வாசம்,

* பசலைக் கீரை விதையை பறிச்சு, உதட்டில் லிப்ஸ்டிக் போடறது,

*மண்ணுல தண்ணீ ஊத்தி, பிசைஞ்சு கட்டி, இட்லி செய்றது,

* வட்ட வட்ட டிசைனில் மருதானி வைக்கிறது,

*சேமியா ஐஸ், பால் ஐஸ் வாங்கித் திங்கறது,

* தென்ன மரத்துக்கு அடியில் கட்டில் போட்டு தூங்கறது,

*பழைய சாதமும் கரைச்சு குடிச்சு சின்ன வெங்காயம் தொட்டுக்கறது.

*வரப்பு மேட்டுல உட்காந்து வாழை இழை போட்டு சாப்பிடறது.

*வயல் காட்டில் வேலை நடக்கும் போது, அங்கேயே சுத்தி சுத்தி வர்றது

*தூர்தர்ஷன்‍ல நேயர் விருப்பத்தைக் கூட, உட்கார்ந்து பார்க்கிறது.

*பல தடவை பார்த்த சினிமாவா இருந்தாலும், ஊர் பொதுக்காசுல தலை வாசலில் திரை கட்டி படம் போடும் போது, பாய் சகிதம் ஆஜராகி குடும்பத்தோரு படம் பார்க்கிறது.

*கொள்ளு சட்னி, வெள்ளை பணியாரம், உளுந்தங்கஞ்சி, கம்பங் களி, பச்சைப் புளி ரசம்,

* ஒரு கோழி‍யை புடிச்சுக்கிட்டு, மொத்த குடும்பமும் மாட்டு வண்டி கட்டி, கோயிலுக்கு போய் படையல் போட்டு சமைச்சு அங்கேயே சாப்படறது,

*பால் இல்லாத வரக் காப்பி அல்லது கடுங்காப்பி

*அங்கங்க மேயிற ஆட்டைப் புடிச்சு, திருட்டுத் தனமா பால் பீச்சிக் குடிக்கிறது,

*ஒடக்கான் பிடிச்சு, கழுத்தில் கயிறு கட்டி கொடுமைப் படுத்தறது..

*பட்டாம் பூச்சி பிடிக்க பின்னாடியே ஓடறது,

*ஊரில் யார் வீட்டுக்கு கார் வந்தாலும் அதன் பின்னாடியே போறது.

*ஊருக்குள்ள மைக் கட்டி வண்டி வந்து தர்ற நோட்டிஸை பத்திரமா வாங்கி வைக்கிறது..

* உண்டியலில் காசு சேர்த்து வெச்சு, திருவிழா சமயம் எடுத்து செலவு பண்றது இல்லாட்டி தீபாவளிக்கு பட்டாசு வாங்கறது.

இதில் நான் ஏதாவது சொல்லாம விட்டிருந்தா, எனக்கு நீங்க சொல்லுங்க. பட் மறக்காம ஊருக்கு போய்ட்டு வாங்க. முடிஞ்சா உங்க குழந்தை தனத்தை மீட்டு எடுத்துக்கிட்டு வாங்க.

Tuesday, March 2, 2010

ஆட்டுக் குட்டி...

 யாருக்கும் 
அடங்காத ஆட்டுக்குட்டி
நான்!
என்னை மேய்ப்பதற்காகவே
படைக்கப்பட்ட
ஜீசஸ் நீ!


உன் காதலால்   மட்டுமே
ரட்சிக்கப்பட்டது....
இந்த ஆட்டுக் குட்டி..!


 உன் கட்டுக்கடங்கா
அன்பின் அரவணைப்பில் 
மூச்சு முட்டிப் போகிறது
இந்த ஆட்டுக் குட்டிக்கு!
ஓ ஜீசஸ் பர்கிவ் மீ..


இந்த ஆட்டுக் குட்டிக்கு
வழியும்
மொழியும்
ஜீவனுமாய் இருப்பேன்
என்கிறாய்..
உலக காதலை
ஒற்றைவரியில்
சொன்ன
என் ஜீசஸ் நீ.

என் பாரங்களை
நீ ஏற்றுக் கொண்டு
புன்னகையை தருகிறாய்!
தேவனின் கைகளில்
ஒரு  ஆட்டுக் குட்டிக்கு
அடைக்கலம் கிடைக்கிறது..