Tuesday, June 14, 2011

நண்பேண்டா என்ற பெயரில் சூரியகதிர் பத்திரிக்கையின் வந்த என் கதை

இந்த காதல் கதைகளில் வருமே, ஒரே நேரத்தில் மனது குளிர்ச்சியாகவும் அதே சமயம் வெப்பமாகவும் இருக்கும் என்று அதுபோலத்தான் எனக்கு கடந்த வாரம் முழுக்க இருந்தது. எல்லாம் ரிஷிநாத்தின் நிலையைப் பார்த்துதான். எதிரியாக இருந்தாலும் நிலை குனித்து நிற்கும் போது நாம் வருத்தப்படுவோம். ஆனால் ரிஷிநாத் எனக்கு உற்ற நண்பன். இருப்பினும் அவன் இன்று இருக்கும் நிலையில் வேடிக்கை பார்த்து சிரிக்கும் உள்ளங்களுள் நானும் ஒருவன்.

ஹலோ, ஹலோ, உடனே என்னைப் பற்றி தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். மிக சுருக்கமாக நடந்த சம்பவங்களை கூறிவிடுகிறேன்.

ராம் கோபால் சர்மாவைத் தெரியுமா? மூன்று முறை தேசிய விருது வாங்கியவரும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யபடும் தமிழருமான இன்றைய முன்னனி சினிமா இயக்குனர். அவருக்கு இந்த கதையில் என்ன கேரக்டர் என்கிறீர்களா? ரங்கசாமியை ரிஷிநாத் ஆக்கிய பெருமைக்குரியவர் அவர்தான். புலிய குளம் கிராமத்தில் துண்டு துக்கடா நாடகங்களில்யெஸ் பாஸ் சொல்லிக் கொண்டிருந்த ரங்கசாமி கெட்டுப் போக பட்டணம் வந்தான். யார்  யார் கை, காலையோ பிடித்து, மூன்றாம் பிறை கமலஹாசனைப் போல குரங்கு பல்டி அடித்து ஒன்ரறையனா இயக்குநரிடம் எடுபிடியாக சேர்ந்தான். ஆனால் வெளியில் அவருடைய அடுத்த பட அசிஸ்டண்ட் என்று சொல்லிக் கொள்வான். அந்த இயக்குநரும் நம் ராம் கோபால் சர்மா-வும் பார் நண்பர்கள். பார்க்கும் போதெல்லாம் பல்லிளிக்கும் நம் ரங்க சாமியை மைண்டில் ஒரு ஓரத்தில் வைத்திருந்த ராம்கோபால் சர்மாவுக்கு, அப்பாவி ஒருவன் அநியாயத்தை தட்டிக் கேக்கும் புது கான்செப்ட் கதைக்கு ஒரிஜினாலிட்டி தேவைப்பட்டது. அப்படித்தான் நம் ரங்கசாமி ரிஷிநாத் ஆனான். குருட்டுப் பூனைக்கு கிடைத்த அதிர்ஷடம் என்பார்களே, அப்படித்தான் நம் ரங்கசாமியை சாரி, சாரி ரிஷிநாத்தை சினிமா உலகம் கேலி செய்தது. ஆனால் அவனோ அதைப் பற்றி கவலைப் படாமல் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கார்டு வாங்கினான். கனல் கண்ணனிடம் சண்டைப் பயிற்சி எடுத்தான். ஆனால் என்னதான் கலா மாஸ்டர் ஈஸியான ஸ்டெப் சொல்லிக் குடுத்தாலும் அவனுக்கு டான்ஸ் மட்டும் வராமல் அடம் பிடித்தது. இருப்பினும் நம்ம ரிஷிநாத் படத்தின் ஷீட்டிங் ஆரம்பம் ஆனது.

இங்கேதான் நான் எண்ட்ரி ஆகிறேன். சி. பாஸ் செய்துவிட்டு கேமரா மேல் கொண்ட காதலால் கோடம்பாக்கத்தை சுற்றிவரும் இளைஞர்களுள் நானும் ஒருவன். உடனே தண்டக் கேஸ் என நினைத்து விடாதீர்கள். பத்திரிக்கைகளில் நீங்கள் பார்த்து ரசிக்கும் சினிமாக்காரங்களின் போட்டோக்கள் நான் எடுப்பதுதான். என்னுடன் படித்த நண்பர்கள் எல்லாம், ஆடிட்டர் என்ற அடைமொழியுடன் மாசத்தில் லட்சத்தை தொடும் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்க, நானோ திரிஷாவையும், நயன் தாராவையும்ஸ்மைல் பிளிஸ்’ சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு ஆத்ம திருப்தியிருந்தால் விடாமல் சினிமாக்காரர்களை துரத்துவேன். அப்படித்தான் ரிஷிநாத் அறிமுகம். பொதுவாக புது முகங்களுக்கு முதல் போட்டோ ஷீட்டிங்கில் பயம் இருக்கும். அவர்களின் முதல் அறிமுகம் என் கேமரா கண்களின் வழியில்தான் என்பதால் என்னிடம் அதிகபட்ச மரியாதையோடு நடந்துகொள்வார்கள்.

ஆனால் இந்த சித்தனுக்கும் எத்தனாக ரிஷ்நாத் இருந்தான். கீழே பார்க்கச் சொன்னால் ஒன்றரை கண்ணில் விளித்தான். மெல்லிய புன்னகையை வீசச் சொன்னால் மதன் பாபு மாதிரி விடாமல் சிரித்தான். இரண்டாவது காஸ்டியூம் மாற்றத்திற்கே செர்ரி பழ ஜீஸ் கேட்டான். ` போட்டோ ஷீட்டில் ஒழுங்கா நிற்கக் கூட தெரியல,இவனெல்லாம் என்ன மூஞ்சின்னு சினிமா நடிக்க வந்திட்டான்` என்று வாய்விட்டு கதறிய என் அஸிஸ்டண்டை அடக்கி, திக்கித் திணறி நான் எடுத்த போட்டோக்கள் ரிஷிநாத்தை பாதித்திருக்க வேண்டும். பத்திரிக்கையில் அவன் படம் வந்த அன்றே தாஜில் எனக்கு டிரீட் வைத்து தாஜா செய்தான். வேறென்ன `நண்பேண்டா`ன்னு அவனுடன் நான் கை குழுக்க வேண்டுமாம்.

அடுத்த நாள் காலையில் இருந்து அப்படி ஒரு அன்புத் தொல்லை ஆரம்பமானது எனக்கு. என் காதலி கீர்த்தி கூட நேரம் கிடைக்கும் போதுதான் போன் பண்ணுவாள். இவனோ அரை மணி நேரத்திற்கு ஒருமுறை போன் செஞ்சு, `இப்ப எங்கிருக்க பாஸ், நான் பாலு மகேந்திரா சாரை மரியாதை நிமித்தமா சந்திக்கப் போறேன்`ன்னு தவறாமல் தகவல் தருவான். இதற்கு இடையில் சாப்பிட்டியா, வெயில் எப்படி, இன்னிக்கு என்ன பிளான்னு விடாமல் எஸ்.எம்.எஸ் அனுப்புவான். ஒருவகையில் பார்த்தால் ரிஷிநாத் அப்பாவி என்றுதான் தோன்றும். ஹோட்டலில் பெப்பர் பாட்டில் அழகாக இருந்தால் பேண்ட் பாக்கெட்டில் பதுக்குபவன், சினிமாவின் அதி நாகரிக கலாச்சாரத்தில் ஒட்ட முடியாமல் தவித்தான். அந்த பரிதவிப்பே எனக்கு அவன் மீது அன்பை ஏற்படுத்தியது. ஆனால் சில சமயம் அவனது செயல்கள் எரிச்சலின் உச்சகட்டமாக இருக்கும்.

`மணி ரத்னம் சாரை ஏர்போர்ட்டில் பார்த்தேன், எனக்கு நல்ல போட்டோஜிக்னிக் பேஸ்-ன்னு சொன்னார்` என கூச்சப்படாமல் அவன் சொல்ல, நானோ அது போட்டோஜெனிக் என திருத்தியும் அவன் திருந்துவதாக இல்லை. `பேஸ் புக்கில் தீபிகா-ன்னு ஒரு பொண்ணு ஹாய் சொல்லிருக்குப்பா, ஒருவேளை தீபிகா படுகோனா இருக்குமோ, அடுத்த இந்தி படத்துக்கு அந்த புள்ளையை ஹீரோயினாக புக் பண்ண சொல்லணும்` என்பான். நடுராத்திரி பன்னி்ரெண்டரைக்கு போன் பண்ணி, பாஸ் பி.எம். டபிள்யூ இன்னிக்கு மார்க்கெட் பிரைஸ் என்னன்னு நெட்டில் பாரு. நாளைக்கு காலையில் நம்ம வீட்டு வாசலில் நிக்கணும்` என்று அலப்பறையை கிளப்புவான். இடையிடையே அம்பானிக்கு பொண்னு இருக்கா பாஸ், வீட்டில் அம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நச்சரிக்கிறாங்க` என கண் சிமிட்டுவான்.  `மச்சான் மலேசியா கலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டிருக்காங்க, என்ன கலரில் டிரஸ் எடுக்கலாம்` என்று ஸ்பென்ஸர் வாசலில் வைத்துக் கேட்பான். அனுஷ்காவுடன் போட்டோ ஷீட்டிங்-யில் இருக்கும் போது, பாஸ், நீலாங்கரையில் பங்களா வாங்கலாம்ன்னு இருக்கேன். நீ எந்த இடத்தை செலக்ட் பண்ணற`ன்னு திரி பத்த வைப்பான். இப்படியாக அவனது பாஸ் அழைப்புகளில் என் டைம் பாஸ் ஆனது.

ராம் கோபால் சர்மாவின் இயக்கம் என்பதால் அவனது படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. புத்தாண்டில் அவனது கொள்கைகளை கேட்டு ஒரு டிவி பேட்டி எடுக்க, மற்றோரு டி.வியோ அவனை கிராமத்து பொங்கல் பற்றி பேசச் சொன்னது. நாட்கள் நகர்ந்து தீபாவளியும் வந்தது. ஆனால் ரிஷிநாத்தின் படம் மட்டும் வெளியாகிற வழியைக் காணோம். மெகா பட்ஜெட், அதிக தியேட்டர் வேண்டும், எங்கே படம் வெளியானால் மார்க்கெட் சரிந்துவிடும் என முன்னனி நடிகர் செய்யும் சதி என கதைகள் இறக்கை கட்டி பறந்தன.

`நம்ம படம் அடுத்த வருஷம் டாப் லிஸ்டில் இருக்க போவுது. எப்படியும் ஐந்நூறு நாட்கள் ஓடும். என் இரண்டாவது படம் வந்துதான் இந்த அனலை குறைக்கணும்`ன்னு பார் தவறாமல் உளறினானே, தவிர வருஷம் ரெண்டாச்சே இன்னும் படம் பெட்டிக்குள்ள தூங்குதே என்று அவன் நினைத்ததாய் தெரியவில்லை. ஒருவழியாய் படம் ரிலிஸாகிற தேதி குறிக்கப்பட்டு, பின் தள்ளப்பட்டு, முன் தள்ளப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது. நண்பனின் படமாச்சே, அதுவும் ராம்கோபால் சர்மா படமாச்சே என நான் படபடப்பில் இருக்க அவனோ, ஆனந்த பவனில் ரசமல்லாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். `நம்ம படம் வரலாறு படைக்கும் பாஸீ, நீ ஏன் பயப்படற, நடிச்சிருக்கறது நான்னு மனசில் வைச்சுக்கோ` என்று அவன் திமிறில் குளற நான் பீதி அடித்து நின்றிருந்தேன்.

ரிஷிநாத் அத்தோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை. படம் ரிலிசாகிற நேரம் அவன் செய்த காரியம் தான் இன்று அவனை சோற்றுக்கு ஜிங்சாங் பாட வைக்கிறது.விசயம் இதுதான். `மக்கா, ராம்கோபால் சர்மா படத்திலேயே முதல் எண்ட்ரி. திரையுலகமே என்னை எதிர்பார்க்குது. அதுக்கு எதாவது செய்யணும் இல்ல, சூப்பரான ஸ்கிரிப்ட் ரெடி. நாமே நடிச்சு நாமே இயக்குறோம். அட எவன் கிட்டேயும் கை நீட்டாம, சொந்த காசுல படம் எடுக்கறோம். எப்பூடி? என அவன் தட்டிவிட்ட மெசெஜில் தாறுமாறான கோபத்தில் திரிந்தார்கள் கோடம்பாக்க வாசிகள்.

ஒருவழியாக புலி வந்தது. ஆனால் அத்தனை சீக்கிரத்தில் பூனை குரலில் பதுங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆமாங்க. ரொம்ப ரொம்ப சுமாரான படத்துக்கு பக்கத்தில் இருந்தது இளைய நாயகன் ரிஷிநாத் நடித்த `மெளன ஆயுதங்கள்`. பத்திரிக்கைகள் கிழி கிழிக்க, மக்களோ, தியேட்டரை புறக்கணித்து அந்த காசில் பிரியாணியும் பேபி கார்னும் வாங்கி சாப்பிட்டார்கள். நம்ம நாயகனும், இன்னும் ஒரு வாரத்தில் படம் பிக்கப் ஆகும் என தம் கட்டிக் கொண்டிருந்தான். ஆனது, ஆம் ஒரே வாரத்தில் படம் தியேட்டரை விட்டு கெட் அவுட் ஆனதில் ஆல் அவுட் ஆனார் ரிஷிநாத்.

நிச்சயமாய் ராம் கோபால் சர்மாவிற்கு இது பேரடி. ஆனால் அவர் வழக்கம் போல புத்தக விழாவில் குத்துவிளக்கு ஏற்றினார். டிவிட்டரில் ஏம் நார்மல் மேன்` என எழுதினார். அடுத்த பட டிஸ்கஷனுக்கு .ஆர்.ரஹ்மானுடன் லண்டன் போனார். இங்கே ரிஷிநாத்தோ பட தயாரிப்பு தந்த வீடும் காரும் போய், பழைய படி தீநகரில் நண்பன் மேன்ஷனில் ஒதுங்க வேண்டிய நிலை. அவன் மீது வஞ்சகம் வைத்திருந்த அனைத்து இயக்குநர்களும், போன் போட்டு துக்கம் விசாரித்ததில் பெரும் கேலியிருந்தது.

ஆனாலும் ரிஷிநாத் திடமாய் நின்றான். தமிழ் சினிமா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்தான். மற்ற நடிகர்கள் தன்னை சதி செய்து கவிழ்த்து விட்டதாக அறிந்தவர் தெரிந்தவரிடம் புலம்பினான். ஆயினும் மீசையில் ஒட்டிய மண்ணை மறைத்தான். கூடவே என்னிடம் பேசுவதையும் தவிர்த்தான். மனசு கேட்காவிட்டாலும் விட்டது தொல்லை என நான் இருக்க,கீர்த்தி தான் என் தலையில் தட்டிஏண்டா, இத்தனை நாள் அந்த ஆள் கூட சுத்தினே. ஒண்ணா தண்ணி அடிச்சீங்க. படம் பிளாப் ஆகியிருக்கறவருக்கு ஆறுதலா இல்லாம, கழட்டிவிட பார்க்கிறியேஎன்று அட்வைஸ் பண்ணினாள். நானும் நண்பேண்டா என சிலிர்ந்து விசாரித்ததில் கிடைத்த உண்மை, ‘படத்துக்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் ராம் கோபால் சர்மா, கறுப்பை வெள்ளையாக மாற்றவும், அந்த வருட ஆடிட்டிங்-க்கு கணக்கு காட்டவும் தான் சொந்த காசில் படம் எடுத்திருக்கிறார். அதுவும் மண்ணை கவ்வ வேண்டும் என்று அவர் பண்ணிய பிளான் நூற்றுக்கு நூறு சதவீதம் வேலை செய்ததில் பாதிக்கப்பட்டவன் தான் ரிஷிநாத் அதாங்க நம்ம புலிய குளம் ரங்க சாமி.

அறிந்த உண்மையை அவனிடம் சொல்லவும் தயக்கமாக இருந்தது. அதே சமயம் அவன் பண்ணிய பந்தாவுக்கு சரியான அடி என்றும் மனதுகெக்கக்கேகொட்டியது. இப்படியாக ரிஷிநாத்தின் நிலையைப் பார்த்து,  இந்த காதல் கதைகளில் வருமே, ஒரே நேரத்தில் மனது குளிர்ச்சியாகவும் அதே சமயம் வெப்பமாகவும் இருக்கும் என்று அதுபோலத்தான் எனக்கு கடந்த வாரம் முழுக்க இருந்தது.

Monday, October 18, 2010

முகமூடி மனிதர்கள்

முதன் முறை வட்சலா மேடத்தைப் பார்த்ததுமே, இனி எனக்கு ஜெயம்-தான் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. ஆமாம், பிரபல தமிழ் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்து மாதம் இரண்டாகப் போகிறது. ஆனால் உருப்படியாக இன்னும் ஒரு பேட்டியையும் எடுத்த மாதிரி இல்லை. எடிட்டரிடம் பேச்சு வாங்கியதுதான் மிச்சம். நானும் முயற்சிக்காமல் இல்லை. இட்லி கடை நடத்துகிற பாட்டியில் ஆரம்பித்து இன்போஸிஸ் கம்பெனியின் தலைவர் வரை எல்லோரையும் பேட்டி எடுக்க முயற்சி செய்தாகிவிட்டது. சினிமாக்காரர்களை பேட்டி எடுக்க முயற்சித்ததில் ’புது ஆள், உனக்கு என்ன தெரியும்’ என தட்டிக் கழித்தனர்.


திறமைசாலிகளைத் தேடிச் சென்றால் அவர்களுக்கு பத்திரிக்கைக்கு தகுந்தமாதிரி பேசத் தெரிவதில்லை. நாமாக கேள்வி கேட்டாலும் வாய் பொத்தி சிரிக்கிறார்கள். அதைத் தாண்டி பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றிய செய்தியோ, கட்டுரையோ வர வேண்டும் என நினைப்பவர்களிடம் விஷயம் இல்லை. முகஸ்துதி பாடும் விளம்பரமாகவே இருக்கிறது அவர்கள் பேச்சு. திக்கிக் திணறி இதையெல்லாம் கட்டுரையாக எழுதித் தந்தால் `ஜீவனில்லை` என துரத்தி அடிக்கிறார் சப் எடிட்டர்.

இன்னும் ஒரு வாரம் அவகாசம். அதற்குள் உருப்படியாய் ஒரு பேட்டி எழுதித் தந்து வேலையை தக்க வைத்துக் கொள்கிற வழியைப் பார் என அலுவலகத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்ட மூன்றாவது நாளில் தான் வட்சலா மேடத்தை சந்தித்தேன். ஓவியர், சமூக சேவகி, கலை இலக்கிய வாதி என ஏகப்பட்ட பட்டங்களை சுமந்து கொண்டிருந்தவரிடம் என்னை அறிமுகப்படித்திக் கொண்டவுடன் முகம் மலர வரவேற்றார். தன்னைப் பற்றி அதிக விவரங்களை அடக்கத்துடன் தந்தவர் நிச்சயம் என் வேலையை காப்பாற்றி விடுவார் என நினைத்தேன்.

வட்சலா மேடம் சாதாரண மனுஷி இல்லை என அன்றே புரிந்து போனது. ஓவியங்களில் மிக கடினமானதும், திறமையானதுமான தஞ்சாவூர் ஓவிய பாணியில் கடவுள் உருவங்கள் வரைவதை மட்டுமே அவர் லட்சியமாக கொண்டிருந்தார், இலக்கியத்தில் இலக்கணங்களை கரைத்து குடித்தவராக இருந்தார். படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு பணம் தந்து உதவி செய்தல், ரக்‌ஷா பந்தன் (சகோதரன் நலமாக இருக்க வேண்டும் என அவரின் சகோதிரிமார்கள் கடவுளை பிரார்த்தனை செய்து, கையில் ராக்கி என்னும் கயிறு கட்டி விடுவார்கள்) அன்று இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ராக்கி கயிறு வாங்கி அனுப்பி வைப்பார். முதியோர் இல்லங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி வைப்பார். தவிர சமூக நல அமைப்பு ஒன்றில் சென்னை வட பகுதிக்கு தலைவியாக இருந்தார். அவரின் பிள்ளைகள் இருவரும் அமெரிக்க வாசிகள். மூத்தவர் அங்கு வேலை பார்க்க, இளையவரோ படித்துக் கொண்டிருந்தார். வட்சலா மேடத்தின் கணவர் சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர்.

அறிந்த விசயங்களை அழகான தமிழில் கோர்வையாய் எழுதிக் கொடுக்க, அது அடுத்த வார பத்திரிக்கையில் மூன்று பக்க கட்டுரையாக பெரிய புகைப் படத்துடன் வந்திருந்தது. அன்றே பத்திரிக்கையை தூக்கிக் கொண்டு டூவீலரில் அவரின் வீட்டிற்கு விரைந்தேன். மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்று பலகாரங்கள் தந்து உபசரித்தார். இதுவரை செய்தித்தாள்களில் ஓரிரு வரிகளில் அவரைப் பற்றி செய்தி வந்திருக்கிறதாம். முழுதாய் மூன்று பக்க அளவில் அதுவும் பிரபல பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வந்தது இதுவே முதல் தடவை என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் என்பது அவரது வார்த்தைகளில் தெரிந்தது. இனி நாம் இருவரும் நண்பர்கள், அடிக்கடி என் வீட்டிற்கு வர வேண்டும் என அவர் சொல்லும் போது `நடக்கிற விசயமா` என்றாலும் விரைவில் 52 வயதான வட்சலா மேடமும் 21 வயதான நந்தினி ஆகிய நானும் நண்பர்கள் ஆனோம்.

அந்த மாதக் கடைசில் நான் தங்கியிந்த மகளீர் விடுதியில் இருந்து மாற வேண்டிய சூழ்நிலை. ஏனோ விதி அவங்க இருக்கும் அதே ஏரியாவுக்கே என்னையும் இடம் மாற்றியது. அதிகாலை வாக்கிங் நேரத்தில் இருவரும் `ஹாய்` சொல்லிக் கொள்வோம். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதிய உணவுக்கு என்னை அழைத்தார். சென்னையில் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கியிருந்த எனக்கு அன்று அமிர்தமாக உணவு ருசித்தது. வீட்டில் பிள்ளைகள் யாரும் இல்லாததால் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். நானும் வேலை இல்லாத சமயங்களில் அங்குதான் இருப்பேன். ஊரில் இருக்கும் அம்மாவுக்கும் வட்சலா மேடத்தைப் பத்தி சொல்லி போனிலும் பேச வைத்தேன். வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் என்னை சுருக்கமாக `நந்து` என அழைக்க இவர் மட்டும் ஸ்பெஷலாக `நதி` என அழைப்பார். அந்த வார்த்தை உச்சரிப்பு மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்க இன்னும் அவரை எனக்கு பிடித்துப் போனது.


இருவரும் சேர்ந்து கபாலிஸ்வரர் கோயில், தீ நகர் ஷாப்பிங், அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லம் என சுத்தாத இடம் இல்லை. அவங்க வீட்டில் ரெண்டு கார் இருந்தும் என் டூவிலரில் வெளியே செல்வது என்றால் கொள்ளை விருப்பம் அவருக்கு. இந்த இரண்டு மாத பழக்கத்தில் ஒரு நாள், `நீ ஏன் என்னை மேடம்-ன்னு கூப்பிடற. அம்மா-ன்னு கூப்பிடலாமே`ன்னு வாய்விட்டே கேட்க மிகுந்த தயக்கத்திற்கு பிறகு வட்சலாம்மா என அழைக்க ஆரம்பித்தேன்.


ஒரு மாலை நேர மழை காலத்தில் பால்கனியில் அமர்ந்தபடி இருவரும் வெங்காய பக்கோடாவும் காப்பியும் சாப்பிட்டபடி கதையடித்துக் கொண்டிருந்தபோதுதான் மனதில் இருந்த அந்த ஆசையைச் சொன்னார். `நதி... எனக்கு ரொம்ப வருஷமா ஒரு ஆசை. பெண் குழந்தை வேணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா பிறந்தது ரெண்டும் பசங்க. அவங்க வளர்ந்து படிப்பு, வேலைன்னு பிஸியாகிட்டாங்க. அப்பத்தான் பெண் குழந்தை இல்லாத ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது. ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்க்கனும்ன்னு இப்ப வரைக்கும் நினைக்கிறேன். ஆனா இந்த வயசுல ஒரு கைக்குழந்தைக்கு அம்மா-ங்கிறதை சமூகம் எப்படி ஏத்துக்கும்ங்கிற தயக்கம் இருக்கு. அதையும் தாண்டி அந்த குழந்தை வளர வரைக்கும் நான் திடமா இருப்பேன்னான்னு தெரியலை` என்று அவர் சொல்லும் போது கண் கலங்கியிருந்தது. அவர் பேச்சில் எப்போதும் பெண்கள் பற்றிய உயர்வாக கருத்து இருக்கும். ஆண்களை நம்பாமல் சொந்த காலில் நிற்க வேண்டும், எந்த காலத்திற்கும் பெண் தளர்ந்து போகக் கூடாது என சொல்லிக் கொண்டே இருப்பார்.

அதுவரை எனக்கு பிடித்த வட்சலா மேடம், என்னுடைய ரோல் மாடலானார். அந்தஸ்து பார்க்காமல் பழகும் அவரின் பண்பு எனக்கு இன்னும் இன்னும் பிடித்துக் கொண்டே போனது. தீபாவளி சமயம் எனக்கு ஒரு சுடிதார் எடுத்து தந்தார். வறுமையின் நிழலில் வளர்ந்திருந்த நான் அந்த சுடிதாரின் விலையைப் பார்த்ததும் பிரமித்துப் போனேன். கொஞ்ச நாளில் எனக்காக நிஜமாகவே அம்மா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துக்கும் வரன் பார்க்க ஆரம்பித்தார்.

ஆனால் அவருடன் பழகிய அந்த ஏழு மாத காலத்தில் நான் எந்த உதவியும் அவரிடம் எதிர்பார்த்து நின்றது இல்லை. ஒரு முறை தன் கணவரின் அலுவலகத்திலேயே நல்ல பதவி வாங்கித் தருகிறேன் என்றும் சொன்னார். அவர் குறிப்பிட்ட சம்பளம் நான் இப்போது வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்கு இருந்தும் ஏனோ ஒப்புக் கொள்ள தோன்றவில்லை. என் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் கூட கேலி செய்வார்கள். `ஏன் நந்து.. பெரிய வி.ஐ.பி-யை கைக்குள் வைச்சிருக்க.அப்படியே செட்டில் ஆகிடு` என்று அக்கறையாய் அட்வைஸ் செய்தாலும், எனக்கு ஏனோ அவரிடம் உதவி கேட்க மட்டும் இஷ்டமில்லை. கேட்க கூடாது என கொள்கையாகவே வைத்திருந்தேன்.

ஆனால் அடுத்த வாரமே அவரிடம் கையேந்தும் நிலை வருமென எதிர்பார்க்கவில்லை. நான் தங்கியிருக்கும் விடுதியின் வேலைக்காரம்மா சாலை விபத்தில் ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டார். கணவரும் இல்லாத நிலையில் அந்தம்மா மற்றும் அவரின் மகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதானது. ஆதரவற்று நின்றவர்களை எங்கள் விடுதி நிர்வாகம் அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதித்தது. ஆனால் அந்த இளம் பெண்ணின் படிப்புக்கு உதவ முடியாது என்று கைவிரித்து விட்டது. வேலைக்காரம்மாவுக்கு தான் ஊனமானதை விட, மகளை படிக்க வைக்காமல் போன நிலை குறித்து மிக்க வருத்தம். எதோ என் வருமானத்திற்கு அந்த பெண்ணுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தர முடியும். ஆனால் பள்ளிக் கட்டணம் கட்டி முழு செலவையும் ஏற்க முடியாத நிலையில் வேறு வழியின்றி வட்சலா மேடத்தை சரண் அடைந்தேன்.

’நதி, நீ செய்ய நினைக்கிறது நல்ல விசயம்தான். மனமார உன்னை பாராட்டறேன். ஆனா ஒரு பெண் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட எனக்கு இஷ்டம் இல்லை. ஆண் புள்ளைன்னா படிச்சு சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாத்துவாங்க. பெண் புள்ளைங்க அப்படி இல்லையே? என்னிக்கு இருந்தாலும் கல்யாணம் ஆகிப் போறவங்க தானே. அந்தப் பொண்னு எப்படி ஊனமான தன் அம்மாவை கடைசி வரை வெச்சு காப்பாத்தும் சொல்லு? வேண்ணா நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரச் சொல்லு. இல்லை நானே நல்ல இடத்தில் வேலை வாங்கித் தரேன்`` என்று அவர் சொல்ல எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

`ஏன் பெண்ணா இருந்தா படிச்சு குடும்பத்தை காப்பாத்த மாட்டாங்களா? எல்லா பசங்களும் பெத்தவங்களை கடைசி வரைக்கும் பார்க்கறாங்களா என்ன? என்ற என் வாதத்துக்கு அவர் தந்த பதில் இன்னும் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

`இல்லை நதி. பெண்ணுங்களை படிக்க வைக்கிறது வேஸ்ட். சாரிம்மா என்னால அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முடியாது` என்று அவர் திட்டவட்டமாக சொல்ல வெறுப்பின் உச்சத்தில் `சரி நான் வரேன் மேடம்` என்று சொல்ல அந்த வார்த்தை மாற்றத்தில் கண்கள் சுருக்கி பார்த்தார். அதை பொருட்படுத்தாது நான் விடுவிடுவென வந்து விட்டேன்.

அதன் பின் அவர் வீட்டு வாசலை மிதிக்க எனக்கு இஷ்டமில்லை. என் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்தவர், சடாரென உடைந்து போனார். சமூக சேவை செய்வதும், பெண்ணியம் பேசுவதும் பணக்காரர்கள் அணிந்து கொள்ளும் முகமூடி என்பது புரிந்து போக, பேச்சிலேயே காரியம் சாதிப்பவர்கள் என அறிந்தேன். அது வரைக்கும் ஒரு சுயநல வாதியிடம் பழகியிருந்தேனே என்ற வருத்தம் இப்போது வரை இருக்கிறது எனக்கு.



பின்குறிப்பு: சொந்த அனுபவத்தில் உருவான இக்கதை ‘முகமூடி மனிதர்கள் என்ற தலைப்பில் ஆம்பல் பத்திரிக்கையில் வந்துள்ளது..  முடிந்தால் அங்கேயும் வந்து பாருங்கள்.