இந்த காதல் கதைகளில் வருமே, ஒரே நேரத்தில் மனது குளிர்ச்சியாகவும் அதே சமயம் வெப்பமாகவும் இருக்கும் என்று அதுபோலத்தான் எனக்கு கடந்த வாரம் முழுக்க இருந்தது. எல்லாம் ரிஷிநாத்தின் நிலையைப் பார்த்துதான். எதிரியாக இருந்தாலும் நிலை குனித்து நிற்கும் போது நாம் வருத்தப்படுவோம். ஆனால் ரிஷிநாத் எனக்கு உற்ற நண்பன். இருப்பினும் அவன் இன்று இருக்கும் நிலையில் வேடிக்கை பார்த்து சிரிக்கும் உள்ளங்களுள் நானும் ஒருவன்.
ஹலோ, ஹலோ, உடனே என்னைப் பற்றி தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். மிக சுருக்கமாக நடந்த சம்பவங்களை கூறிவிடுகிறேன்.
ராம் கோபால் சர்மாவைத் தெரியுமா? மூன்று முறை தேசிய விருது வாங்கியவரும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யபடும் தமிழருமான இன்றைய முன்னனி சினிமா இயக்குனர். அவருக்கு இந்த கதையில் என்ன கேரக்டர் என்கிறீர்களா? ரங்கசாமியை ரிஷிநாத் ஆக்கிய பெருமைக்குரியவர் அவர்தான். புலிய குளம் கிராமத்தில் துண்டு துக்கடா நாடகங்களில் ‘யெஸ் பாஸ் சொல்லிக் கொண்டிருந்த ரங்கசாமி கெட்டுப் போக பட்டணம் வந்தான். யார் யார் கை, காலையோ பிடித்து, மூன்றாம் பிறை கமலஹாசனைப் போல குரங்கு பல்டி அடித்து ஒன்ரறையனா இயக்குநரிடம் எடுபிடியாக சேர்ந்தான். ஆனால் வெளியில் அவருடைய அடுத்த பட அசிஸ்டண்ட் என்று சொல்லிக் கொள்வான். அந்த இயக்குநரும் நம் ராம் கோபால் சர்மா-வும் பார் நண்பர்கள். பார்க்கும் போதெல்லாம் பல்லிளிக்கும் நம் ரங்க சாமியை மைண்டில் ஒரு ஓரத்தில் வைத்திருந்த ராம்கோபால் சர்மாவுக்கு, அப்பாவி ஒருவன் அநியாயத்தை தட்டிக் கேக்கும் புது கான்செப்ட் கதைக்கு ஒரிஜினாலிட்டி தேவைப்பட்டது. அப்படித்தான் நம் ரங்கசாமி ரிஷிநாத் ஆனான். குருட்டுப் பூனைக்கு கிடைத்த அதிர்ஷடம் என்பார்களே, அப்படித்தான் நம் ரங்கசாமியை சாரி, சாரி ரிஷிநாத்தை சினிமா உலகம் கேலி செய்தது. ஆனால் அவனோ அதைப் பற்றி கவலைப் படாமல் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கார்டு வாங்கினான். கனல் கண்ணனிடம் சண்டைப் பயிற்சி எடுத்தான். ஆனால் என்னதான் கலா மாஸ்டர் ஈஸியான ஸ்டெப் சொல்லிக் குடுத்தாலும் அவனுக்கு டான்ஸ் மட்டும் வராமல் அடம் பிடித்தது. இருப்பினும் நம்ம ரிஷிநாத் படத்தின் ஷீட்டிங் ஆரம்பம் ஆனது.
இங்கேதான் நான் எண்ட்ரி ஆகிறேன். சி.ஏ பாஸ் செய்துவிட்டு கேமரா மேல் கொண்ட காதலால் கோடம்பாக்கத்தை சுற்றிவரும் இளைஞர்களுள் நானும் ஒருவன். உடனே தண்டக் கேஸ் என நினைத்து விடாதீர்கள். பத்திரிக்கைகளில் நீங்கள் பார்த்து ரசிக்கும் சினிமாக்காரங்களின் போட்டோக்கள் நான் எடுப்பதுதான். என்னுடன் படித்த நண்பர்கள் எல்லாம், ஆடிட்டர் என்ற அடைமொழியுடன் மாசத்தில் லட்சத்தை தொடும் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்க, நானோ திரிஷாவையும், நயன் தாராவையும் ’ஸ்மைல் பிளிஸ்’ சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு ஆத்ம திருப்தியிருந்தால் விடாமல் சினிமாக்காரர்களை துரத்துவேன். அப்படித்தான் ரிஷிநாத் அறிமுகம். பொதுவாக புது முகங்களுக்கு முதல் போட்டோ ஷீட்டிங்கில் பயம் இருக்கும். அவர்களின் முதல் அறிமுகம் என் கேமரா கண்களின் வழியில்தான் என்பதால் என்னிடம் அதிகபட்ச மரியாதையோடு நடந்துகொள்வார்கள்.
ஆனால் இந்த சித்தனுக்கும் எத்தனாக ரிஷ்நாத் இருந்தான். கீழே பார்க்கச் சொன்னால் ஒன்றரை கண்ணில் விளித்தான். மெல்லிய புன்னகையை வீசச் சொன்னால் மதன் பாபு மாதிரி விடாமல் சிரித்தான். இரண்டாவது காஸ்டியூம் மாற்றத்திற்கே செர்ரி பழ ஜீஸ் கேட்டான். ` போட்டோ ஷீட்டில் ஒழுங்கா நிற்கக் கூட தெரியல,இவனெல்லாம் என்ன மூஞ்சின்னு சினிமா நடிக்க வந்திட்டான்` என்று வாய்விட்டு கதறிய என் அஸிஸ்டண்டை அடக்கி, திக்கித் திணறி நான் எடுத்த போட்டோக்கள் ரிஷிநாத்தை பாதித்திருக்க வேண்டும். பத்திரிக்கையில் அவன் படம் வந்த அன்றே தாஜில் எனக்கு டிரீட் வைத்து தாஜா செய்தான். வேறென்ன `நண்பேண்டா`ன்னு அவனுடன் நான் கை குழுக்க வேண்டுமாம்.
அடுத்த நாள் காலையில் இருந்து அப்படி ஒரு அன்புத் தொல்லை ஆரம்பமானது எனக்கு. என் காதலி கீர்த்தி கூட நேரம் கிடைக்கும் போதுதான் போன் பண்ணுவாள். இவனோ அரை மணி நேரத்திற்கு ஒருமுறை போன் செஞ்சு, `இப்ப எங்கிருக்க பாஸ், நான் பாலு மகேந்திரா சாரை மரியாதை நிமித்தமா சந்திக்கப் போறேன்`ன்னு தவறாமல் தகவல் தருவான். இதற்கு இடையில் சாப்பிட்டியா, வெயில் எப்படி, இன்னிக்கு என்ன பிளான்னு விடாமல் எஸ்.எம்.எஸ் அனுப்புவான். ஒருவகையில் பார்த்தால் ரிஷிநாத் அப்பாவி என்றுதான் தோன்றும். ஹோட்டலில் பெப்பர் பாட்டில் அழகாக இருந்தால் பேண்ட் பாக்கெட்டில் பதுக்குபவன், சினிமாவின் அதி நாகரிக கலாச்சாரத்தில் ஒட்ட முடியாமல் தவித்தான். அந்த பரிதவிப்பே எனக்கு அவன் மீது அன்பை ஏற்படுத்தியது. ஆனால் சில சமயம் அவனது செயல்கள் எரிச்சலின் உச்சகட்டமாக இருக்கும்.
`மணி ரத்னம் சாரை ஏர்போர்ட்டில் பார்த்தேன், எனக்கு நல்ல போட்டோஜிக்னிக் பேஸ்-ன்னு சொன்னார்` என கூச்சப்படாமல் அவன் சொல்ல, நானோ அது போட்டோஜெனிக் என திருத்தியும் அவன் திருந்துவதாக இல்லை. `பேஸ் புக்கில் தீபிகா-ன்னு ஒரு பொண்ணு ஹாய் சொல்லிருக்குப்பா, ஒருவேளை தீபிகா படுகோனா இருக்குமோ, அடுத்த இந்தி படத்துக்கு அந்த புள்ளையை ஹீரோயினாக புக் பண்ண சொல்லணும்` என்பான். நடுராத்திரி பன்னி்ரெண்டரைக்கு போன் பண்ணி, பாஸ் பி.எம். டபிள்யூ இன்னிக்கு மார்க்கெட் பிரைஸ் என்னன்னு நெட்டில் பாரு. நாளைக்கு காலையில் நம்ம வீட்டு வாசலில் நிக்கணும்` என்று அலப்பறையை கிளப்புவான். இடையிடையே அம்பானிக்கு பொண்னு இருக்கா பாஸ், வீட்டில் அம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நச்சரிக்கிறாங்க` என கண் சிமிட்டுவான். `மச்சான் மலேசியா கலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டிருக்காங்க, என்ன கலரில் டிரஸ் எடுக்கலாம்` என்று ஸ்பென்ஸர் வாசலில் வைத்துக் கேட்பான். அனுஷ்காவுடன் போட்டோ ஷீட்டிங்-யில் இருக்கும் போது, பாஸ், நீலாங்கரையில் பங்களா வாங்கலாம்ன்னு இருக்கேன். நீ எந்த இடத்தை செலக்ட் பண்ணற`ன்னு திரி பத்த வைப்பான். இப்படியாக அவனது பாஸ் அழைப்புகளில் என் டைம் பாஸ் ஆனது.
ராம் கோபால் சர்மாவின் இயக்கம் என்பதால் அவனது படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. புத்தாண்டில் அவனது கொள்கைகளை கேட்டு ஒரு டிவி பேட்டி எடுக்க, மற்றோரு டி.வியோ அவனை கிராமத்து பொங்கல் பற்றி பேசச் சொன்னது. நாட்கள் நகர்ந்து தீபாவளியும் வந்தது. ஆனால் ரிஷிநாத்தின் படம் மட்டும் வெளியாகிற வழியைக் காணோம். மெகா பட்ஜெட், அதிக தியேட்டர் வேண்டும், எங்கே படம் வெளியானால் மார்க்கெட் சரிந்துவிடும் என முன்னனி நடிகர் செய்யும் சதி என கதைகள் இறக்கை கட்டி பறந்தன.
`நம்ம படம் அடுத்த வருஷம் டாப் லிஸ்டில் இருக்க போவுது. எப்படியும் ஐந்நூறு நாட்கள் ஓடும். என் இரண்டாவது படம் வந்துதான் இந்த அனலை குறைக்கணும்`ன்னு பார் தவறாமல் உளறினானே, தவிர வருஷம் ரெண்டாச்சே இன்னும் படம் பெட்டிக்குள்ள தூங்குதே என்று அவன் நினைத்ததாய் தெரியவில்லை. ஒருவழியாய் படம் ரிலிஸாகிற தேதி குறிக்கப்பட்டு, பின் தள்ளப்பட்டு, முன் தள்ளப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது. நண்பனின் படமாச்சே, அதுவும் ராம்கோபால் சர்மா படமாச்சே என நான் படபடப்பில் இருக்க அவனோ, ஆனந்த பவனில் ரசமல்லாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். `நம்ம படம் வரலாறு படைக்கும் பாஸீ, நீ ஏன் பயப்படற, நடிச்சிருக்கறது நான்னு மனசில் வைச்சுக்கோ` என்று அவன் திமிறில் குளற நான் பீதி அடித்து நின்றிருந்தேன்.
ரிஷிநாத் அத்தோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை. படம் ரிலிசாகிற நேரம் அவன் செய்த காரியம் தான் இன்று அவனை சோற்றுக்கு ஜிங்சாங் பாட வைக்கிறது.விசயம் இதுதான். `மக்கா, ராம்கோபால் சர்மா படத்திலேயே முதல் எண்ட்ரி. திரையுலகமே என்னை எதிர்பார்க்குது. அதுக்கு எதாவது செய்யணும் இல்ல, சூப்பரான ஸ்கிரிப்ட் ரெடி. நாமே நடிச்சு நாமே இயக்குறோம். அட எவன் கிட்டேயும் கை நீட்டாம, சொந்த காசுல படம் எடுக்கறோம். எப்பூடி? என அவன் தட்டிவிட்ட மெசெஜில் தாறுமாறான கோபத்தில் திரிந்தார்கள் கோடம்பாக்க வாசிகள்.
ஒருவழியாக புலி வந்தது. ஆனால் அத்தனை சீக்கிரத்தில் பூனை குரலில் பதுங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆமாங்க. ரொம்ப ரொம்ப சுமாரான படத்துக்கு பக்கத்தில் இருந்தது இளைய நாயகன் ரிஷிநாத் நடித்த `மெளன ஆயுதங்கள்`. பத்திரிக்கைகள் கிழி கிழிக்க, மக்களோ, தியேட்டரை புறக்கணித்து அந்த காசில் பிரியாணியும் பேபி கார்னும் வாங்கி சாப்பிட்டார்கள். நம்ம நாயகனும், இன்னும் ஒரு வாரத்தில் படம் பிக்கப் ஆகும் என தம் கட்டிக் கொண்டிருந்தான். ஆனது, ஆம் ஒரே வாரத்தில் படம் தியேட்டரை விட்டு கெட் அவுட் ஆனதில் ஆல் அவுட் ஆனார் ரிஷிநாத்.
நிச்சயமாய் ராம் கோபால் சர்மாவிற்கு இது பேரடி. ஆனால் அவர் வழக்கம் போல புத்தக விழாவில் குத்துவிளக்கு ஏற்றினார். டிவிட்டரில் ஐ ஏம் எ நார்மல் மேன்` என எழுதினார். அடுத்த பட டிஸ்கஷனுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் லண்டன் போனார். இங்கே ரிஷிநாத்தோ பட தயாரிப்பு தந்த வீடும் காரும் போய், பழைய படி தீநகரில் நண்பன் மேன்ஷனில் ஒதுங்க வேண்டிய நிலை. அவன் மீது வஞ்சகம் வைத்திருந்த அனைத்து இயக்குநர்களும், போன் போட்டு துக்கம் விசாரித்ததில் பெரும் கேலியிருந்தது.
ஆனாலும் ரிஷிநாத் திடமாய் நின்றான். தமிழ் சினிமா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்தான். மற்ற நடிகர்கள் தன்னை சதி செய்து கவிழ்த்து விட்டதாக அறிந்தவர் தெரிந்தவரிடம் புலம்பினான். ஆயினும் மீசையில் ஒட்டிய மண்ணை மறைத்தான். கூடவே என்னிடம் பேசுவதையும் தவிர்த்தான். மனசு கேட்காவிட்டாலும் விட்டது தொல்லை என நான் இருக்க,கீர்த்தி தான் என் தலையில் தட்டி ‘ஏண்டா, இத்தனை நாள் அந்த ஆள் கூட சுத்தினே. ஒண்ணா தண்ணி அடிச்சீங்க. படம் பிளாப் ஆகியிருக்கறவருக்கு ஆறுதலா இல்லாம, கழட்டிவிட பார்க்கிறியே’ என்று அட்வைஸ் பண்ணினாள். நானும் நண்பேண்டா என சிலிர்ந்து விசாரித்ததில் கிடைத்த உண்மை, ‘படத்துக்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் ராம் கோபால் சர்மா, கறுப்பை வெள்ளையாக மாற்றவும், அந்த வருட ஆடிட்டிங்-க்கு கணக்கு காட்டவும் தான் சொந்த காசில் படம் எடுத்திருக்கிறார். அதுவும் மண்ணை கவ்வ வேண்டும் என்று அவர் பண்ணிய பிளான் நூற்றுக்கு நூறு சதவீதம் வேலை செய்ததில் பாதிக்கப்பட்டவன் தான் ரிஷிநாத் அதாங்க நம்ம புலிய குளம் ரங்க சாமி.
அறிந்த உண்மையை அவனிடம் சொல்லவும் தயக்கமாக இருந்தது. அதே சமயம் அவன் பண்ணிய பந்தாவுக்கு சரியான அடி என்றும் மனது ‘கெக்கக்கே’ கொட்டியது. இப்படியாக ரிஷிநாத்தின் நிலையைப் பார்த்து, இந்த காதல் கதைகளில் வருமே, ஒரே நேரத்தில் மனது குளிர்ச்சியாகவும் அதே சமயம் வெப்பமாகவும் இருக்கும் என்று அதுபோலத்தான் எனக்கு கடந்த வாரம் முழுக்க இருந்தது.