இந்த பதிவை படித்த பிறகு என் மீது இருக்கும் உங்கள் அபிமானம் மாறிப் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல..
காரணம் முதன் முதலில் நான் தண்ணியடிக்க (அட பைப்பில் இல்லைங்க) காரணமாக இருந்த சம்பவத்தைத்தான் இங்கே..............
இனி கச்சேரி ஆரம்பம்..
சிறுவயதில் அங்கே இங்கே இடம் மாறி, மூன்றாவது படிக்கும் போதுதான் என் மாமா வீட்டில் அடைக்கலம் ஆனேன்.. ஊர் கொத்துக்காரர் என் மாமா.. நான் பிளஸ் டூ படிக்கும் வரை சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.. அப்புறம் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிட்டல் போய் வந்த பிறகு, சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார். ஆனால் அவர் தண்ணியடித்து அதாவது எங்க ஊர் பாஷையில் சொல்வதென்றால் சாராயம் குடித்ததில்லை... அந்த ஏரியா பக்கமே போக மாட்டார். இதனாலேயே எங்க மாமாவுக்கு ரொம்ப மரியாதை.. அவர் வீட்டிலேயே நான் வளர்ந்ததால் எனக்கும் தண்ணியடிப்பவர்களை பிடிக்காது.. பார்க்கவே அறுவருப்பாக இருக்கும்.. (எல்லாம் என் கையில் ஒரு வோட்கா பாட்டில் வரும் வரைதான்).
ஆனால் என் அப்பா அப்படியில்லை.. டீ குடிச்சா நல்லாயிருக்கும்ன்னு அவர் சொன்னாலே தண்ணியடிக்கப் போகிறார்ன்னு அர்த்தம்.(அவரோட கோட் வேட் அது)... தினமும் டீ குடிக்காம அவரால் இருக்க முடியாது... அவர் நட்பு வட்டமும் அப்படித்தான்..
அவரை நான் சந்திக்கும் சமயமெல்லாம் தண்ணியடிப்பதை பார்த்திருக்கிறேன்.. வளர்ந்த பிறகு, அப்பாவுக்கு முட்டை வறுத்து தந்திருக்கிறேன். அவர் தண்ணியடிக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து சிப்ஸீம், சிக்கனும் சாப்பிட்டிருக்கிறேன்..
என் பெரியம்மாவிற்கு மூன்று மகள்கள்.. ஒற்றை பெண்ணான நான் அவர்களை என் சொந்த சகோதிரிகளாகத்தான் நினைப்பேன்.. நான் பிளஸ் ஒன் படிக்கும் போதுஎன் அக்காக்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகியிருந்தால், விடுமுறைக்குச் செல்ல எனக்கு நிறைய வீடுகள் இருந்தன..அப்படி ஒரு மே மாதத்தில் தான் நான் தண்ணியடிக்க கற்றுக் கொண்டது..
அட... எங்க மாமா தண்ணியடிப்பார்... நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.. எங்க வீட்டில் யாரும் அப்படி ஒன்றும் மொடாக் குடியர்கள் இல்லை.. ஒரு லார்ஜ் வரை தான்.. ஒயின் ஷாப்பில் போய் தண்ணியடித்து, அதை தெரிந்தவர்கள் பார்ப்பது, பக்கத்து டேபிள்க்காரனிடம் வீண் சண்டை இதை தவிர்க்க, வீட்டிலேயே தண்ணி அடிப்பதில் தப்பில்லை என்பது எங்கள் குடுமபத்தின் கருத்து.. வீட்டு ஆண்கள் மொத்தமாய் சேர்ந்து மாடியிலோ, தோட்டத்திலோ தண்ணி அடிக்க, பெண்கள் ஆம்லேட்டும், சில்லி சிக்கனும் செய்து தருவார்கள்.. அதை டேஸ்ட் பார்ப்பதுதான் என் வேலை..
போகப் போக எனக்கும் சைட்டிஸ் செய்து தருவது பழகிவிட்டது.. நானே உருவாக்கிய சைட்டிஸ் ஒன்றின் ரெசிபி சொல்லட்டுமா?
பொறி, பெப்பர், சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, இதையெல்லாம் பதமாக வருத்து எடுத்து முட்டை பொரியலுடன் கலந்து சாப்பிட,.. அட சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்...
சரி.. நான் தண்ணியடிக்க நேர்ந்த கதையை சொல்கிறேன்...
தமிழ் வருட பிறப்பிற்கு அடுத்த நாள், எங்க அலுவலகத்தின் சார்பில் மூனாறு டூருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ( டூர் என்றால், எங்களுக்கு பைசா செலவில்லை.. எல்லாமே ஆபீஸ் ஸ்பான்ஸர்) சென்னையில் இருந்து பஸ்ஸில் கிளம்பினோம்.. மொத்தம் 120 பேரில் எட்டு பேர் மட்டுமே பெண்கள். அடுத்த நாள் காலையில் உடுமலைப்பேட்டையில் காலை உணவு சாப்பிட்ட போது, எல்லார் கையிலேயும் ஒரு வெள்ளை பேப்பர் தரப்பட்டது..
அதாவது, அன்று இரவு பயர் கேம்பில் தண்ணியடிக்க யார் யாருக்கு என்ன பிராண்ட் வேண்டும் என்பதை எழுதித் தர வேண்டும்.. எங்க ஆபிஸில் இருக்கும் எல்லா ஆண்களும் தங்களுக்கு பிடித்த பிராண்ட் பெயரை எழுதித் தந்தார்கள்.. எங்கள் பெண்கள் குழுவிடம் மட்டும் அந்த வெள்ளை தாள் தரப்படவில்லை.. இது தெரிந்து நாங்கள் கேட்டதும், வேண்டா வெறுப்பாக எங்களிடம் தர, எல்லா பெண்களும், பெப்சி, கோக் என்று எழுதி தர, நான் மட்டும் ஒரு வோட்கா பாட்டிலும் செவன் அப்-பும் என்று எழுதி தந்தேன்..
அப்போதே எல்லோரும் என்னை கிண்டல் செய்ய, அதென்ன ஆணுக்கு ஒரு நியாயம் பெண்க்கு ஒரு நியாயமா, மத்த ஆண்கள் எழுதி தந்தா மட்டும் எதுவும் சொல்லவில்லை-ன்னு வாயாடிக்கொண்டிருந்தேன்..
மதிய உணவின் போது, எங்க சீனியர் ‘கண்டிப்பா உனக்கு வோட்கா வேண்டுமா’ என்றார்... நிஜமாகவே வேண்டும் என்றேன் நான்..
அன்று பயர் கேம்ப் முடிந்ததும், இரவு உணவு பப்பே முறையில்... எங்க ஆபீஸ் அட்டண்ட் போன் பண்ணி, ‘மேடம் உங்களுக்கு ஒரு பாட்டில் தரச் சொன்னாங்க” என்று பம்மியபடியே, ஒயின் பாட்டில் ஒன்றை மறைத்து மறைத்து குடுத்தார்.. நான் கொஞ்சம் கூட சங்கடப் படாமல், அந்த பாட்டிலை என் டேபிள் மேல் வைத்துவிட்டு சாப்பிட, (அட டின்னர்ங்க) ஒட்டு மொத்த ஆபீஸீம் அதிர்ச்சியாகிப் பார்த்தது .
நானோ கூலாக, மறுபடியும் எங்க அட்டண்டருக்கு போன் பண்ணி, நான் கேட்டது வோட்கா, நீங்க ஏன் ஒயின் குடுத்தீங்க,, என்னை ஏமாத்தறீங்களா, என்று கேட்டேன்.. அவர் மறுபடியும் எங்க ஆபீஸ் சீப்-க்கு தகவல் சொல்ல, என்னை தேடி வந்தது வோட்கா பாட்டில்....
அதற்கும் பூசணிக்கா,(எங்க ஆபீஸில் எனக்கு வைத்த செல்ல்ல்ல்ல்ல பெயர்) வோட்க்கா பாட்டில் வாங்கிடுச்சாம் என்று ஒட்டு மொத்த டூர் டீம்க்கும் தகவல் போய்விட்டது.. பக்கத்தில் இருந்தவர்கள், என்னை அதிர்ச்சியாய் பார்க்க, தொலைவில் இருந்தவர்கள், கேரளா ரோம்மிங்கையும் தாண்டி எனக்கு போன் பண்ணி விசாரித்தார்கள்..
அப்படியே இரவு தூங்குவதற்காக, ஹோட்டலில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்துவிட்டேன்.. நோட் தி பாயிண்ட். அந்த வோட்காவும் ஒயினும் என் ஹேண்ட் பேக்கினுள். அறையில் என்னுடன் வேலை செய்யும் மற்ற இரு பெண்கள்.ஆக களை கட்டியது அரட்டை கச்சேரி.. மறுபடியும் அட்டண்டருக்கு போன் பண்ணி சைட்டிஸ் கேட்டேன்.. அவர் ஒரு சோடா பாட்டிலும் மிக்ஸர் பாக்கெட்டும் தந்தார்.
அதன் பின் பரபரப்பு தொற்றிக் கொண்டது.... குடிக்கலாமா வேண்டாமா, என மனசு குதியாட்டம் போட்டது.. இதற்கு முன் டேஸ்ட் பார்த்தது இல்லை என்றாலும், சின்னதாய் ஒரு ஆர்வம்.. அதற்கு ஆப்பு வைக்க வந்தது ஒரு போன்..
என்னுடன் வேலையை செய்யும் பிரபு அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எல்லோரிடமும் என் அண்ணா என்று அறிமுகம் செய்வேன்.. அவர் போன் பண்ணி தூங்கிட்டியாம்மா என விசாரிக்க,, நான் ஆர்வக் கோளாறில், அண்ணா என்கிட்ட ஒரு ஒயின் பாட்டில் இருக்கு.. உனக்கு தர்றேன் என்று சொன்னதோடு, அப்போதே அட்டண்டர் மூலமாக அவர் அறைக்கு குடுத்து விட்டேன்.
அதன் பிறகு நானும் வோட்கா பாட்டிலும் மட்டுமே..
நான் குடித்தால் உடன் இருக்கும் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.. அதனால் பாட்டிலைப் பார்க்கிறேன்.. யோசிக்கிறேன்.. இந்த கால நேர நகர்தலில் மிக்சரும் சோடா பாட்டிலும் காலி யாகிவிட்டது.. இருப்பினும் அந்த வெள்ளை நிற திர வோட்கா என்னைப் பார்த்து சிரிக்கிறது.. மனசுக்கும் புத்திக்கும் யுத்தம் நடக்கிறது.. குழந்தை குணத்தில் ஒரு குட்டிச்சாத்தான் ஆட்டம் போடுகிறது.. மணி 12யை தாண்டி விட்டது.. ஹோட்டல் அறை முழுவதும் நிசப்பதம்.. என் அறையில் இருந்தவர்களும் தூங்கி விட்டார்கள்.. இதுதான் சமயம் என வோட்கா பாட்டிலை எடுத்து முகர்ந்து பார்த்தேன்....
இனி ஓவர் டூ அடுத்த நாள்..
காலை டிபன் சாப்பிடும் போதே, எல்லோரும் ஆர்வமாய், ’வோட்கா குடிச்சியா’ என்று கேட்க, சிரித்து மட்டும் வைத்தேன்.. நீ தண்ணியடிச்சிருக்க, உன் கண்ணைப் பார்த்தாவே தெரியுது என ஏகப்பட்ட கேள்விகள்.. ஆனால் எதற்கும் பதிலில்லை என்னிடம்.... அன்றிறவு டின்னருடன் டூர் முடியப் போகிறது.. பஸ் ஏறினால் அடுத்த நாள், சென்னையில் கொண்டு வந்து விடுவார்கள்.. எல்லோரும் சாப்பிட்டு முடித்து, டூர்க்கு செண்ட் ஆப் குடுக்க போகிற நேரம், கை தட்டி எல்லோர் கவனத்தையும் திருப்பினேன்..
‘’என் கிட்ட ஒரு வோட்க்கா பாட்டில் இருக்கு.. ஆபீஸ்ல இருந்து எனக்கு தந்துதான் என்றதும் எல்லோரும் என்னை உற்று நோக்கினார்கள்.. அப்ப நீ தண்ணி அடிக்கலையான்னு எல்லா விழிகளும் என்னைக் கேட்டன. ஏனெனில் வாங்கிய எல்லா பிராண்ட் சரக்கும் காலியாக, டூரை முடிவை கொண்டாட அவர்கள் காத்திருந்த சமயம் அது..
நான் வோட்கா பாட்டிலை உயர்த்தி பிடித்தபடி, இதை எனக்கு பிடிச்சவங்களுக்கு தரப் போறேன் என்று சொன்னேன்.. என்னை சைட் அடிக்கும் ஆண்களும் நான் சைட் அடிக்கும் ஆண்களும் ஆர்வமாய் பார்க்க, ரெண்டு நிமிடம் அமைதியாய் இருந்துவிட்டு, இதை என் பிரபு அண்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று என் அண்ணனிடமே அந்த பாட்டிலை தந்துவிட்டேன்..
அப்புறம் டூர் முடிந்து எல்லோரும் ஊருக்கு வந்து விட்டோம்..
இதுதான் மக்கா.. நான் முதன் முதலில் தண்ணியடிச்ச கதை.. சரி.. நீதான் வோட்கா பாட்டிலை மோர்ந்து பார்த்தியேன்னு கேக்கிறீங்களா? அட அது மூடி மேல இருந்த லேபிள் கூட கிழிக்காம முகர்ந்து பார்த்தது..
விடுங்க மக்கா.. யார்கிட்டேவாவது, ‘தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்” பாட்டு இருந்தா தாங்களேன்.. ரிங் டோனா வைக்கணும்..
அட, இப்பெல்லாம் நான் ஹம் பண்ற பாட்டு என்ன தெரியுமா?
போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்..
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான்..
எங்க நீங்களும் பாடுங்க........

